செவ்வாய், மே 24, 2011

அழகர் சாமியின் குதிரை !


வேர்களின் பார்வை.
பாண்டியன்ஜி

மழைபொழிவதற்கும் மககள் மனங்களில் மகிழ்ச்சி குடியேருவதற்கும் இந்த ஊர்த்தெய்வம் அழகர்சாமியே காரணம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள் மல்லாபுரம் மக்கள்.தெய்வம் அழகர்சாமியின் உற்சவ வாகனம் களவாடப்பட்டபோது கதை துவங்குகிறது.அதே சமயம் அடுத்த கிராமத்து கூலிக்காரன் அழகர்சாமியின் உயிர்க்குதிரை திசை தெரியாமல் ஊருக்குள் நுழையும்போது கதை களை கட்டுகிறது.ஊர்த்தெய்வத்தின் உற்சவ வாகனம் கிடைக்க குதிரைக்காரன் அழகர்சாமி குதிரையை மீட்டு நிச்சியம் செய்த பெண்ணை அடைவதே கதை.
சமீபத்த்தில் சிறந்த நாவலுக்கான விருது பெற்ற ஒரு நவீன எழுத்தாளர் தொகுத்த நூறு சிறந்த கதைகளில் இடம் பிடித்த பாஸ்கர் சக்தியின் சிறுகதைதான் அழகர்சாமியின் குதிரை.
கடந்த காலங்களில் ஒரு திரைப்படத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை முன்நிருத்தி சொல்லப்படும் நாவல்களோ அல்லது ஜவ்வாக இழுக்கப்படும் நெடுங்கதைகளோ தேவைப்பட்டிருந்தது.ஆனால் அன்றாட நிகழ்வுகளில் வெடித்து சிதறுகிற ஒவ்வொரு பொறிகள் கூட இப்போது மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய திரைப்படத்துக்கு வேராக இருந்திருக்கிறது.இதுபோன்ற யுக்தியை அறுபதுகளில் நெஞ்சில் ஒர் ஆலயம் மூலம் தமிழுக்கு தொட்டுக்காட்டியவர் இயக்குநர் ஸ்ரீதர் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் மூன்று நிமிடங்களே ஓடக்கூடிய ஒரு வணிக படத்தின் மையக்கருவைக்கூட முழுநீள திரைப்படத்துக்கு எளிதாக பயன்படுத்தி இன்றைய இளைய தலைமுறை சாதனையே நிகழ்த்தியிருக்கிறது.
அந்த வகையில் சின்னத்திரை கதை ஆசிரியரான பாஸ்கர் சக்தியின் கடுகளவுக் கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்ரன்.
ஆரம்பக்காட்சிகள் முழுதும் நகைச்சுவையால் நிரப்பப்பட்டிருந்தாலும் அழகர் சாமியின் வாகனம் மரக்குதிரையாக இருந்ததாலோ என்னவோ பாச்சல் எதுவுமின்றி நகர்ந்துதான் செல்லுகிறது.
உள்ளூர் போலீசுக்கு முன் கைகட்டி வாய்பொத்தி நிற்கும் கிராம முக்கியஸ்தவர்களை இந்த படத்தில்தான் பார்க்கிறோம்.மல்லாபுரத்து மக்கள் அத்தனை அப்பாவிகள் .பாவம்!
திருவிழாவுக்கான தேதி குறித்தவுடன் அந்த குக்கிராமத்தில் ஏற்படுகிற நம்பிக்கையும் சந்தோஷமும் ஊட்டுகின்ற மாற்றங்கள் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கிறது.மஞ்சள் பையுடன் வசூலுக்கு கிளம்பும் கிராமத்து பெரிசுகள் சந்திக்க நேருகிற சங்கடங்கள் எதார்த்தமாக இருந்தாலும் அரங்கில் சிரிப்பொலியை எழுப்புகிறது.மரக்குதிரை காணாமற் போய் உயிருள்ள குதிரை ஊருக்குள் நுழையும்போது அரங்கின் பார்வையாளர்கள் புத்துணர்வு பெற்றதை கண்டேன்.குதிரையைத்தேடிவரும் கூலிக்காரன் அழகர்சாமியின் அறிமுகம் அற்புதம்.அழகர்சாமியாக வரும்அப்புக்குட்டி படம் முழுதும் நெஞ்சில் நிற்கிறார்.. தன்னையும் ஒரு பெண் மணக்கத் தயாராய் இருக்கிறார் என்றறியும் போதும் ,குதிரையை இழந்தபோது நிச்சியிக்கப்பெற்ற மணம் நிச்சியமற்று போகும்போதும் அப்புக்குட்டியின் நடிப்பு நெஞ்சில் நிற்கிறது.
ஞாயத்தை உணர்ந்த உள்ளூர் இளைஞன் ராமகிருஷ்ணன் இரவோடு இரவாக குதிரையுடன் அழகர்சாமியை அனுப்ப முயலும்போது அழகர்சாமி பேசுகிற உரையாடல் அழகர்சாமியை மட்டுமல்ல இயக்குநர் சுசீந்ரனையும் உயரத்துக்கு கொண்டு செல்கிறது.    இந்த படத்தைப் பொறுத்தவரை      பெரும்பாலான கதைப்பாத்திரங்கள் கிராமத்து மக்களிடையே கலந்தே காணப்படுகிறது .ஒவ்வொருவரும் குறைந்த பட்ச பங்கையே ஏற்றிருக்கிறார்கள்.     ஊர் முக்கியஸ்த்தர்களும் உள்ளூர் காவல் நிலையமுமே முன்நிலை வகிக்கிறது.
ராணியாக தோன்றும் சரண்யா மோகன் தேவியாக தோன்றும் அத்வைதா மற்றும் ராமகிருஷ்ணனாக பிரபாகரன் அத்தனைபேருமே      தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.மப்டி போலீசாக வரும் சந்ரனின் பாத்திரம் சலிப்பையே கூட்டுகிறது

பெரும்பாலும் ரகசியமாக பேசுவதை ரகசியமாக பேசுவது போலத்தான் காட்டுவார்கள்.இந்த படத்தைப் பொருத்தவரை பார்வையாளர்களிடமும் ரகசியம் காக்கப்படுகிறது.ஒலியின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் சாதாரண சமயங்களிலேயே ஏறப்பட்டுவிட்டஏகப்பட்ட இடைவெளியைத்தான் குறிப்பிடுகிறேன். ஒருவேளை நான் பார்க்க நேர்ந்த அபிராமி அரங்கத்தின் ரோபோட் தியேட்டரின் குறைபாடோ என்னவோ.பின்னணி இசை வித்தியாசமாய் கேட்கப்பட்டாலும் இயற்கையான ஒலிகள் தவிற்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.இளையராஜாவின் மூன்று பாடல்கள் இனிமையாக இருந்தாலும் மீண்டும் கேட்கும்போதுதான் நினைவில் நிற்குமென்று தோன்றுகிறது.
.கோடாங்கிகளின் கோமாளித்தனங்களும் உயிர்க்குதிரையின் அதிரடிகளும் குழந்தைகளுக்கு குஷியைக் கொடுத்தாலும் படத்துக்கு சிறப்பு சேர்க்கவில்லை.பெரும்பாலான நேரங்களில் உரையாடல்களும் காட்சிகளும் நாடகத்தோற்றத்தையே வெளிப்படுத்துகிறது.பாஸகர் சக்தியின் மூலகதை எழுத்து நடையில் அத்தனை சிறப்பற்று காணப்பட்டாலும் படிக்கும்போது ஏற்படுகிற நிறைவு திரைப்படத்தில் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.
இயக்குநர் சுசீந்ரனின் திரைகதை அமைப்பும் காசி விஸ்வநாதனின் எடிட்டிங்கும் கதையை தொய்வின்றி நகர்த்த உதவவில்லை.
மழை பொழிவதற்கும் வெயில் எரிப்பதற்கும்அழகர் சாமியே காரணம் என்று மக்கள் நம்பினாலும் அவையனைத்தும் முன்னேற்த்துக்கான வெரும் நம்பிக்கைகளே என்பதை படத்தின் ஊரையாடல்கள் உணர்த்துகிறது. உள்ளூர் இளைஞர்களிடம் காணப்படுகிற பகுத்தறிவு சிந்தனைகளையும்
வெளிச்சமிட்டு காட்டுகிறது.இருந்தபோதும் அரங்கை விட்டு வெளியேறும்போது வெருமையே வெளிப்படுகிறது.அப்புக்குட்டியைத்தவிற வேறு எந்த கதை மாந்தரும் நினைவில் நிற்கவில்லை.இதற்கு தலையாய காரணம் வலுவிழந்த திரைக்கதையமைப்பே என்ற கருதுகிறேன்
இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இப்படியொரு கிராமமா ..யார் காதில் பூ சுற்றுகிறீர்கள் என்று கேட்கத் தோன்றினாலும் சமீபத்தில் மதுரை நகரில் கள்ளழகர் வைகையில் இறங்கிய நேரடி ஒளிபரப்பை கண்ட போது வாய் மூடுகிறது.
முழுமையான திரைப்படமாக அமையாவிட்டாலும் குழந்தைகளின் குதுகுலத்துக்காக பார்க்கலாம்!
இடுகை 0058

மூலகதையை இங்கே படிக்கலாம்

அழகர்சாமியின் குதிரை ! -- பாஸ்கர் சக்தி

கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக,அதே ஊரில் வேலை பார்க்கும் காளமேக வாத்தியார் முப்பது வருடங்களாகச் சொல்லி வருகிறார். ஆனால் அவர் மட்டும் மாறுவதாக இல்லை! வேட்டி நுனியை இடக்கையால் தூக்கிப் பிடித்தபடி மூக்குப்பொடியும், ஹவாய்செருப்புமாக ஊருக்குள் திரிகிறார். காலம் அவர் தலைமுடியை மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டது. காளமேகம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தன் பெயருக்கேற்ப தலையும்
கருமேகம் போல் இருக்க வேண்டுமென்று மாதம் பிறந்தால் பக்கத்து டவுனுக்கு
மொபெட்டில் போய் முடிவெட்டி, டை அடித்துத் திரும்பி வருகிறார்.
தாமரைக்குளம் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் தொண்ணூற்று ஒன்பது சதவிகித கிராமங்கள்
காளமேக வாத்தியாரின் மண்டை மாதிரிதான், தங்கள் ஒரிஜினல் நிறத்தை இழந்து
வெளிறிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை இயல்புப்படி மாறவிடாமல், முடிந்தவரை சாயம்
பூசிப் பூசிப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், மாற்றமோ அவ்வப்போது
வெளிவந்து கண்ணாமூச்சி காட்டுகிறது.
தாமரைக்குளத்தின் மையம் ஆலமரத்தடிதான். அழகர்சாமி கோயிலை அடுத்து வளர்ந்திருந்த
ஆலமரத்தை அணைத்தாற்போல் ஒரு மண்டபம் கட்டி, பிள்ளையாரைக் காவலுக்கு
வைத்திருந்தார்கள். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட மண்டபம். தாங்கி நிற்கிற கல்தூண்கள்,
சிவப்புக் காவி பரவிய ஜில்லிடும் தரை.
அதில் நிரந்தரமாக கிடந்த கோலம், சாய்ந்த கோலம், கவிழ்ந்த கோலம் என ஆறேழு
கோலங்களில் ஏழெட்டுப் பேர் அலங்கோலமாகக் கிடப்பார்கள். பெரும்பாலும் ஐம்பதைத்
தாண்டிய கிராமத்தின் சீனியர் சிட்டிசன்கள். ஊரு தலைப்பிரட்டுப் பயல்களுக்கு
பெருசுகள். மரியாதையாகச் சொல்வதானால் வயசாளிகள். அனுபவஸ்தர்கள்.
பிள்ளையார்தான் பாவம்… இந்த வயசாளிகளின் புலம்பல்களையும், வெற்றிலை எச்சில்
துப்பல்களையும், புகையிலைப் பெருமூச்சையும், விவஸ்தையின்றி அவர்கள் பேசும்
கெட்ட வார்த்தைகளையும் பெரிய காதுகளால் கேட்டபடி நொந்து போயிருக்கிறார்.
பிள்ளையாருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் போல அழகர்சாமி. அவருக்குச் சின்னதாகக்
கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் மாதிரி முடங்கிக் கிடக்கிற
அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஐம்பொன்னால் ஆனவர். எனவே ஊர்ப் பெரியகுடியின்
வீட்டு சாமி ரூமில் இருக்கிறார்.
அவரது வாகனமான குதிரை, ஐந்தாறு கிலோமீட்டர் தாண்டி, மலையடிவார மண்டபம் ஒன்றில்
ஏகாந்தமாக இருக்கிறது. சித்திரை மாதத் திருவிழாவுக்கு அழகர்சாமி ஊர்வலமாக
மலையடிவாரம் போய் தனது வாகனத்தில் ஏறி, மலையடிவாரம் தாண்டிய ஒரு காட்டாற்று
மணலில் இறங்கி அருள்வார்.
பிறகு ஊர்வலமாக வந்து, கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூன்று நாட்கள் கோலாகலத் திருவிழா. முதல் நாள் கரகாட்டம், மறுநாள் சமூக -
சரித்திர நாடகம், மூன்றாம் நாள் பாட்டுக் கச்சேரி.
கேளிக்கைகள் குறைவாக இருந்த கிராமங்களில் திருவிழாக்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. கடவுளருக்கு மகிழ்வு தந்து மக்களுக்கு மழை தருபவை.
ஆலமரத்தடி மண்டபத்தில் காளமேக வாத்தியாரது மொபெட் வந்து நின்றபோது, வரப்போகும்
திருவிழா பற்றி மூன்று பேர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க?”
“திருனா நெருங்குதில்ல வாத்யாரே.. இந்த வருசம் எந்த நாடகம் போடறதுன்னுதான்!”
வாத்தியார் சுவாரஸ்யமின்றி, “என்னமோ அம்பது நாடகம் கைல இருக்கிற மாதிரிதான்.
வள்ளித்திருமணம், வீரபாண்டியக் கட்ட பொம்மன், கதம்ப காமிக்… இந்த மூணைத்தான்
திரும்பத் திரும்பப் போடறோம். அழகர்சாமிக்கே ‘போர்’ அடிச்சுப் போயிருக்கும்!”
பேசிக்கொண்டு இருந்த மூவரில் ஒருவர் காரை வீட்டுப் பெருமாள். மற்றவர்,
சின்னச்சாமி. இன்னொருவர் கோவிந்தசாமி. மூவரும் வாத்தியாரை எரிச்சலுடன்
பார்த்தார்கள்.
“ஏன் வாத்யாரே! நீயும் வருசா வருசம் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச்
சொல்லித் தாற! நீ சம்பளம் வாங்கலையா? ஏன்யா இப்படிக் கூறு கெட்டவன் மாதிரி
பேசற…? நீ எல்லாஞ் சொல்லிக் குத்து, இந்தூர்ப் புள்ளைக கரை சேரவா?” என்றார்
கோவிந்தசாமி.
“நான் கிளம்பறேன்!” என்றார் வாத்தியார்.
“அட என்னய்யா… வந்த கையோட போறேங்கறே? கோவிச்சுக்கிட்டியா?”
”அதில்ல.. வேலை கிடக்கு!”
“அடேயப்பா.. எங்களுக்குத் தெரியாம, உனக்கு அப்படி என்னய்யா வேலை? ஊர்லயே
ராசாகணக்கா இருக்கிறது நீதான்யா! மாசமானா கவுர்மென்டு சம்பளம். நிழல்ல
உக்கார்ந்திருந்து வாழ்ற! இதுல, வருசத்துல முக்காவாசி நாளு லீவு!”
அடிக்கடி இவ்வாறான பொறாமைக் குரலை கோவிந்தசாமி வெளிப்படுத்துவார். அவருக்கு
வாத்தியார் மீது லேசானதொரு விரோதம் உண்டு. அவர் வாத்தியார் வேலைக்குப் படிக்கப்
போய், அது பிடிக்காமல் ஓடிவந்து, ஊரில் விவசாயம் பார்த்தவராம். தான் இழந்த
வாய்ப்பைக் கண் முன்னே அனுபவிக்கிற ஜீவனான காளமேகத்தை சமயம்
கிடைக்கும்போதெல்லாம் இடித்துப் பார்ப்பார்.
வாத்தியார், இந்தப் பாமரர்களை ஒரு பார்வை பார்த்தார். அறிவாயுதம் கொண்டு
அவர்களை வீழ்த்த எண்ணி, “வீட்டுக்குப் போனா நாலஞ்சு புக்ஸைப் படிக்கலாம்.
பசங்களுக்குச் சொல்லித் தர்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். இங்க உக்காந்து
வெட்டிக் கதை பேசறதுல என்ன பிரயோஜனம்?”
“வாத்தியார் பேச்சைப் பார்த்தியா? வருசம் பூரா இங்கன உக்காந்து, எங்ககூட
வெட்டுப் புலி, தாயம் ஆடிட்டு, இப்ப திடுதிப்புன்னு மாத்திப் பேசறியே
வாத்தியாரே… புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற ஆளு.. பேச்சு சுத்தம்
வாணாமா?”
இன்றைக்குத் தனக்கு நேரம் சரியில்லை என்ற முடிவுக்கு காளமேகம்
வரவேண்டியதாயிற்று. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்தார்.
”ம்…! சம்சாரிக எல்லாம் இன்னிக்கு ஒரு விதமாகத்தான் பேசறீங்க. படிப்பு
சொல்லிக் குடுக்கறவன் சாமி மாதிரி! அவனை மதிச்சுப் பழகணும். நீங்க பேசறதே இந்த
லட்சணத்துல இருந்தா, நாலைக்கு உங்க புள்ளைங்க வாத்யாரை மதிக்குமா? கலிகாலம்
வந்துருச்சு. மழை பெய்ய மாட்டேங்குதுன்னா, ஏன்? அம்புட்டுப் பேரும் இப்படிக்
குணங்கெட்டு அலையிறதாலதான்!”
மூவரும் வாயடைத்தனர். என்ன இருந்தாலும் படித்தவனின் திறமையே திறமை என்று
காளமேகம் தன்னை மெச்சிக் கொண்டார்.
அவர்களை அவர்களது ரூட்டிலேயே மடக்கியாயிற்று. (மூன்று பேரும் கலி முத்திப்போனது
பற்றியும் மழை பொய்ப்பது பற்றியுமே தினமும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.)
“சரியாச் சொன்னீங்க வாத்யாரே!” அவர் முகத்தில் வருத்தம்.
இரண்டு வருடங்களாக ஊரில் மழை சரியில்லை. இயற்கைக்கு வஞ்சகம், சூது எல்லாம்
இத்தனை வருசமாகக் கிடையாது. அது அப்பாவியாக இருந்தது. இப்போது அதுவும் மனுசனைப்
போல் மாறிவிட்டதோ?
பெருமாளின் நெடிய அனுபவத்தில், ஆடி மாதமானால் மழை தேடிவரும். ஓடைகளில் தண்ணீர்
கரை தொட்டுப் போகும். ஊரைச் சுற்றியிருக்கும் எட்டுக் கண்மாய்களிலும் நீர்
நிறையும். பருத்தியும், நெல்லும், கரும்பும் மோட்டார் வைத்து ஒருபுறம் விவசாயம்
செய்யும் அதே நேரம், காட்டு வெள்ளாமையாக சோளமும், மொச்சையும், எள்ளும்,
கடலையும், தட்டாம்பயிறுமாக.. ஊரில் யாரும் எதற்கு ஏமாந்து நின்றது கிடையாது.
தாகம் எடுத்தால், எந்த வீட்டு வாசலிலும் நின்று மோர் கேட்டு வாங்கிக்
குடிக்கலாம். அது ஒரு காலம். இப்போது அப்படியா இருக்கிறது?
ஊரில் எல்லார் வீட்டிலும், பாலை சொஸைட்டிக்காரனுக்கு விற்கிறார்கள். காலை
நேரத்தில் சைக்கிளில் வந்து, கேன்களில் பீய்ச்சிக்கொண்டு போய்விடுகிறான்.
’மனுசப்பய சனம் எல்லாத்தையும் காசை வெட்டுக் கணக்குப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு!’
என்று தனக்குள் எண்ணிக்கொண்ட பெருமாள், அழகர்சாமியின் கோயிலைப் பார்த்து
வணங்கினார். அவருக்கும் வயது அறுபதாச்சு. ஒவ்வொரு சித்திரை பவுர்ணமியிலும்
அழகர் ஆற்றில் இறங்குவதும், அந்த மூன்று நாட்களுக்குள் மழை பெய்வதும் தப்பாமல்
நடந்து வருகிறது. போன வருசம் அப்படி நடக்கவில்லை. சாமி கோயிலில் இருந்த போதும்
கூட மழை பெய்யவில்லை. கோயில் மறுநுழைவு எல்லாம் முடிந்து, சாமி திரும்பிப் போன
பிறகுதான் கொஞ்சம் மழை பெய்தது.
“என்ன பெருமாளு, பலமான யோசனை?” என்றார் கோவிந்தசாமி.
“இந்த வருசம் அழகர் ஆத்துல இறங்கும்போது, கண்டிப்பா மழை பெய்யணும்டா கோயிந்து.
நான் மனசுல நினைச்சு வச்சிருக்கேன்!”
“அண்ணே, அதுக்கு நீ நினைச்சாப் பத்தாது. அழகர்சாமியில்ல மனசு வைக்கணும்..!”
”இந்த எகடாசிப் பேச்செல்லாம் வேணாம். போன தடவை மழை பெய்யலன்னதும், நாங்க
கமிட்டி கூடிப் பேசி சாமிகிட்ட குறி கேட்டோம். ‘வர்ற வருசம் திருவிழாவைச் சுத்த
பத்தமா, விமரிசையா பண்ணனும்’னு வாக்கு வந்துச்சு. ‘குதிரையைச் செப்பனிடணும்.
வரி வசூலைக் கூட்டிப் போட்டு, ஜாம் ஜாம்னு கொண்டாடணும்’னு முடிவு
பண்ணியிருக்கோம்!”
”அப்படியே…  வருசா வருசம் கூட்டிட்டு வர்ற அந்த கரகாட்டக்காரியையும், வள்ளித்
திருமணம் நாடகசெட்டையும் மாத்திருங்க. போன வருசம் வந்திருந்த முருகனுக்கு வயது
அம்பத்தஞ்சு. வள்ளிக்கு நாப்பத்தேழு!” என்றார் வாத்தியார்.
“ப்ச்…! நக்கல் பண்ணாத வாத்யாரே… எனக்கு சமயத்துல எம்புட்டுச் சங்கடமா
இருக்கு, தெரியுமா? இப்புடியே போயிட்டு இருந்தா, ஊரு என்னத்துக்கு ஆகும்?
தோட்டத்துல தண்ணி சுத்தமா கீழ போயிருச்சு!”
வாத்தியாருக்கும் அது தெரியும். பருவநிலைகள் மாறித்தான் வருகின்றன.
புதுசுபுதுசாகக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒருமுறை டவுனில் ஒரு வேன் வைத்து,
மழை பெய்யாததற்குக் காரணம் மரங்களை வெட்டுவதுதான்’ என்று சொன்னார்கள். அதை
வந்து இங்கே சரியாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. இவர்களிடம் கேலிப் பேச்சு
வாங்கியதுதான் மிச்சம்.
இவர்கள் பேச்சு தொடர்கையில் பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் தன் கூட்டாளி
கனகுவோடு வந்தான். இரண்டு பயல்களும் பெருசுகளை சட்டை பண்ணாமல் வந்து
மண்டபத்தின் வயர், சுவிட்சுபோர்டு மீட்டர்களைப் பார்வையிட்டனர்.
”ஏய்… இத்தினி பெரிய மனுசங்க இருக்கோம்… செருப்புக்காலோட அங்கியும்
இங்கியும் போறியா?”
“மன்னிச்சுக்குங்க நைனா!” என்று செருப்பை அவிழ்த்தான் கனகு.
“என்னடா பண்ணப் போறீங்க?”
“நாளைக்கு இங்கன ஒரு நாடகம் போடலாமின்னு இருக்கோம்!”
பெரியவர்கள் முகம் கறுத்தது. பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் இரணியனுக்குப்
பிறந்த பிரகலாதன் மாதிரி… ஆனால், நேர் எதிர்! கருடனைக் கண்டால் விரட்டி
விரட்டிக் கும்பிடுகிறவர் பெருமாள். சாமியே கும்பிடாத தறுதலைப் பயல்
ராமகிருஷ்ணன். கூடச் சேர்ந்திருக்கிற கனகு பற்றிப் பேசவே வேண்டாம். சரியான
அரைக் கிறுக்கன். ரெண்டு பயல்களும் இப்போதுதான் காலேஜ் முடித்து கைலி கட்டி,
ஊருக்குள் வெட்டிப் பொழுது ஓட்டித் திரிகிறார்கள்.
“ஏண்டா… போன தடவை நாடகம் போடுறோம்னு சொல்லி எங்களை எல்லாம் நக்கல் பண்ணீங்க.
இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறீங்களா? உதை வேணுமா ரெண்டு பேருக்கும்?”
”இல்ல பெரியப்பா… இது விஞ்ஞான விளக்க நாடகம்!”
“அடேங்கப்பா… எங்களுக்குத் தெரியாம என்னடா விளக்கம்?”
”பூமி எப்படி உருவாச்சுன்னு கதையும் பாட்டுமா சொல்லப் போறோம்!”
சின்னச்சாமி மெதுவாகக் கண்காட்டினார். கோவிந்தசாமி காதைக் கடித்தார்.
வாத்தியாரையும் கூப்பிட்டார். “இந்தப் பயலுக சிக்கல் புடிச்சவனுக. எதையாவது
சின்னப் புள்ளைத்தனமா இழுத்து விவகாரமாச்சுன்னா வம்பு. பெருமாள்கிட்ட சொல்லிப்
பயலைத் தட்டி வைக்கணும்!”
“அதாஞ்சரி” என்று தீர்மானம் நிறைவேறியது. மூவரும் அறிவித்தார்கள்….. “ஏலே
இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபா வாங்கிட்டு டவுனுக்குப் போய் சினிமா
பாருங்க. அதை விட்டுட்டு இந்தச் சில்லறைச் சோலி பார்த்துக்கிட்டுத் திரிஞ்சா
நல்லது கிடையாது!”
“என்ன இப்படிச் சொல்றீங்க?”
“மேல பேசாதீங்கடா! ஓடிப்போங்க!”
அவர்கள் இருவரும் தொங்கிப்போன முகத்துடன் தமக்குள் குசுகுசு என்று பேசியபடியே,
இவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனார்கள்.
“என்ன, பயலுகளை ரொம்பக் கடுசாப் பேசிப்புட்டீங்க,” என்றார் பெருமாள்.
“பின்ன என்னண்ணே… வயசுப் பசக.. என்னமாச்சும் ஏழரையைக் கூட்டிப்புட்டா
நமக்குத்தானே பிரச்சனை? சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.. இந்தப் பய நீங்க பெத்த
புள்ளை மாதிரியா இருக்கான்? ஒரு மட்டு மரியாதை கிடையாது. எதற்கெடுத்தாலும்
பதிலுக்குப் பதில் பேசிக்கிட்டு…”
“ப்ச்! என்ன பண்றது கோயிந்து! எனக்குப் புத்திர பாவத்துல சனீஸ்வரன்
இருக்கானாம். அடங்காத புள்ளைதான் பொறக்கும்னு எழுதியிருக்கு…”
அவர்களது பேச்சு, தகப்பன்களுக்கு அடங்காத தறுதலைப் பிள்ளைகள் பற்றி வெகுநேரம்
நடந்தது.
மூணு மணி வாக்கில், பெருமாள் எழுந்தார். வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்.
“திருவிழாவை நல்லா நடத்தணும். குதிரைக்கு பெயிண்ட் அடிக்கணுமில்ல? வாங்க, நாலு
பேருமாப் போயி கதவைத் திறந்து குதிரைய துடைச்சிட்டு, அப்படியே என்ன செலவாகும்னு
வெளில விசாரிச்சிட்டு வந்துடலாம்.”
பெருமாள், சின்னச்சாமி, கோவிந்தசாமி, காளமேகம் நால்வரும் இரண்டு மொபெட்களில்
கிளம்பினார்கள். வாத்தியாரது மொபெட்டின் பின்னால் பெருமாள் இருந்தார். போகையில்
வாத்தியார் கேட்டார்… “எதுக்குப் பெருமாள் திடுதிப்புன்னு கிளம்பினீங்க..
குதிரையைப் பாக்கறதுக்கு?”
பெருமாள் கனமான குரலில் சொன்னார்… “கொஞ்ச நாளா மனசே சரியில்லை… வாத்யாரே!
சாமிக்கும் பூமிக்கும் நம்ம மேல கோவம் வந்திருச்சுடானு நாலு நாள் முன்னாடி எங்க
அம்மா சொல்லுச்சு. நூறு வயசு ஆச்சு அதுக்கு! அது சொன்னது என் மனசில சாமி வாக்கு
மாதிரி பட்டுச்சு. எப்படியாச்சும் இந்த வருசம் நல்லவிதமா ஊர் கூடி, அந்த அழகர்
கால்ல விழுந்து, ‘எங்க தப்பையெல்லாம் மன்னிச்சிரு ஆண்டவா!’ன்னு  சொல்லணும். மழை
பிச்சிக்கிட்டுப் பெய்யணும். அதுவரைக்கும் நான் திங்கிறது சோறு கிடையாது
வாத்யாரே!”
மலையடிவாரத்தை அடைந்தார்கள். மாலை நாலு மணி இருக்கும். சாயங்கால வெயில்
கண்களைக் கூசியது. மலையடிவாரம் ஆதலால் குளிர்ந்த காற்றும், லேசான பச்சிலை
வாசனையும் அடித்தன. பெருமாள் சட்டென்று தோள் துண்டை எடுத்து, இடுப்பில்
அனிச்சையாகக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் போட்டபடி மண்டபத்தை நோக்கி நடந்தார்.
மண்டபத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். துருப்பிடித்த பூட்டு சங்கிலி
ஓரமாகக் கிடக்க, பீடம் காலியாக இருந்தது. ஏழெட்டு பீடித் துண்டுகள் ஓரமாகக்
கிடந்தன. கடவுள் இன்னும் சில தினங்களில் ஏறி வரும் வாகனம் இருந்த இடம்
வெறுமையாக இருந்தது.
அழகர்சாமியின் குதிரையைக் காணவில்லை!
*****
ஊர் அரண்டுபோனது. ஊழிக்காலம் வந்துவிட்டது போன்றதொரு பதற்றம் கிளம்பியிருந்தது.
தாமரைக்குளத்தில் சைக்கிள்கள் திருடு போயிருக்கின்றன. அதெல்லாம் மனித
வாகனங்கள். ஆனால், இப்போது காணாமல் போனதோ கடவுளின் குதிரை! இந்த ஊரையே கட்டிக்
காத்துக் காவல் புரிகிற அழகர்சாமியின் குதிரையைத் திடீரெனக் காணோம் என்றால்…
”இப்ப நடந்திருக்கிறது சாதாரண விஷயமில்ல… கும்பிடற சாமியோட வாகனத்துல கை
வெச்சுட்டானுக.. நாம இத்தனை ஊர் சனம் இருந்தும் சாமியோட ஒத்தைக் குதிரையைப்
பாதுகாக்க முடியலைன்னா எப்படி… அசிங்கமால்ல..?”
ஊர்க்கூட்டத்தில் கோவிந்தசாமி பொருமியபோது ராமகிருஷ்ணன் எழுந்தான். “என்ன
இப்படிப் பேசறீங்க? ஏழு ஊர் சனத்தையும் சாமிதான் பாதுகாக்குதுனு இம்புட்டு நாளா
சொல்லிட்டு இருந்தீங்க” என்றான்.
“வாயில போடுய்யா அவனை. இவனை மாதிரி தலைப்பிரட்டுப் பசங்க பயலுகளாலதான்
இப்படியெல்லாம் நடக்குது” நாலைந்து பேர் ராமகிருஷ்ணனை அடிக்கப் பாய்ந்தனர்.
சிலர் விலக்கினார்கள். சிறிய தள்ளுமுள்ளுக்குப்பின் அமைதி நிலவியது.
“அமைதியா இருங்கப்பா. பிரச்னையாகிப் போச்சு. என்ன பண்ணலாம்னு பேசறதுக்குக் கூடி
இருக்கோம். குழப்பம் பண்ணாதீங்க,” வாத்தியார் அமைதிப்படுத்தினார்.
“ஊரு கெட்டுப்போச்சு. எந்தக் காட்டுக் களவாணிப் பயலோ சாமியையே நடக்க விடணும்னு
யோசனை பண்ணி இப்படிக் கூத்துப் பண்ணிட்டான். இதுக்கு முன்னாடி சாமி வாகனத்துல
யாரும் கை வெக்கத் துணிஞ்சது கிடையாது.”
”என்ன வாத்தியாரே சொல்றீங்க? இதுக்கு முன்னால நம்மூர்ல ஏழெட்டு எருமைமாடுக
காணாமப் போகலையா? எமதர்மராஜனோட வாகனத்தையே ஓட்டிட்டுப் போயி பாலைப்
பீய்ச்சிட்டாங்க. களவாணிப் பயக. அழகருக்குப் பயப்படுவாங்களா?”
”கூறு இல்லாமப் பேசாதய்யா… அதெல்லாம் நிசமான எருமை. இப்ப காணாமப்
போயிருக்கிறதோட மதிப்பென்ன… மரியாதை என்ன?”
தாமரைக்குளத்திலும் மூலத்தைவிட மாதிரிக்குத்தான் மரியாதை. குதிரையை உருவாக்கிய
கண்ணு ஆசாரி கலங்கிய கண்களுடன் முன்னே வந்தார். “என் உசுரைக் குடுத்து செஞ்ச
குதிரைய்யா. அதைத் தொட்டவன் கை மரக்கட்டை மாதிரி ஆகிப்போகும். இது என் தொழில்
மேல சத்தியம்!”
”சாபம் விடறதெல்லாம் சரிப்பா..” என்று பெருமாள் வாய் திறந்தார். ”அடுத்து என்ன
செய்யணும்? அதைப் பத்திப் பேசுவோம். வாத்தியாரே.. விவரமானவரு நீங்க
சொல்லுங்க..”
காளமேகம் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து தொண்டையைச் செருமினார். ”இல்லாத
ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரைங்கிற மாதிரி…”
‘வாத்தியார் தன்னைக்குறித்து ஏன் பேச ஆரம்பிக்கிறார்?’ என்று ராமகிருஷ்ணனும்
கனகுவும் நினைத்தார்கள்.
“…. குதிரையில்லாட்டி பரவாயில்லை. சாமிய மட்டும் வெச்சு இந்த முறை சாமி
கும்பிட வேண்டியதுதான்…”
“யோவ்… குதிரை காணாமப் போனதுக்கு என்ன மேல் நடவடிக்கை?, அப்படிங்கறதை
பேசுவியா அதை விட்டுட்டு…”
வாத்தியார் சுதாரித்தார். “மேல் நடவடிக்கை தான… போலீஸ் கம்ளைண்ட்
குடுத்திருவோம்.”
“சரி, அப்புறம்….?”
”அப்புறம் என்ன, சப்பரம் வெச்சு சாமியத் தூக்க வேண்டியதுதான்.”
“கோட்டி புடிச்ச வாத்தி, குதிரையில்லாம ஊர்வலம் போனா அது அழகரே கிடையாதுய்யா!”
கனகு, ராமகிருஷ்ணன் காதைக் கடித்தான். “பாத்தியாடா! வாகனத்தை வெச்சிதான்
சாமிக்கு மரியாதை. மயில் இருந்தாத்தான் முருகன். குதிரை இருந்தாத்தான் அழகரு…
பனி இல்லாத மார்கழியா.. படை இல்லாத மன்னவரா?” என்று மெதுவாகப் பாடினான்.
“கரெக்ட்தானடா, தொப்பியும் கூலிங்கிளாசும் இல்லாம நாம எம்.ஜி.ஆரை நினைச்சுப்
பாக்க முடியுதா?”
இளைஞர்கள் இருவரும் தமக்குள் பேசிச் சிரிப்பதை கோவிந்தசாமியின் கண்கள்
கவனித்தன. அவர் சின்னசாமியின் காதில் கிசுகிசுத்தார். இருவரும் தமக்குள் ஏதோ
பேசிக்கொண்டார்கள்.
பெருமாள் இறுதி அறிவிப்புக்காக தொண்டையைச் செருமினார்.
“சரி… போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிர வேண்டியது. அதுக்கப்புறம் நல்ல நேரம்
பாத்து குறி கேக்க வேண்டியது. சம்மதந்தானா எல்லாருக்கும்?”
குறி கேட்கிற யோசனை உடனே ஏற்கப்பட்டது.
“ம்.. நம்ம ஊர் கோடாங்கியை வெச்சு அடிச்சுக் கேட்டுரலாமா?”
“அது சரியா வராதுங்க. வெளியூர் ஆளைக் கூட்டிட்டு வாங்க. மலையாளத்து ஆளுன்னா
மையைப் போட்டு கரெக்ட்டா சொல்லிருவான்.”
“அதுவும் சரிதான். உள்ளூர்க் கோடாங்கியை இதுல சம்மந்தப் படுத்தறது பல
வகையிலயுஞ் சிக்கல். அந்தாளு, சரியா சொல்லிட்டாச் சரி. ஒருவேளை தப்பா கிப்பா
சொல்லிட்டான்னா பேரு கெட்டுப் போயிரும்ல.. நாளப்பின்ன பொய் சொல்லிப் பிழைக்க
முடியாதில்ல. என்ன கோடாங்கி?” ஒரு பெரிய மனுஷன் விளையாட்டாகச் சொல்ல, உள்ளூர்
கோடாங்கிக்கு சட்டென்று கோபம் தலைக்கேறி விட்டது. அவர் எழுந்த வேகத்தில் குடுமி
அவிழ்ந்து தொங்கியது. அகலக் குங்குமப் பொட்டும் அவிழ்ந்த கூந்தலுமாக ஆம்பளை
பாஞ்சாலி போல் சூளுரைத்தார்.
”அவமானப்படுத்தறீங்களா என்னைய? ஏய்… இந்த ஊர்லயே எனக்குத்தாண்டா அருள்
இறங்கும்…. பாரு! என்ன நடக்குதுன்னு பாரு. யார் யாரு என்ன ஆகப் போறீங்கனு
பாரு.. எந்தச் சீமையிலிருந்து எந்தக் கொம்பனைக் கொண்டுவந்தாலும் சரி…  என்
துணை இல்லாம வாகனம் கிடைக்காது. எழுதி வெச்சுக்கங்கடா மாப்ளைகளா?” போறேன்
போறேன் என்று ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தையைச் சபையில் உதிர்த்துவிட்டு,
கோடாங்கி வெளியேறினார்.
வருத்தத்திலிருந்த பெருமாளின் முகம் மேலும் கறுத்தது.
“இத பாருங்கப்பா… ஊருக்கே நேரம் சரியில்லாமதான் என்னென்னமோ நடக்குது. சும்மா
இருந்த கோடாங்கிய இப்படி அசிங்கப்படுத்தி விரட்டி விட்டுட்டீங்களே!…
அவங்கவங்க கொஞ்சம் வாய அடக்குங்க ஏன்யா சிக்கலைப் பெருசாக்கிறீங்க?”
”சரிங்கையா, பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிம்பாங்க.. பெருமாளே
சொல்லிட்டீங்க. அப்புறமென்ன?”
”முதல் வேலையா டேசன்ல போய் ஒரு பிராது குடுத்திருவோம். யார் யாரு வர்றீங்க?”
துடிப்பாக இருந்த கூட்டத்தினர் இதற்குத் தயங்கினார்கள். உள்ளூரில் ஆயிரம் வீரம்
பேசினாலும் போலீஸென்றால் உள்ளூர பயம்தான்.
“என்னப்பா சத்தத்தையே காணம்?”
”முக்கியஸ்தர்கள்லாம் போங்க. எதுக்கு கண்டவங்களையும் கூப்பிட்டுக்கிட்டு.”
“ம்.. வாத்தியாரு, நான், சின்னசாமி, கோவிந்தசாமி, கண்ணு ஆசாரி அஞ்சு பேரும்
போறோம்.. என்னா.”
ஊர் தலையாட்டியது.
தலைவிரிக்கோலமாக வந்த கோடாங்கியைப் பார்த்ததும் சரசம்மாளுக்கு எரிச்சல்
மேலிட்டது. “ஏய்.. கூறுகெட்ட மனுசா! எதுக்கு இப்ப அவுத்துப் போட்டுக்கிட்டு
வர்ற? பொம்பளைக பாத்தா கேலி பண்ணிச் சிரிப்பாளுகளா.. மாட்டாளுகளா?”
கோடாங்கிக்குச் சுருக்கென்றது. கீழே பார்த்தார். வேட்டியெல்லாம்
ஒழுங்காய்த்தானிருக்கிறது. ”என்னடி சொல்ற பொச கெட்டவளே எல்லாம் ஒழுங்காய்த்தான
இருக்கு?”
“அடச்சீ.. குடுமியைச் சொன்னேன்யா! பொட்டச்சி கெணக்கா இப்படி
விரிச்சுப்போட்டுட்டு வர்றியே, பெத்த பிள்ளை வளந்து முருங்கை மரம் மாதிரி
நிக்குது…. நீ இன்னும் இப்படி இருக்கியே!”
கோடாங்கி பெரிய மீசையுடன் இருந்தாலும் சரசம்மா அவரைத் தன் வீட்டுக்
கன்னுக்குட்டி அளவுக்குத்தான் மதிக்கிறாள்.
கோடாங்கி தட்டி, பாட்டுப் பாடி, குறி சொல்லி, மந்திரித்து… வசியம், தாயத்து,
பில்லி, ஏவள் என்று பல வகையிலும் ஊரையும், ஊருக்குள் திரியும் அல்பாயுசு
ஆவிகளையும் அச்சுறுத்தி என்ன பயன்? கட்டின மனைவியை வசியம் பண்ணவோ, வாயைக்
கட்டவோ இயலாத மனிதனாகத்தான் கோடாங்கி இருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு பெண்.
அவளுக்கு மாரியம்மா என்று கோடாங்கி பெயர் வைத்தார். ஆனால் சரசம்மா தனது
‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெயரைச் செல்லமாக்கிவிட்டு தேவி
என்றழைக்க அந்தப் பெயர்தான் துலங்கியது என்றாலும் கோடாங்கி மட்டும் அவளை
வீட்டுக்குள் மாரி என்றுதான் அழைத்து வந்தார்.
“மாரி எங்கே?” கோடாங்கி குரலில் எரிச்சல்/
”அவளை எதுக்குத் தேடுறீங்க?”
”வெந்நீர் வெக்கச் சொல்லணும். குளிச்சுட்டு பூஜை கட்டப்போறேன்… காட்டேரி
பூஜை!”
“அது எதுக்கு?”
“என்னை இளக்காரமாப் பேசுனவங்களை நாக்குத்தள்ள வைக்கப் போறேன். சபையில் வெச்சுக்
கிண்டல் பண்ணிப்புட்டானுக.. அவனுக நாக்கைச் சுருட்டி உள்ள இழுக்கிற மாதிரி ஒரு
பூஜை போடப் போறேன். காட்டேரித் தாயே! அம்மா! காட்டேரி…” கோடாங்கியின் உடல்
வியர்த்தது. மூச்சு உஸ்ஸென்று பாம்பின் சீறலாக வெளிவந்தது. சரசம்மா
வெகுநிதானமாக கோடாங்கியை ஏற இறங்கப் பார்த்தாள்.
”சுடுதண்ணியெல்லாம் வைக்க முடியாது. உனக்கு சுடுதண்ணி வெச்சே விறகெல்லாம்
தீந்து போகுது. அப்புறம் சோறு வடிக்கிறது எப்படி? பேசாம பச்சத்தண்ணியில குளி!”
“வெந்நீர்லதான் குளிக்கணும்… நீ போட்டுத் தரவேணாம். எங்க என் பொண்ணு?
அதுகிட்ட சொன்னா போட்டுக்குடுக்கும். பூஜை கட்டணும்னு சொல்றேன்ல?”
“குடுப்பா குடுப்பா.. எதை வெச்சு போட்டுக் குடுப்பா? இதோ பாரு. நீ பூஜை கட்டு,
கூட இன்னொரு பொண்டாட்டியும் வேணா கட்டு. சுடுதண்ணி வேணும்னு என் தாலிய மட்டும்
அறுக்காத. விறகு ஒடிச்சே என் இடுப்பு ஒடிஞ்சு போச்சு!”
“மாரி எங்கே? அதைச் சொல்லு.”
“அவ எங்கயோ தோட்டத்துக்குப் போனா, கீரை பிடுங்கிட்டு வர்றதுக்கு…”
வேறு வழியின்றி கோடாங்கி பச்சைத் தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றினார். அவர்
சர்வீஸில் பார்த்த எல்லா காத்து கருப்புகளையும்விட கடுமையான பெண் யாரென்றால்,
அது சரசம்மாதான்!
கோடாங்கியின் மனதில் சரசம்மா, காட்டேரி, சில குறளிப் பேய்கள் மற்றும் சில
காத்துக் கருப்புகள் ஓடிக்கொண்டு இருந்த அதே நேரத்தில், ஊரைத்தாண்டி
விலகியிருந்த குளத்தின் கரையில் ஒரு சைக்கிள் போய்க்கொண்டு இருக்கிறது.
பெருமாளின் மகனான ராமகிருஷ்ணன் ஓட்டுகிறான். முன்புற பாரில், மாரி
அமர்ந்திருக்கிறாள்.
காதல் சிட்டுகள் சைக்கிளில் விரைந்துபோய் தோப்புக்குள் மறைகின்றனர். ஆள்
காட்டிப் பறவைகளான கனகுவும், சீரங்கனும் தோப்பின் வேலியோரம் மாங்காய்ப்
பிஞ்சுகளைப் பொறுக்கித் தின்றபடி காவல் இருக்கின்றனர். ஊரில் என்ன களேபரங்கள்
இருந்தாலும் இப்படியாகப்பட்ட விஷயங்கள் ஒருபுறம் சத்தம் இல்லாமல்
நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
போலீஸ் ஸ்டேஷன், டவுனில் நடுநாயகமாக அமைந்து இருந்தது. ஸ்டேஷனுக்குப் போகணும்
என்றாலே ஒரு பயம் சூழ்ந்து நா வறண்டுவிடுகிறது. ஐந்து பேரும் ஸ்டேஷனுக்குள்
நுழைந்தபோது ஏட்டய்யா மட்டும் இருந்தார்.
“வணக்கங்க…”
“ம்.. வாங்க. என்னா சமாசாரம்?”
“தாமரைக்குளத்திலிருந்து வர்றோமுங்க… ஒரு பிராது குடுக்கணும்…”
“என்ன… பிராது… எதுவும் கொலை பழி ஆயிப்போச்சா?”
“சேச்சே, அதெல்லாமில்லீங்க.. குதிரை காணாமப்போயிருச்சுங்க!”
ஏட்டு மேலும் கீழுமாகப் பார்த்தார். “ஏன்யா… இதென்ன போலீஸ் ஸ்டேஷனா, மாட்டுத்
தாவணியா? குதிரை காணம்னா தேடிப்பாருங்க. கழுத எங்கயாவது மேஞ்சுக்கிட்டு
இருக்கும். இங்க எதுக்கய்யா வந்தீங்க?” அதட்டினார் ஏட்டய்யா.
இவர்களுக்கு உதறியது. என்னதான் உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் என்றாலும் காக்கி
உடைக்கென்று ஒரு கலவரம் இருக்கிறது.
“ஏதாச்சும் அடிதடி வெட்டுக் குத்துன்னா பரவாயில்ல. ரூவா, நகை திருடுபோனா பரவா
இல்ல.. குதிரை காணாமப் போச்சு ஆட்டுக்குட்டி காணாமப் போச்சுனு இங்க வந்தா
எப்படி…? எங்கள என்ன அதிகாரினு நினச்சியா? ஆடு மேய்க்கிறவன்னு நினச்சியா?”
இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏட்டய்யா இடைமறிக்காமல் இருந்தால்
ஒட்டுமொத்த விவரத்தையும் கொட்டிவிடலாம். நெஞ்சுக்குள் இருக்கிறது. கோர்வையாக
வரவில்லை.
“யாருதுய்யா குதிரை?”
“அழகர்சாமியோடதுங்க!”
“யாருய்யா உங்கள்ல அழகர்சாமி?” இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
”உங்கள்ல யாருமே அழகர்சாமி இல்லையா… முழிக்கறீங்க?”
“இல்லீங்க.”
“பறிகுடுத்த ஆளு வராம நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்க?”
காளமேகம் சுதாரித்து, “சார்… அழகர்சாமிங்கறது சாமிங்க! சித்திரைத்
திருவிழாவுல வருவாரே.. அவருங்க.”
ஏட்டய்யா எரிச்சலுடன் எழுந்து முறைத்தபடி காளமேகத்தின் அருகே வந்தார்.
“ஊதுய்யா!”
காளமேகம் திகைப்பாய்… “எதுக்குங்க சார்?”
“ஊது சொல்றேன்.. வரவர ஸ்டேஷனுக்கு வர்றோம்ங்கிற மட்டுமரியாதையில்லாம தண்ணி
அடிச்சிட்டா வர்றீங்க.. ஊது முதல்ல…!” என்றபடி மூஞ்சியை வாத்தியாருக்கு நேரே
நீட்டினார்.
வேறுவழியின்றி வாத்தியார் ஊதினார். ஊதச் சொன்னது பெருந்தவறென்று ஏட்டய்யா
உணர்ந்தார். மூக்குப்பொடி வாசம், ஒரு விதமாக அடித்து வயிற்றைக் குமட்டியது.
“எனக்குக் குடிக்கிற பழக்கம் இல்லீங்கய்யா.”
“எழவெடுத்த மனுசா.. குடிச்சவன்கிட்டகூட இம்புட்டு வீச்சம் அடிக்காது. ச்சேய்!”
அப்போது எஸ்.ஐ. உள்ளே நுழைந்தார். “என்னய்யா விஷயம்?”
“அய்யா.. குதிரையக் காணோம்னு பிராது குடுக்க வந்திருக்காங்கய்யா,
தாமரைக்குளத்திலிருந்து.”
எஸ்.ஐ. சிரித்தார். “ஏங்க.. தேடிப் பாக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாமா
ஸ்டேஷனுக்கு வர்றது?”
பெருமாள் தீர்மானித்தார். தடுமாறாமல் பேசும் உறுதியுடன் துவங்கினார். ”அய்யா,
காணாமப் போனது குதிரையில்லீங்க!”
“யோவ்! இப்பதான சொன்ன. அதுக்குள்ள மாத்திப் பேசற?” ஏட்டய்யா பதறினார்.
“இல்லீங்கய்யா, குதிரைதான் காணாமப் போனது. ஆனா, நிஜக் குதிரை இல்லீங்க. குதிரை
வாகனம். அழகர்சாமியோடது. ஊருக்கு வெளியே மலையடிவார மண்டபத்துல இருந்துச்சு.
அதைத்தாங்க காணோம்.”
ஏட்டய்யா, ‘அடடா, சாமி சமாசாரம்! இது தெரியாமப் பேசிட்டோமே..’ என்று மனசுக்குள்
பதறியபடியே, “ஏன்யா… முதல்லயே விவரமா சொல்ல வேணாமா?” என்றார்.
எஸ்.ஐ. யோசித்து, “ம்… சரி, என்ன நடந்ததுன்னு ஒரு புகார் மனு எழுதிக்
குடுங்க!” என்று சொல்ல, காளமேகம் வாத்தியார் அமர்ந்து மனு எழுதினார்.
எஸ்.ஐ. சற்று தீவிரமாக யோசித்தவர் மெதுவாகக் கேட்டார். “ஏங்க… குதிரை
திருடுதான் போயிருக்கும்னு நினைக்கிறீங்களா?”
”ஆமாங்க! ரெண்டாள் சேர்ந்துதான் அதை நகர்த்தவே முடியும். நல்ல வெயிட்டான
குதிரை. கெட்டியான மரத்துல செஞ்சது.” என்றார் கண்ணு ஆசாரி.
“ம்.. அது சரி! அதை எதுக்குய்யா ஒருத்தன் திருடணும்! அதை வெச்சு என்ன பண்ண
முடியும். என்ன பிரயோஜனம் அதனால!”
ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மைதான்.. மரத்தாலான குதிரையால்
அந்த அழகர்சாமிக்கு மட்டும்தான் பிரயோஜனம். மனிதர்களுக்கு அதனால் ஆகக்கூடிய
பயன் என்ன?
“உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?”
வீராச்சாமியும் சின்னச்சாமியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வீராச்சாமி
பெருமாளைப் பார்த்தார்.
“எங்க மனசுல ஒண்ணு இருக்கு பெருமாளு.. அதை அய்யாகிட்ட சொல்லலாமா.”
”தாராளமா சொல்லுங்க.. இதென்ன கேள்வி?”
“சரி.. பொது விஷயம்.. அதனால நான் தாட்சணியம் பார்க்காமச் சொல்றேன். இதோ
இருக்காரே பெருமாளு… இவர் மகன் இராமகிருஷ்ணன் மேலயும், அவன் கூட்டாளிக
மேலயும் சந்தேகம் இருக்குங்க..”
பெருமாள் திடுக்கிட்டார். ’தான் மனுநீதிச் சோழனாக மாற வேண்டிவருமோ?’
சற்று நேரம் அமைதி நிலவியது. கண்ணு ஆசாரி தொண்டையைச் செருமினார். “சீச்சீ..
இருக்காதுங்க. எங்க ஊர்ப் பயலுக இந்தக் காரியத்தைச் செய்யாதுங்க. அருமையான
மரத்துல செஞ்ச குதுர.. வந்த விலைக்கு வித்துக் காசு பார்த்துரலாம்னு எவனோ
களவாணிப் பய செஞ்ச காரியமா இருக்கும்?”
பெருமாளுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. நண்பர்கள் சுமத்திய பாவத்திலிருந்து
கண்ணு ஆசாரி அவரை ரட்சித்துவிட, ஆசாரியை விசுவாசத்துடன் நோக்கினார் பெருமாள்.
எஸ்.ஐ. எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னார். “ரூமுக்குள்ள
இருக்கேன். ஒவ்வொருத்தரா உள்ள தனித்தனியா வரணும். வந்து அவங்க மனசுல உள்ளதை,
யாரு மேல சந்தேகம் என்ன விவரம்கிறதை தெளிவா சொல்லணும். என்ன?”
”சரிங்க சார்!”
எஸ்.ஐ. அறைக்குள் சென்று அமர்ந்தார்.
ஐந்து பேரும் தனித்தனியே உள்ளே போய் பேசிவிட்டு வந்தனர். தாமரைக்
குளத்துக்காரர்களிடம் தான் இந்த யுக்தியைப் பயன்படுத்தியது அசல்
பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஐ. புரிந்து கொண்டார். ஐவரின் கற்பனைவளமும் எல்லை
மீறியதாக இருந்தது. அது உள்ளூர் பெருமாள்  மகனில் துவங்கி, பக்கத்து ஊர்,
பக்கத்து மாநிலம் வரை  விரிந்தது. எஸ். ஐ.க்கு தலை சுற்றியது. ஏட்டையாவை
அழைத்தார்.
”அய்யா… ஏதும் க்ளூ கிடைச்சதுங்களா?”
“நீ வேற… அவனுக உன்னையும், என்னையும் தவிர எல்லாரைப் பத்தியும் சந்தேகமாச்
சொல்றாங்க!”
“அப்படிங்களா”
“யோவ் ..இதுல என்ன சிக்கல்னா இந்தப் பிரச்சினைய வச்சு இவங்களுக்கும் பக்கத்து
ஊர்க்காரங்களுக்கும் சண்டை வரதுக்கும் சான்ஸ் இருக்கு,பொதுப் பிரச்சினை,கலவரம்
அப்படி இப்படின்னு சிக்கலாயிரக் கூடாது,அதனால நீயும் வேலுவும் பொய் அங்க டூட்டி
பாருங்க,ஊர்லையே இருக்கணும்,அது தவிர மப்டி யில் ஒரு ஆளை அங்க
நிப்பாட்டனும்,அப்பத்தான் ஏதாச்சும்  துப்பு கிடைக்கும்!”
“சரிங்கய்யா.. நம்ம கான்ஸ்டபிள் கைலாசத்துக்கு அந்த ஊர்லதாங்க பொண்ணு
எடுத்திருக்கு. நம்ம சந்திரனை அந்த வீட்டுக்கு விருந்தாளி மாதிரி அனுப்பிரலாம்.
யாருக்கும் சந்தேகம் வராதுங்கய்யா!”
அடுத்த அரைமணி நேரத்தில் ஏட்டும், கான்ஸ்டபிள் வேலுவும் உடுப்புடன் ஆலமரத்தடி
மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள். மஃப்டி போலீஸ் சந்திரம் மஞ்சள் பையுடன்
விருந்தாளி போல வந்து ஊருக்குள் இறங்கினார்.
குறி கேட்க ஊர்சனம் கூடி இருந்தது. வெளியூர் ஆள் மண்டபத்தில் அமர்ந்திருந்தா.
அவன் முன்னால் வெள்ளியால் செய்யப்பட்ட நாகமும், கறுப்பு நிற வழவழப்பான கல்
ஒன்றும் இருந்தன. தவிர, இடதுபுறம் நரியின் தலை ஒன்று வைத்திருந்தான்.
சிறுவர்கள் அதனை ஆர்வமும் குறுகுறுப்புமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
உள்ளூர்  கோடாங்கி அவர் வீட்டுத் திண்ணையில், கைவிடப்பட்ட அநாதையாக
உட்கார்ந்திருந்தார். சரசம்மாவும் மாரியும் கிளம்புகிற அவசரத்தில் இருந்தனர்.
சரசம்மா இரண்டாம் முறையாக கண்ணாடி பார்க்க, ஏற்கனவே ஃபுல் மேக்கப்பில் இருந்த
மாரி மீண்டும் ஒரு முறை கண்ணாடியை தாயிடமிருந்து பிடுங்கி ஸ்டிக்கர் பொட்டைச்
சரியாக ஒட்டினாள்.
கோடாங்கி குமுறினார். “ஏலா! இந்த ஊர்ப் பயக என்னைய மதிக்காம வெளியூர்ல இருந்து
குறிகாரனைக் கூட்டிட்டு வந்திருக்காங்களேனு நான் வயிறெரிஞ்சு
உக்கார்ந்திருக்கேன்.. நீயும் உன் மகளும் சிங்காரிச்சிக்கிட்டு அங்கன
போறிங்களா?”
”ஏன் , போனா என்ன? உன்னைய யாரு திண்ணைய தேய்ச்சுக்கிட்டு உக்காரச் சொன்னது?
நீயும் வந்து உன்னையொத்தவன் எப்படி குறி சொல்றான்னு  பாத்துத் தெரிஞ்சுக்க!”
“ஏய்… எதைப் பத்தி வேணாப் பேசு.. எந்தொழிலைப் பத்தி தாழ்ச்சியாப் பேசாதே!
இந்தக் காலத்துல பகட்டுக்குத்தாண்டி மதிப்பு. என்னை மாதிரி தொழில்காரனை
இருபத்தேழு ஜில்லாவுலயும் பாக்க முடியாது.. தெரிஞ்சுக்க!”
மாரி தந்தையைப் பரிதாபத்துடன் பார்த்தாள். இது அவரது வழக்கமான வசனம்.
இருபத்தேழு ஜில்லா என்று வருசக்கணக்காக சொல்லிக்க்கொண்டு இருக்கிறார், அது
தப்பான தகவல் என்று தெரியாமலேயே! அவர் குறி சொல்லும் லட்சணமும் இப்படித் தான்
என்று ஊர் மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.
”உங்காத்தாதான் புத்தி கெட்டுப் போறா, நீயுமா மாரி? என் மகளா இருந்துக்கிட்டு
அசலூர்க்காரன் என்ன சொல்றான்னு கேக்கப் போலாமா?”
மாரி திரைப்படங்களின் பாதிப்பில். “உங்களை மாதிரி உள்ளவங்க மனசுல போட்டி
இருக்கலாம். பொறாமை இருக்கக்கூடாதுப்பா” என்றாள். அஜீத்திடமோ, விஜய்யிடமோ
இதைச்  சொல்கிற பாவனையில்!
“என்னமோ பண்ணித் தொலைங்க” என்று பெருமூச்சு விட்டார் கோடாங்கி. சரசம்மாவும்,
மாரியும் கிளம்பினார்கள்.
கூட்டத்தில் மாரியின் கண்கள் ராமகிருஷ்ணனைத் தேடின. கனகு, சீரங்கனுடன் ஓரமாக
நின்று சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு மாரியைக் கண்டதும் முகம்
பிரகாசமடைந்தது.
“ம்… சொல்லுங்க! இப்ப என்ன தெரியணும்?” என்றான் குறிகாரன். தமிழ் சுத்தமாக
இருந்தது.
“சாமிக்கு மலையாளம்தானா?”
”ஏன் கேக்கிற?”
“பேச்சைப் பாத்தா மலையாளம் மாதிரி தெரியலையே?”
“நான் எல்லா ஊருக்கும் போறவன். எல்லாப் பேச்சும் எம் பேச்சுதான். எல்லா ஊர்த்
தண்ணியும் என் தண்ணிதான்.. புரியுதா?” என்றவனனின் கண்கள் சிவந்திருந்தன.
இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். பாட்டில் பத்திரமாயிருந்தது.
கனகு சொன்னான். “ராமகிருஷ்ணா, இவன் நிச்சயம் மலையாளத்து மந்திரவாதி கிடையாது.
சரியான ஃப்ராடு மாதிரி இருக்கான். இவனைக் கூப்பிட்டு வந்த ஆள் யாரு?”
“முனியாண்டிதான் கூப்பிடப் போனாப்ல” என்றான் சீரங்கன்.
“அப்ப சரிதான்! வாங்கிட்டுப் போன காசுல கொஞ்சத்தை ஒதுக்கிட்டு சீப் ரேட்ல
இவனைக் கூட்டிட்டு வந்துட்டான் போலருக்கு!”
குறிகாரன் கண்ணை மூடி தியானித்து, பிறகு கண் திறந்தான்.
“சொல்லுங்க… என்ன தெரியணும்?”
“வாகனம் போன திசை… வழி தெரியணும். சாமி குத்தம் எதுவும் வந்திரக்கூடாது.
ஏற்கனவே ஊர்ல மழைத் தண்ணி குறைஞ்சு போயி சம்சாரியெல்லாம் சிரமப்படறோம்ங்க!”
“ம்…….” மறுபடி கண்களை மூடினான்.. திறந்தான்.
“வாகனம் காணாமப் போனது சாமியோட விளையாட்டு! நீங்க சரியானபடி சாமியை நினைக்கலை.
அதான் இப்ப இப்படி ஒரு அறிகுறியைக் காமிச்சிருக்கு!”
பெருமாள் பதறினார், “அய்யோ! இல்லீங்களே… இந்த வருசம் சிறப்பா
கொண்டாடனும்னுதான கமிட்டி கூடி முடிவு பண்ணோம்.. அதுக்குள்ளாற.”
”ப்ச்! நடுவுல பேசாதீங்க. திருஷ்டிக்கு நடுவுல ஊடாடக் கூடாது. யாருப்பா அது?
சத்தம் போடாதீங்க!”
சுற்றும் முற்றும் பார்த்த குறிகாரன் ஒரு நபரை அழைத்தான். “வா இப்படி!”
அழைக்கப்பட்ட நபர் மஃப்டியில் இருந்த போலீஸான சந்திரன்.
”சாமி.. இவர் வெளியூரு விருந்தாளியா வந்தவரு!”
“பரவாயில்லை…. அது ரொம்ப விசேஷமாச்சே! இப்படி வந்து எதிரே உக்காரு!”
சந்திரன் குறிகாரன் எதிரே வந்து அமர்ந்தார். குறிகாரன் தனது பக்கத்திலிருந்த
ஒரு பெட்டியைத் திறந்தான். “பயப்படாத! இது தலைச்சன் புள்ளை மண்டை ஓடு. இதை
உள்ளங்கைல அமுத்தினாப்ல புடிச்சுக்க!”
துணியில் சுற்றப் பட்டிருந்த ஒரு சிறிய உருண்டையான வஸ்துவைக் கொடுத்தான்.
சந்திரனுக்கு உதறல் எடுத்தது.
“ம்.. புடி! கண்ணை மூடு!”
சந்திரன் கை நடுங்க அதைப் ப்டித்துக் கொள்வதை ஏட்டும், மற்றொரு போலீஸான
வேலுவும் ஆர்வத்துடன் பார்த்தனர். ஏட்டு அவனிடம் கிசுகிசுத்தார். “பாருய்யா!
நம்ம டிபார்ட்மெண்ட் எல்லாவிதத்துலயும் சிறப்பா பணியாற்றுது பாத்தியா…”
”ஆமாங்கய்யா!”
குறிகாரன் இடி போல முழங்கும் குரலில் கேட்டான். “கண்ணுக்குள்ள என்னா தெரியுது?”
“இருட்டா இருக்கு! அங்கங்க சிகப்பா தெரியுது!”
“ம்…. அதைத் தவிர, என்ன தெரியுது? மஞ்சளா ஒண்ணு அசையுதா?”
“ம்ஹூம்!”
“நல்லாப் பாரு!”
”வெள்ளையாத்தாங்க ஏதோ தெரியுது!”
“ஆஹா!” என்றான் குறிகாரன். “அது அசையுதா?”
அவன் முகம் மலர்ந்தது “உத்தரவு கிடைச்சிடுச்சு.. ம்… உத்தரவு
கிடைச்சிடுச்சு!” என்றபடியே கண்களை மூடி, வாய்க்குள் ஆவேசமாக மந்திரங்களை
முணுமுணுத்தான். உடல் குலுங்கியது.
ஊர் சனம் வாயடைத்துப்போய் வெளியூர் கதாநாயகனைப் பார்த்தது. பருத்த தொந்தியும்,
மார்பு நிறைய விபூதியும், நெற்றியில் ரத்தத் திலகமுமாய் இருந்தான். அவன் காதில்
இருந்த கடுக்கன் கூடியிருந்த அத்தனை பெண்களின் கவனத்தையும் ஈர்த்தது. கையில்
தங்க மோதிரங்கள் செம்புக்காப்பு.
கண்ணைத் திறக்காமலேயே ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சந்திரனிடம் நீட்டினான்
குறிகாரன்.
“பத்துக்குள்ள நம்பர் ஒண்ணூ சொல்லு!”
“ஒண்ணு” என்றார் சந்திரன்.
“ம்… சரி, மேலே எறி இதை!”
சந்திரன் மேலே எறிந்த எலுமிச்சம் பழம் ஓர் இடத்தில் விழுந்து உருண்டோடியது.
”ம்.. திசை தெரிஞ்சுபோச்சு!” என்றபடி பெருமாளைப் பார்த்தான்.
“அப்படிங்களா… எப்படிங்க?”
“எலுமிச்சம் பழம் கீழே விழுந்து மேற்கு முகமா உருண்டுச்சில்ல… மேற்குத்
திசையிலதான் குதிரை இருக்குது.”
“ஓஹோ!”
“இந்தாளு கண்ணுக்குள்ள வெள்ளையா ஒரு ரூபம் அசைஞ்சதுனு சொல்லலே.. அது என்னது?
குதிரை.. வெள்ளைக் குதிரை!”
”அப்படிங்களா!” எல்லோரும் பிரமிப்பாகப் பார்த்தார்கள்.
“நம்பர் கேட்டப்ப இந்தாளு ஒண்ணுனு சொன்னான்ல! ஒரே நாள்ல தகவல் வரும். இல்லை
குதிரையே வந்தாலும் வரும். ஏன்னா, மனசுக்குள்ளயே ஒரு மந்திரத்தை சொல்லி
வருந்தியிருக்கேன்.  உங்க பிரச்சனை முடிஞ்சாச்சு!” கை நிறைய குங்குமத்தை அள்ளி
சந்திரனின் நெற்றியில் அப்பினான் குறிகாரன்.
“நானும் பல இடங்கள்ல பார்த்திருக்கேன். கேட்டவுடனே அருள் இறங்கி துப்பு சொன்னது
நீதான்! என் வாக்குல சக்தி இருக்கா. நாக்குல சூலி இருக்கா. இன்னிலேர்ந்து
இந்தாளோட கடாச்சம் உனக்குப் பரிபூரணமா இருக்கு!”
மஃப்டி சந்திரனின் வயிற்றுக்குள் பேரலைகள் புரண்டன.. ”சாமி!” அவர் நாக்கு
குழறியது. அவர் தலையில் கொஞ்சம் நீர் எடுத்துத் தெளித்தான் குறிகாரன்.
“இந்த செகண்டுலியிருந்து நீ ஆத்தாளோட புள்ள. எப்ப வேணா அவ உன்கிட்ட வருவா. உன்
மூலமா ஜனங்களுக்கு அருள் வாக்கு தருவா! போ!”
வரம் போலவும் , சாபம் போலவும் குறிகாரன் சொல்ல, சந்திரன் உடல் சிலிர்த்து
அப்படியே அமர்ந்திருந்தார். கூட்டம் கலைந்தது. குறிகாரனை அழைத்துக்கொண்டு பெரிய
மனிதர்கள் கிளம்பினார்கள். சின்னச்சாமி வீட்டு மாடியில் குறிகாரன் தங்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
எஸ்.ஐ. வந்து இறங்கினார். நெற்றியில் விபூதியும், கண்களில் பிரமிப்புமாய்
ஏட்டும், கான்ஸ்டபிளும்  நின்றிருந்தனர். மஃப்டி போலீஸ் மந்திரித்து விட்ட கோழி
மாதிரி நெற்றியில் அப்பிய குங்குமத்துடன் எதிரே வந்து நின்று அனிச்சையாய்
சல்யூட் அடிக்க எத்தனித்தார்.
“அடச் சீ! கையைத் தூக்காத! என்னய்யா இது கோலம்?”
ஏட்டய்யா பெருமிதமாக, “சார்! பிராப்ளம் சால்வ்ட் சார்! எந்தக் கேஸ்லயும்
இம்புட்டு ஈஸியா துப்புக் கிடைச்சது கிடையாதுங்கய்யா!” என்றார்.
“என்னய்யா சொல்ற?”
“அமா சார். ஃபைண்ட் த லொகேஷன் சார்! மேற்காலதான் குதிரை இருக்கு. ஒரே நாள்ல
கிடைச்சிடும் சார்!”
“யார்யா சொன்னது?”
“நம்ம சந்திரன்தான் சார்!”
“என்னய்யா, நிஜமாவா?”
”அப்படித்தான் சார் மெஸேஜ் வந்திருக்கு!”
“எங்கேர்ந்து?”
”ஸோர்ஸ் ஆஃப் இன்ஃபர்மேஷன் வந்து… ஆத்தா சார்.. சூலி!”
“என்னய்யா உளர்றே.”
”நான் விவரமா சொல்றேன் சார்” என்று நடந்ததை விவரித்தார் ஏட்டைய்யா. எஸ்.ஐ.க்கு
முகமெல்லாம் கடுப்பு. “என்னய்யா இது பைத்தியக்காரத்தனம்? ஊர்க்காரன் அவன்
மனச்சாந்திக்கு ஆயிரம் பண்ணுவான். கூடச் சேந்து நீங்களும் கூத்துப்
பண்றீங்களா?”
”சாமி மேட்டரு சார்!”
“பாருங்க, மூணு பேரும் இங்க டூட்டில இருக்கீங்க… புரியுதா? ஊருக்குள்ள
பிரச்சனை வந்திரக்கூடாது. நீங்க அதுல கவனமாக இருக்கணும். சந்திரன் அங்கங்க
பேச்சு குடுத்து திருட்டைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு பார்க்கணும்.
அதை விட்டுட்டு இப்படி இருக்கீங்களே!”
“ஸாரி சார்!”
நாலு திட்டுத் திட்டிவிட்டு, எஸ்.ஐ. போய்விட்டார். இன்னும் ஒரு வித அரை மயக்க
நிலையில் இருப்பது போலத் தெரிந்த சந்திரன் அவசரமாக ஓடி வந்து ஏட்டையாவைத்
தேடினார். டீக்கடையில் காராச்சேவு வாங்கித் தின்றபடி இருந்த அவரை சைகை செய்து
கூப்பிட்டார் சந்திரன்.
“என்ன சந்திரா?”
”கலவரம் வரும் போலத் தெரியுது ஏட்டய்யா…. எஸ்.ஐ.க்கு மெசேஜ் அனுப்புங்க!”
“என்ன சொல்ற?”
“ஆமா… பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி… இன்னும் ஏழெட்டு பேரு கையில
டார்ச் லைட், பெட்ரோமாக்ஸ், வேல்கம்பு எல்லாம் எடுத்துக்கிட்டுப் போறாங்க!”
“அப்படியா” என்று பதறினார் ஏட்டய்யா.
அவரும் வேலுவும் சந்திரனுடன் விரைந்தனர். வழி மறித்தனர்.
”எங்கய்யா போறீங்க எல்லாரும்… கைல வெப்பன்ஸோட?”
”அது வந்து….”
“அதிகாரிங்க நாங்க இருக்கும்போதே என்ன தைரியம் உங்களுக்கு…. ம்? கலவரமா
பண்ணப் போறீங்க்?”
“அய்யய்யோ… அதில்லீங்க! நாங்க வேற சோலிக்கில்ல போறோம்!”
“வேற என்னய்யா சோலி?”
“முயல் பிடிக்கப் போறோங்க!”
“முயல் புடிக்கவா?”
”ஆமாங்க! காட்டு முயல்க நிறைய கிளம்பி வந்து திரியும். மாசத்துக்க ஒரு தரம்
இப்படிப் போறது!”
ஏட்டையாவுக்குச் சபலம் தட்டியது.
“எங்களுக்கு டவுட்டா இருக்கு! நாங்களும் வர்றோம்”
“தாராளமா வாங்க.. நாளைக்கு அதிகாரிகளுக்கு முயல்கறி வறுவல் குடுத்துருவோம்!”
”சரி” என்று கிளம்பினார்கள். சந்திரனும் உடன் வந்தார். ஏட்டையா காதைக்
கடித்தார். “துப்புக் குடுக்கிற லட்சணத்தைப் பாரு. நீயே சண்டையக் கிளப்பி
விட்டுருவ போலிருக்கே!”
“நான் என்னத்தைக் கண்டேன்… இவனுக கம்பும், லைட்டுமா கிளம்புனா?”
மேற்கு முகமாக நடந்தார்கள். மலை அடிவாரத்தை நோக்கித் தாழ்ந்த குரலில் பேசிக்
கொண்டு போனார்கள். சற்றுத் தள்ளித்தான் வாகனம் காணாமல் போன மண்டபம் இருக்கிறது.
நான்கைந்து டார்ச்சுகள் முன்புற இருட்டைத் துழாவ நடந்தார்கள். பூச்சிகளின் ஓசை
மட்டும் அச்சம் தரும் விதத்தில் ஒலித்துக்கொண்டு இருந்தது. மண்டபத்தில் சற்று
இளைப்பாறிவிட்டு அதன் பிறகு முயல்களைத் தேடும் உத்தேசத்துடன் மண்டபம் நோக்கிப்
போனார்கள்.
“பெருமாளு…. அது என்ன? என்னமோ அசையற மாதிரி இருக்கே?”
சட்டென்று அனைவரும் நின்றனர். ஒரு வித பீதி மின்னலாக அனைவர் மனதிலும் எழுந்தது.
சந்திரனுக்கு தலைப்பிள்ளை மண்டை ஓடு மனதில் வந்து பயமுறுத்தியது.
“ஆமா, எருமையா இருக்குமா? ஏய் ஒரே ஒரு டார்ச்சை மட்டும் அடிங்க. எல்லாரும்
அப்படியே பம்மி உக்காந்துக்குங்க!”
அனைவரும் பதுங்க, வாத்தியார் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த அசைவின் மீது
டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
அங்கே ஒரு குதிரை நின்றிருந்தது. நிஜமான குதிரை!
2 கருத்துகள்:

 1. //அப்புக்குட்டியைத்தவிற வேறு எந்த கதை மாந்தரும் நினைவில் நிற்கவில்லை//
  அப்புக்குட்டி ஊர்க்காரர்களால் தாக்கப்பட்டு அநாதரவான நிலையில் இருக்கும் போது உணவளிக்கும் பெண் நினைவில் நிற்காமல் போனது எப்படி?.அத்தனை பேரும் ஆவேசத்துடன் அவனை அடித்து துவைக்க அவளுக்கு மட்டும் வந்த அந்த மனித நேயம் மனதில் நிற்காமல் போனது எப்படி?.மைனரை தட்டி கேட்க யாருக்கும் வராத துணிவு அந்த பெண்ணின் வீட்டை மைனர் தட்டியதும் அவளுக்கு மட்டும் வந்ததே[காமம் அல்ல துணிவு]அந்த கதாபாத்திரம் இதை படித்த பின்பாவது நினைவிற்கு வருமா?.குறிப்பாக அப்பெண்ணின் பாத்திரம் நாவலில் இல்லை.திரைக்கதையில் தான் இடம் பெற்றிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. அன்பார்ந்த சேக்காளி தாங்கட்கு,
  உங்களது பார்வை சரியானதுதான்.கதைப்போக்கில் அது இடைச் சொறுகலே . மேலும் சில பாத்திரங்களைப்போல் என்று கருதியதால் அவ்வாறு எழுதினேன். நினைவூட்டலுக்கு நன்றி.
  பாண்டியன்ஜி

  பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !