ஞாயிறு, நவம்பர் 24, 2013

அண்ணனும் தம்பியும் ! -சுப வீ

கறுப்பும் வெள்ளையும் கலந்தே கிடக்கிறது!


சு ப வீரபாண்டியன் 

துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை நான் நேரில் சந்தித்து உரையாடியது கிடையாது. எங்கோ ஓரிரு முறை, நேருக்கு நேராகச் சந்தித்தபோது வணக்கம் சொல்லியதோடு சரி. முதல் முறையாகச்
சில நாள்களுக்கு முன்பு, தற்செயலாக நேரில் சந்திக்கவும், பேசவுமான ஒரு சூழல் ஏற்பட்டது.
அன்று காலை, கோபாலபுரம், தலைவர் வீட்டில் நான் அமர்ந்திருந்தேன். தளபதி ஸ்டாலின் அவர்களிடம் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் குறித்துக் கேட்க, அது பற்றிய செய்திகளை அவர் சொல்லிக் கொண்டு இருந்தார். தி.மு.க.வில் இணைவதற்காக நடிகர் வாசு விக்ரமும் அப்போது அங்கு வந்திருந்தார்.

அப்போது தலைவரை மாடியில் சந்தித்துத் தன் மகன் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் சோ கீழே வந்து தளபதியுடன் உரையாடினார். அவர் அருகில் நின்று கொண்டிருந்த என்னை, ‘இவர்தான் சுப.வீரபாண்டியன்என்று, துக்ளக் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரமேஷ் அறிமுகப்படுத்தினார். உடனே என் பக்கம் திரும்பி எனக்குக் கை கொடுத்த சோ, ‘அண்ணன் தம்பிக்கு இடையிலதான் எவ்வளவு வித்தியாசம்!என்றார். அனைவரும் சிரித்திட, அவர் விடைபெற்றுச் சென்றார்.
இது ஒரு சிறிய நிகழ்ச்சிதான்-. ஆனால் இதற்குள்ளும் பல செய்திகள் பொதிந்து கிடக்கின்றன.

பல ஆண்டுகளாக நான் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்து, எழுதியும், பேசியும் வருகின்றவன். என் மீதான தாக்குதல்களும் ஓரிரு முறை துக்ளக்கில் இடம் பெற்றுள்ளன. எல்லாவற்றையும் கணக்கில் வைத்துக்கொண்டு, என் அண்ணன் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனையும் இணைத்து அவர் அவ்வரியைச் சொல்லி இருக்க வேண்டும்.


என் அண்ணனும் அவரும் நெடுநாளைய நண்பர்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பும், மதிப்பும் கொண்டவர்கள். என்னைப் பொறுத்தளவு சோ என்னும் தனிமனிதருடன் நட்பும் இல்லை, பகையும் இல்லை. ஆனால் அவருடைய பார்ப்பனியக் கருத்துகளுடன் எனக்குக் கடும் பகை உண்டு. அதன் காரணமாகவே அவரை நான் பல நேரங்களில் எதிர்த்திருக்கிறேன். அன்று அவர் தலைவரிடம் கொடுத்த திருமண அழைப்பிதழிலும் கூட, ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெற்றிருந்தன என்பதைவிட, இடையிடையே தமிழ்ச் சொற்களும் இடம் பெற்றிருந்தன என்று சொல்வதுதான் சரி. அந்த அளவுக்கு ஆரியப் பண்பாட்டில் ஊறிப்போனவர் அவர்.
இது குறித்து ஒருமுறை எங்கள் வீட்டிலேயே ஒரு சின்ன விவாதம் நடைபெற்றது. என் அக்கா கனகம், அண்ணனிடத்தில், ‘சோ உங்களுக்கு மிக நெருக்கமான நண்பர். ஆனா இவன் இப்படிக் கடுமையா அவர விமர்சிச்சி எழுதுறது உங்களுக்குச் சங்கடமா இருக்காதா?’ என்று கேட்டார். அதற்கு அண்ணன் கூறிய விடை இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. சோ எனக்கு நண்பர். இவன் எனக்குத் தம்பி. இதைத்தவிர இவர்கள் இரண்டு பேர் அரசியலிலும் நான் நுழைவது இல்லை. அப்படியே நான் சொன்னாலும், என் தம்பி என்பதற்காக அவர் விட்டுவிடமாட்டார். என் நண்பர் என்பதற்காக இவனும் விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டான். எனவே அதில் நான் தலையிடுவதில்லைஎன்றார்.

விஜய் தொலைக்காட்சியின், நீயா - நானா நிகழ்விலும் ஒருமுறை, இந்தக் கேள்வி எழுந்தது. அண்ணன் தம்பிகள் பற்றிய அந்நிகழ்வில் நாங்கள் இருவருமே விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத், அண்ணனைப் பார்த்து, ‘நீங்கள் இருவரும் பல கொள்கைகளில் வேறுபடுகிறீர்கள். உடை உடுத்துவதில் கூட நீங்கள் எப்போதும் வெள்ளை நிறம். அவர் கறுப்புச் சட்டைதான் அணிகிறார். இப்படிப் பல வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்புடன் இருக்கிறீர்களே, எப்படி?’ என்று கேட்டார். அதனால் என்ன, கண்களில் கூட கறுப்பும் வெள்ளையும் கலந்துதானே இருக்கிறதுஎன்று அண்ணன் விடை சொன்னார்.

அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், சமூக வாழ்வில் கறுப்பும் வெள்ளையுமாய்க் கலந்து பழக இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா தலைமை வருகிற வரையில் அத்தகைய நட்பும், நேயமும் எதிர்க்கருத்து உடையவர்களுக்கு இடையிலும் கூட இருந்ததைப் பார்க்க முடிந்தது.
எதிரெதிர்த் துருவங்களாக இருந்தபோதும், பெரியாரும் ராஜாஜியும் இறுதிவரையில் தங்கள் நட்பையும், அன்பையும் குறைத்துக் கொள்ளவே இல்லை. 1957 - 62 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களைத் தன் தொகுதிக்கு அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்றக் கோரினார். கலைஞர் மகள் செல்வியின் திருமணத்திற்குக் காமராசர் நேரில் வந்து வாழ்த்தினார்-. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கலைஞரும், முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் சேர்ந்து பங்கேற்ற திருமண நிகழ்வுகள் உண்டு. கலைஞரை இறுதிவரையில் எம்.ஜி.ஆர். கருணாநிதி என்று கூட அழைத்தது இல்லை.
இந்தப் பண்பாடுகள் எல்லாம் இன்று தேய்ந்து கரைந்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலில் கூட நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. சோனியாவும், அத்வானியும் பொது இடங்களில் காப்பாற்றிக் கொண்டிருந்த நட்பு முறைமைகளை, இன்று ராகுலும், மோடியும் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அண்மையில் நடந்த இருநிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. கொள்கையில் நேர் எதிரான கட்சியில் இருக்கும் திரு இல.கணேசன் அவர்களின் பிறந்தநாள் செய்தியை மறுநாள் செய்தித் தாள்களில் நான் கண்டேன். உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘ இப்போதுதான் செய்தி படித்தேன். ஒருநாள் தாமதமாக உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்என்று கூறினேன். அவரும் நன்றி சொல்லிவிட்டு, ஒரு செய்தியைக் கூறினார். பொதுவாகச் செய்திகளை உறுதிப்படுத்திக் கொண்டுதான் சுபவீ பேசுவார் என்று எங்கள் கட்சியினரே கூறுவார்கள். இன்று என் பிறந்தநாளைக் கூட உறுதி செய்துகொண்டுதான் நீங்கள் வாழ்த்துச் சொல்லுகிறீர்கள் போலிருக்கிறதுஎன்றார். அவர் விடையில் அவருடைய பண்பு தெரிந்தது.
இன்னொரு நிகழ்ச்சி சற்று வேடிக்கையானது. ஒரு விமானப் பயணத்திற்காக ஓய்வறையில் காத்திருந்த போது, அ.தி.மு.க. கட்சிக் கரை வேட்டியுடன், நான்கைந்து பேர், உள்ளே வந்தார்கள். அவர்களுள் ஒருவர் அமைச்சர். நான் எழுந்து வணக்கம் சொன்னேன். அவரும் கண்டும் காணாதது போல ஒரு வணக்கத்தைச் சொல்லி வைத்தார். அவருடன் வந்தவர்கள் எல்லாம் சில நிமிடங்களில் வெளியேறிய பின்னர், அறையில் அவரும் நானும் மட்டுமே இருந்தோம். அவர் எழுந்து என்னருகில் வந்து, ‘’உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனாலும், கட்சிக்காரர்கள் முன்னிலையில் நான் உங்களிடம் பேசினால், செய்தி வேறுமாதிரியாக மேலிடத்துக்குப் போய்விடும்என்றார். அவர் கூற்றில், அவருடைய பயம் தெரிந்தது.
பாரதிய ஜனதா கட்சிக்கும் நமக்கும் இடையில் உள்ளதைப் போல, அ.தி.மு.க.வுக்கும் நமக்கும் இடையில் பெரிய கொள்கை வேறுபாடுகள் எவையும் இருந்திட இயலாது. காரணம் அவர்கள் பெரிதாகக் கொள்கை எதையும் வைத்துக்கொள்வதில்லை. பின்பற்றுகிறார்களோ இல்லையோ அவர்களும் பெரியார் அண்ணா பெயர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள்-. ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் இயல்பாகப் பேசுகின்ற அளவுக்குக் கூட, பெரிய பொறுப்பில் இருந்தாலும் இவர்களால் அப்படிப் பேச இயலவில்லை.
அரசியலில் கொள்கை நட்பும், பகையும் மட்டுமே இருக்க வேண்டுமே அல்லாது, தனி மனித உறவுகளில் யாரோடும் பகை கொள்ளல் சிறப்பானதும் இல்லை, தேவையானதும் இல்லை.
______________________________________
நன்றி!
- சு ப வீ வலைப்பதிவு

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !