இறுதியில்
துணைக்குப் போன கோழி !
பாண்டியன்ஜி
சென்ற வெள்ளிக்கிழமை இரவு இறந்துபோன உறவினர் ஒருவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிமித்தம் அம்பத்தூர் அருகே செல்ல நேர்ந்தது. பேரூந்தை விட்டு இறங்கி பிரதான சாலையிலிருந்து இரண்டுமூன்று தெருக்களைக்கடந்து துக்கத்துக்குரிய வீட்டை நெருங்கும் முன்னரே எதிர் திசையில் இரண்டு மூன்று நெடுந்தூர சொந்தங்களைக்காண முடிந்தது. தெருவோரத்தில் காணப்பெற்ற ஒரு தேனீர் கடையில் இரண்டு மூன்று பெண் உறவுகள் சூடாக இருந்த தேனீரை ஆற்றி ஆற்றி குடித்துக்கொண்டிருந்தது அவர்கள் முன்னதாகவே வந்து விட்டிருப்பதை உணர்த்தியது. வெகு தூரத்தில் அரையும் குறையுமாக கட்டப்பெற்று ஆரம்பத்திலேயே நின்று போயிருந்த ஒரு வீட்டையும் அதன் அருகே நெடுநாட்களாக குடியிருந்துவரும் ஒரு கீற்றுக்கொட்டகையையும் காணமுடிந்தது. இறந்துபோனவர் எத்தனை கடமைகளை பாதியிலே விட்டுச்சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். மழைக்காகவோ வெயிலுக்காகவோ மட்டுமின்றி இன்றைய பழக்கத்துக்காக ஒரு சின்ன ஷாமியானா வாசலில் போடப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் சென்னைபெருநகரில் சுபகாரியங்களுக்கும் சுபமல்லாத காரியங்களுக்கும் முதலில் நிறுவப்படுவது இதுவாகத்தானிருக்கும். ஷாமியானாவிற்கு கீழே குளிர் சாதனபெட்டியில் இறந்துபோனவரது பூதவுடல் மாலையணிவித்து ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பெட்டிக்கு பின்புறம் தலைபுரத்தில் ஒரு காமாட்சி விளக்கு அசைந்து அசைந்து ஆடி இந்தமனித உயிரின் நிரந்தரத்தை கேள்விக்குறியதாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. குளிரூட்டப்பெற்ற இறந்துபோனவர் உடல் மிக மிக இயல்பான தோற்றத்துடன் கண்ணாடிப்பகுதி வழியே காணமுடிந்தது. நடக்கின்ற நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருப்பது போன்ற தோற்றமே காணப்ப ட்டது. முகத்திலும் மார்பிலும் தலைமுடி பிரள பெட்டியைப்பிடித்தவாறே நேற்று முழுதும் நிகழ்ந்து போன நிகழ்வுகளை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தது அவரது மனைவியாயிருக்கக்கூடும். இரவுமுழுதும் கண்விழித்து கலங்கிய சோகம் அவர் முகத்தில் வெளிப்பட்டது. அவரையொட்டி அந்த மேடு பள்ளம் நிறைந்த மணற்தரையில் குழுமியிருந்த பெண்களில் பெரும்பாலோர் தனித்தனியே தங்களுக்குள் எதையோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அனைவர் முகத்திலும் சோகமும் சோர்வுமே மிகுந்திருந்தது. எதிரே போடப்பட்டிருந்த பத்துப்பதினைந்து பிளாஸிடிக் இருக்கைகளில் வயதான பெரியோர் சிலரும் நடுத்தர வயதைத்தாண்டிய சிலரும் மௌனமாக தாறுமாறாக பல்வேறு திசைகளை நோக்கி அமர்ந்திருந்தார்கள். ஒரு சில இளைஞர்கள் இவையனைத்தும் வாழ்க்கையில் சகஜமாக கருதி நேற்றைய சூடான செய்திகளை இன்றைய பத்திரிக்கைகளில் வாசித்துக்கொண்டிருந்தார்கள். எதிர் புரத்தில் கட்டப்படாமல் நின்றுபோயிருந்த வீட்டின் தளப்பகுதியில் மூத்த மகன் இயல்பான சோகத்துடன் உட்கார்ந்திருந்தான். இளையவனோ சற்று தொலைவில் தெரு இளைஞர்களுடன் வேறு ஏதோ விவாதங்களுடன் காணப்பட்டான். இருவருமே இருபது வயதைத் தாண்டியவர்கள்தாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியையோ நிரந்தர தொழிலோ அவர்கள் பொற்றிருக்கவில்லை. அப்போது ஏறகுறைய எழுபது வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர் தனது மகனின துணையோடு கால்களை மெல்ல ஊன்றி ஊன்றி வருவதை கண்ணுற்றேன். அவரது முகம் பெரிதும் கலங்கியே காணப்பட்டது. ஊன்றி ஊன்றி வந்த பெரியவர் சகநண்பரின் சடலத்தைக்கண்டதும் கட்டுப்பாட்டை இழந்தார். முப்பது ஆண்டுக்கு மேலாக ரயில்வே பணியில் நீடித்த நட்பு எஞ்சினை விட்டு அருந்துபோன பெட்டி போல் ஆனதை எண்ணி செருமிச் செருமி ஆழுதார்.
கடந்து போன காலங்களின் பழங்கால வாழ்க்கை முறைகளை பற்றி பெரிதும் சிறப்பாக பேசப்பட்டாலும் பெரும்பாலான குடும்பங்களில் திட்டமிடுதல் என்பதே இல்லாமலிருந்தது. எனக்குத் தெரிந்தே பெரும்பாலான குடும்பங்கள் எங்கள் குடும்பம் உட்பட அளவில் எல்லையற்றே இருந்திருக்கிறது. ஒருவேளை,வயிற்றுக்குத்தேவையானவை கிடைத்திருக்கலாம். மற்ற தேவைகள்.. ... நிச்சியமாக பூர்த்தி செய்யப்படவில்லை. முதலிரண்டு குழந்தைகளை கண்டு பெற்றோர்கள் பூரித்து போயிருக்கலாம். மற்றவை...
இறந்து போனவரின் பின்னணியும் இதற்கு விதிவிலக்கல்ல. பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள். அண்ணன் தம்பி அணிவகுப்பில் கிட்டத்தட்ட இறுதி நிலையில் இருந்த அவருக்கும் அவ்வப்போது உண்ண உணவு கிடைத்திருக்கக்கூடும். வேறு எந்த தேவைகளும் பெற்றிருக்கவில்லை. தட்டுத்தடுமாறி பள்ளி இறுதித்தகுதியை பெற்று, தன்னந்தனியனாக பட்டணம் வந்து ரயில்வேயில் தானே ஒரு வேலையைத் தேடிக்கொண்டார். காலங்கடந்து தாமே ஒரு குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு இரண்டு குழந்தைக்கு தந்தையானார். முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி சொற்ப பணத்துடன் சென்னை புறநகர் பகுதியொன்றில் குடியேறி கடந்த வெள்ளிக்கிழமை முழுமையாக உலகிலிருந்தே ஓய்வு பெற்றார். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தேவையான தெம்பையும், தனக்குப்பின் தன்மனைவியின் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான எதையும் அவர் என்ன சூழலாலோ செய்ய இயலாமற்போய்விட்டது. இது போன்ற சம்பவங்கள் இந்தமண்ணில் தினம் தினம் நிகழ்வது மிகமிக சாதாரணமானதுதான். கடந்த தலைமுறையின் செயலற்ற தன்மையால் விளைந்த விளைவுகள் இன்னாளில் முழுமையாக குறைந்திருப்பதைக் காணலாம். இந்த சமூகத்துக்கு தொடர்ந்து செலுத்தப்பட்ட கல்வியறிவு குடும்பங்களில் குழந்தை பிறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்திருக்கிறது. பெண் குழந்தைகளைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு மனதளவில் ஈர்ப்பு இருந்தபோதும் நாம் இருவர் நமக்கிருவர் என்ற தாரக மந்திரம் சாத்தியமாகியிருக்கிறது. குழந்தைகளின் வளற்சிக்கேற்ப திட்டமிடுதலில் இன்றைய தலைமுறை முன்நிலையே வகிக்கிறது. அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இன்று நிரம்பவே கிடைக்கிறது.வருங்காலதேவைக்கேற்ற சேமிப்புத் திட்டங்களும் ஆயுள் காப்பீடு போன்ற வசதிகளும் இன்று குக்கிராமங்களில் கூட கிடைக்கிறது
சாதாரணமாகவீட்டைவிட்டு விலகி அவசியம் கருதியோ, அவசரம் கருதியோ செல்ல நேர்ந்தபோது கதவைத் தாளிட்டோமா , காஸ் சிலிண்டரை சரியாக மூடினோமா ..போன்ற சிந்தனைகள் சுற்றிவருவது இன்றைய சூழலில் இயல்பாகத்தானிருக்கிறது. நான் எனது என்னுடையது என்ற எண்ணங்களே இன்றையதலைமுறையை இருக்கிப் பிடித்திருக்கிறது. பணம் ஒன்றையே மையமாக வைத்து இன்றைய சமூகம் சுழன்று கொண்டிருக்கிறது. இவைகளில் ஒன்று கூட இறுதியில் நம்மோடு வரப்போவதில்லை என்ற உண்மையையும் உணர்ந்தேயிருக்கிறார்கள்.
நம்மைச்சுற்றி சுற்றி மகிழ்வித்த குழந்தைச்செல்வங்களுக்கு எதிர் காலத்தில் இந்த மண்ணில் நிமிர்ந்து வாழ தேவையான உரத்தைத் தந்திருக்க வேண்டும். ஒரே நொடியில் ரத்த சொந்தங்களை உதறி தன் வாழ்வையே நம்மோடு பிணைத்துக் கொண்ட இல்லத்துணைகளுக்குத் எதிர் கால உத்திரவாதத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
வெயில் உச்சியிலிருந்து விலகி மேற்கே சாயத் துவங்கியது
இன்னாப்பா பண்றீங்க , ஆக வேண்டிய காரியத்த பாக்காம..
என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். வெளியூரிலிருந்து வந்திருந்த பெரியவர் ஒருவர்சோம்பிக்கிடந்த கூட்டத்தை சிலிர்ப்படையச் செய்தார்.
வரவேண்டியவுங்கல்லாம் வந்தாச்சா..
எதிர்புரத்திலிருந்து ஒரு குரல் எழும்பியது.
தெருமுனையிலிருந்து இருபதுக்கு மேற்பட்ட இளம் பெண்களும் இளம் வயதைக்கடந்த சிலகுடும்பப்பெண்களும் திரண்டு வருவதை பார்த்தேன்..
நான் எப்போதும் பார்த்திராத அவர்கள் அனைவரும் அவ்வூர் சுயுதவிக்குழுவினர் என்று அறிய முடிந்தது. இறந்துபோனவரின் மனைவி அதில் தலைவியாகவோ சாதாரண உருப்பினராகவோ இருக்கக்கூடும்.
பச்சைப்பசேலென்ற நீண்ட தென்னை மட்டையுடன் வந்த ஒரு இளைஞர் மட்டையை தரையில்போட்டு இரண்டாக வகுத்தார் . இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிர் எதிராகபோட்டு பத்துநிமிடத்தில் ஒரு படுக்கையை செய்தார் . கை நிறம்ப வைக்கோலை அள்ளி படுக்கையில் ஒரு தலகணையை உருவாக்கினார். மரியாதைக்கு வந்த மலர்மாலைகளைக்கொண்டு தென்னம் படுக்கைக்கு தோரணம் அமைத்தார்..சடங்குக்கு வேண்டிய
சகல சாமான்களும் இரண்டு துணிப்பை நிறைய வந்து சேர்ந்தன. இறுதிச்சங்கு முழங்கியது. டிங் டிங் கென்ற ஒலியும் எழும்பியது . ஈரவேட்டி கூரையாக பிடிக்க பெண்கள் பக்கத்திலிருந்த நீர்நிலையிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்தனர். ஓ வென்ற பல்வேறு கூக்கரல்கள் எழும்ப ஒலித்தன. விதவிதமான பல்வேறு வாசனைத் திரவியங்களுடன் கடைசிக்குளியலை முடித்து பூதவுடல் மலர்படுக்கைக்கு மாற்றபட்டது. குளித்து முழுதும் மழிக்கப்பட்ட முகத்தில் திருநீரை அள்ளி பூசிக்கொண்டு நெருப்புக்கலயத்தை கையில் எடுத்து முதலில் நடந்தான் மூத்தமகன்.
மாலைகளில் இருந்த மலர்கள் நாலாதிசைகளிலும் வீசப்பட இறுதி பயணத்தைத்துவக்கியது அந்த சடலம்.
ஓ வென்று பல்வேறுபட்ட குரல்கள் ஒருசேர ஒலித்தன.. குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் அத்தனைபேரும் தங்களை மறந்து சடலத்தின் பின்னே உருண்டு பெரண்டு கதறியகாட்சி நெஞ்சை நெகிழவைத்தது. தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கி மெல்ல எழுந்து நடக்கத்துவங்கினேன்.
க்ரீச் க்ரீச் என்ற முனகல் ஒலிகேட்டு நிமிர்ந்தேன்.
ஒரு சின்னஞ்சிறு கோழி சடலத்தின் படுக்கையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது.
சனி பொணம் தொணையில்லாம போகாதாம். -- யாருக்கோ விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார் ஒரு முதியவர்.
பழமொழி கவித்துவத்தோடு எதுகை மோனைக்காக சொல்லப்பட்டதா , இல்லை பிரண்டு பேசப்படுகிறதா ..எனக்குத் தெரியவில்லை.
பாவம் எப்போதோ உயிரை விடவேண்டிய ஒரு கோழி...
விஞ்ஞானச்சிந்தனைகள் மனிதனை எத்தனை உயரத்துக்கு கொண்டுபோனாலும் முன்னேற்றத்துக்கு தடையான இது போன்ற நினைவுகளை இன்னும் மறக்கத்தயாராக இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
கண்போன போக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனிதன் போகலாமா- திரையில் ஒலித்த இசை
இடுகை 0028
ரொம்ப அருமையான பதிவுங்க. இது போன்ற நிகழ்வுகள் மனிதனின் மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை நடந்துகொண்டுதான் இருக்கும். ஒரு விஷயம் பாண்டியன் சார், நீங்கள் இந்த இடுகையின் ஒரு பிரதியை Indiblogger Forum லே போட்டிருக்கீங்க. அங்கே பதிவுகள் இடாமல் நம்முடைய கருத்துக்களை மட்டும் தான் பரிமாறிக்கொள்ளவேண்டும். உங்கள் பதிவுகளை போட வேற இடம் உள்ளது. Indivine பிரிவில் சென்று அங்கே தகுந்த Category யில் போடுங்கள். வாழ்க வளர்க
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய சரஸ்வதன் தாங்கட்கு
பதிலளிநீக்குதங்கள் மறுமொழியும் மேலான ஆலோசனையும் எனக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
தங்கள் வலைப்பூவையும் கண்ணுற்றேன்.தமிழிலும் தங்கள் திறன் ஒளிவிடுவதைக்காணமுடிந்தது.. எளிய இனிய
ஒரு பக்ககதைகள் தொடரட்டும்.
இனிய.. பாண்டியன்ஜி
Best wishes to you too! :)
பதிலளிநீக்கு