புதன், அக்டோபர் 12, 2011

சென்னைக்கு வந்த இண்டி ப்ளாகர் !

 ( இண்டி ப்ளாகரும் டாட்டா மோட்டாரும் இணைந்து நிகழ்த்திய அற்புதம் )

பாண்டியன்ஜி
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மணி ஒன்று ! ( 09 - 10 - 2011 )
இண்டி பிளாகரும் டாட்டா மோட்டார் குழுமமும் இணைந்து இணையதள எழுத்துச்சிற்பிகளுக்கான ஒரு சந்திப்பை எற்படுத்திக் கொடுத்தனர். அந்த சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்துக்கருகில் உயர்ந்து காணப்பட்ட ஹோட்டல் ஹையாத் ரெசிடன்சியில்தான் நிகழ்ந்தது.
60 ,70 களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஆபர்ட்ஸ்பர்ரி திருமண அரங்கம் இருந்த இடம்தான் என்று நினைக்கிறேன்.அந்நாளைய பெரும்பாலான பிரபலங்களின் மணவிழாக்கள் அனைத்தும் அங்கேதான் நிகழந்து பெருமையோடு பேசப்பட்டது .
தினத்தந்தியின் நிருவனரும் நாம் தமிழர் இயக்கம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான சி பா ஆதித்தனார் கட்சியின் மாநாடு ஒன்றை அங்கேதான் நடத்தினார்.அப்போது அறங்கேற்றப்பட்ட பேராசை பிடித்த (சுயமரியாதைச் சமுதாயம் குறித்த ) பெரியார் என்ற நாடகத்தை தந்தை பெரியாரின் அருகில் அமர்ந்து காணும் வாய்ப் பெற்றவன் நான்.அந்த அறிய நிகழ்வு இன்னும் என் நினைவில் பசுமையாக நிற்கிறது. 
சாலையின் கிழக்கு பக்கம் உயர்ந்து சென்னையின் 360 டிகிரி தோற்றத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறது ஹோட்டல் ஹையாத்.அந்த மாளிகையில் வளைந்து நெளிந்து பசுமையாக அமையப்பெற்ற பாதையில் மிகுந்த கர்வத்தோடு நுழைகிறேன்.
ஏறத்தாழ 20000 சதுர அடியின் மையத்தில் எழுப்பப்பெற்ற அந்த வான் முட்டும் கோபுரம் சென்ற ஆகஸ்ட் மாதத்தின் ஒருநாளில்தான் அர்பணிக்கப்பட்டு சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாயிற்று.300 க்கு மேற்பட்ட 430 சதுர அடிக்கு மேலான விசாலமான அறைகள் விருந்தினர்களுக்காக காத்திருக்கின்றன.உலகின் எந்தவொரு தேசத்தின் உணவகத்திற்கும் ஹோட்டல் ஹையாத் இணையாக இருக்கக்கூடும் என்பதில் அய்யமொன்றும் இல்லை.
தரைதளத்தில் ஏறத்தாழ 4500 சதுர அடியில் நவீன வசதிகளுடன் தூண்களற்ற பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட அரங்கை அடைந்தபோது வரிசையாக மடி கணணிகளுடன் இண்டி பிளாகரைச் சார்ந்த நவீன நங்கையர்கள் அன்போடு வரவேற்றார்கள்.
ஒரு மடிகணணியில் என் அடையாளத்தை பதிவு செய்து நிமிர்ந்தபோது என்னுடைய வருகை என்னுடைய புகைப்படத்தோடு அரங்கில் இருந்த வெள்ளித்திரையில் பளிச்சிடுவதை பார்த்தேன். இவர்கள் நடத்துகின்ற விழாக்கள் எத்தனை சிறத்தையோடு வடிவமைக்கப்படுகிறது என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது.ஒவ்வோரு விருந்தினரும் உள்ளே நுழையும்போது அவர்களின் அடையாளங்கள் ஒளிபரப்படுவது இருக்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை அணுக பெரிதும் உதவிற்று.
அரங்கில் ஒருபுறம் டாட்டா குழுமத்தின் புதிய பிறப்பான டாட்டா க்ராண்ட் தன்னை அலங்கரித்துக்கொண்டு முன்னதாகவே எங்களை வரவேர்க்க காத்திருந்தது. 
250 க்குமேற்பட்ட வலைப்பதிவர்கள் நுழைய நுழைய ஒவ்வொருவருக்கும் பழச்சாறு கொடுத்து உபசரித்தனர் ஹோட்டல் ஹையாத் பணியாளர்கள்.இண்டிபிளாகரின் எல்லை தேசம் தாண்டி காணப்பெற்றதால் மிகுதியாக ஆங்கிலம் சார்ந்த பதிவர்களே வந்திருந்தனர் .பொருவாரியாக பெண்களும்  வந்திருந்தது விழாவிற்கு ஒரு வண்ணமயத்தையும் பதிவுலகில் நல்ல நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.பொரும்பாலும் சென்னையைச் சார்ந்தவர்களேவந்திருந்தாலும் தில்லி கொல்கட்டா ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும்கூட கூடியிருந்தார்கள் என்ற செய்தி என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.
தமிழ்ப்பதிவர்களுக்கு இண்டிபிளாகரின்அடையாளம் இன்னும் எட்டவில்லை என்றே நினைக்கிறேன்.இத்தனைக்கும் இண்டி பிளாகர் அத்தனை மொழிகளையும் ஏற்றுக்கொண்ட குழுமம்தான்.
இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இணையதளத்தை மொழிசார்ந்த வல்லுநர்கள் இன்னும் எட்டிப்பார்ப்பதேயில்லை என்பது துரதிஷ்டமானதுதான் . நான் போற்றுகின்ற தமிழறிஞர் இலக்குவனாரின் மகனும் இன்னும் அவர் தடத்தில் பயணிக்கின்றவருமான மறைமலை இலக்குவனார் கலந்து கொண்டது எனக்கு பெரிதும் மகிழ்வை ஏற்படுத்தியது.அவரைப் போன்ற அன்னை தமிழுக்கு அணி சேர்க்கும் அறிஞர் பெருமக்கள் இணையதளத்தையும் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இண்டி பிளாகர் தன் நிகழ்ச்சிகளை துவக்க...
பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் தளத்தையும் பரைசாற்றத்துவங்கினர்.நுணுக்கமாகவும் நகையுணர்வோடும் அவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திய விதம் ரசிக்கத்தக்கதாய் இருந்தது.
ஒவ்வொரு தருணங்களிலும் வித்தியாசமாய் செயல்பட்ட பதிவர்களுக்கு அவ்வப்போது எதிர்பாராமல் கணணி சார்ந்த பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்கள்.
அதுவரை பொறுமையாக காத்திருந்த டாட்டா குழுமத்தின் புதிய பிறப்பு டாட்டா க்ராண்ட் இப்போது தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டது.
டாட்டா மோட்டார் குழுமம் ஏறத்தாழ 60 ஆண்டுக்கு மேலான வரலாற்றை கொண்டது.இந்த தேசத்தின் கர்வமிக்க அடையாளங்களுள் ஒன்று .வாகன உற்பத்தியில் தொடர்ந்து முத்திரை பதித்தது.அந்த நிருவனத்தின் சமீபத்திய புதிய படைப்புதான் டாட்டா க்ராண்ட்.முந்தைய சுமோ மாடலில் அவர்கள
தராமலிருந்த வசதிகளையும் இந்த சமையத்துக்கேற்ற நவீன வசதிகளையும்சேர்த்து வித்தியாசமாக டாட்டா க்ராண்டை வடிவமைத்திருக்கிறார்கள்.தாராளமான இருக்கை வசதி தலைதட்டாத உயரம் 
தனித்தனி குளிரூட்டும் வழிகள் என்று மெருகேற்றி டாட்டா க்ராண்டை பெற்றெடுத்திருக்கிறார்கள்.சிறப்புவாய்ந்த டாட்டா க்ராண்டின் விலையிலும் கட்டுப்பாட்டைக்காணமுடிகிறது.
டாட்டா க்ராண்ட் தன் சிறப்புகளை பேசப்பேச பதிவர்கள் ஆர்வமுடன் கூர்ந்து நோக்கினர்.முன்னதாக இருபது மோட்டார் இயக்கத் தெரிந்த பதிவர்கள் சென்னையை சுற்றி மகிழ டாட்டா க்ராண்ட்களை வழங்கி வண்டியின் சிறப்புகளை உணரவைத்தது.
மணி மூன்றைத்தாண்டியபோது அரங்கை அடுத்திருந்த உணவு அறையில் விருந்து படைக்க காத்திருந்தனர் ஹையாத் பணியாளர்கள்.தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும்போதே விதம் விதமான வடிவங்களில் வித்தியாமான சுவைகளில் பலவேறு இனிப்புகளையும் மிதமான காரங்களையும் வழங்கி காப்பி தேநீர் கொடுத்து திகைக்கவைத்தனர் .அவர்கள் அளித்த அந்த விருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று  என்றே சொல்லவேண்டும்.
மீண்டும் நிகழ்சிகள் தொடங்கியபோது பதிவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் வலைபூமுகவரிகளை பகிர்ந்து கொண்டனர் .ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டனர்.பெண் பதிவர்களும் ஆர்வமுடன் அளவளாவியது நிகழ்ச்சியை முழுமையாக்கியது.
அடுத்ததாக பதிவர்கள்..
பதிவுலக பிரச்சனைகள் , வாகனம் சார்ந்த விளக்கங்கள் , பயணத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ற மூன்றுவித விவாதங்களில் பங்கேற்க தனித்தனியாக வட்டமிட்டு தங்களுக்குள் விவாதித்து தெளிவு பெற்றனர்.
சரியாக 5.30 க்கு நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்த போது ஒவ்வொருவருக்கும் ஒரு ட்டீ ஷர்ட் வழங்கிசிறப்பித்தனர்.
------------------------------------------------
இன்றையதினம் எந்தவொரு நிருவனமும் தன்னந்தனியனாக நின்று சாதனைகளை நிகழ்த்த முடியாது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.அந்த வகையில் இண்டி ப்ளாகரும் டாட்டா 
குழுமமும் இணைந்து இந்த அற்புதமான சந்திப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றிருக்கின்றன.இந்த  நிகழ்வின்மூலம் இரண்டு குழுமங்களின்இலக்குகள் எட்டப்படும் என்று நம்பலாம்.
இருந்தபோதும் இத்தனை அறிய வாய்ப்பினை நாம் (இணைய வலைப்பதிவாளர்கள் ) முழுமையாக உள்வாங்கிக்கொண்டோமா இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்ற குழப்பத்துடன் வீடு திரும்பினேன்.
டுகை 0072
----------------------------------------

6 கருத்துகள்:

  1. இண்டி பிளாக்கர் சந்திப்பு இதற்கு முன்னரும் அடையார் போட் கிளப்பில் நடந்துள்ளது, இது முதல் முறையல்ல.
    டாடா மோட்டாரின் ஒரு வியாபார உத்தியே இது இதில் என்ன அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோமா இல்லை உள் வாங்கினோமா என சந்தேகம்! ஏன் ஓசில ஒரு கிராண்ட் கிடைக்கும்னு நினைச்சிங்களோ! சும்மா தமாசு!
    சுமோ அ கிராண்ட் இரண்டுமே டிசைன் குறைபாடுள்ளவை என்ன தான் கூவி கூவி வித்தாலும் இனிமே போனியாகாது!
    இராயப்பேட்டா பெனிபிட் பண்ட்ல மோசடி செய்து கட்ட ஆரம்பித்த பாலாஜி ஹோட்டல் தான் இப்போ ஹயாட் ஆக மாறி இருக்கா? அப்போ பணம் போட்டு ஏமாந்தவங்களுக்கு செட்டில் செய்துட்டாங்களா?

    பதிலளிநீக்கு
  2. மிக்க சந்தோஷம் நண்பரே!! நீங்கள் கலந்து கொண்டது...

    பதிலளிநீக்கு
  3. வவ்வாலின் வருகையும் விச்சுவின் மகிழ்வும் எனக்கு எழுதவேண்டுமென்ற ஊக்கத்தை மேலும் கொடுத்திருக்கிறது. நன்றி !இண்டி பிளாகரின் சந்திப்பு சென்னையில் நிகழ்ந்தது இரண்டாம் முறை என்பதை நானும் அறிவேன் பதிவின் தலைப்பு ஒருவேளை உங்களுக்கு அப்படி உணர்த்தியிருக்கக்கூடும்.நீங்கள் குறிப்பிட்ட டாட்டாவின் வியாபார யுத்தி குறித்து பதிவின் இறுதி வரியில் குறிப்பிட்டிருக்கிறேன்.அது ஒன்றும் தகாத குற்றமும் அல்ல என்றே கருதுகிறேன். இதுபோன்ற வியாபார யுத்தி இன்று
    நாடெங்கும் சர்வசாதாரணமாக நிகழ்கிறது.அரசு பேரூந்துகளிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை இதே யுக்திதான் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.இதை தவறாக எவரும் கருதுவதில்லை.டாட்டா சாம்சங் ஹெச்பி போன்ற நிருவனங்களின் துணை இல்லாமலிருந்தால் இண்டி ப்ளாகர் வரட்சியில் சிக்கியிருக்கக்கூடும்.இப்படியொரு துணை இண்டி ப்ளாகருக்கு இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியை இண்டி ப்ளாகர் தேவநேய பாவணர் அரங்கில் நடத்துவதற்குகூட மிகுதியான சிறமத்தை சந்திக்க நேரிட்டிருக்கும்.இதன் மூலம் டாட்டா மிகப்பெரிய ஆதாயம் அடையக்கூடும் என்பதையும் நான் நம்பவில்லை. வானளாவிய சுதந்திரம் பெற்ற நமது ப்ளாகர்களும் இந்த கார்பரேட் விருத்துகளுக்கு விலை போகிறவர்களும் அல்ல.அரங்கின் ஒரத்தில் நிகழ்ந்த தேவையற்ற அநாகரீகத்தை நீங்கள் பார்க்க நேர்ந்திருந்தால் உணரக்கூடும். டாட்டா நிருவனம் இந்த தேசத்தில் முளைத்த
    விருட்சம் என்பதை எண்ணிப்பாருங்கள்.அதனால் அவர்கள் தயாரிப்பு அனைத்துமே உயர்வானது என்று நான் கருதிடவில்லை.
    அடுத்ததாக ஹையாத் ஹோட்டல் முளைத்த இடத்தைப்பற்றிய என் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தேன்.அதன் சிதம்பர ரகசியத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள்.உங்கள் தலைகீழ் பார்வையில் அவை புலப்பட்டிருக்கக்கூடும்.(இதுவும் நகைச்சுவைக்காகத்தான் )
    இந்த சந்திப்பின் மூலம் நான் எந்த வெகுமதியையும் நான் எதிர்பார்க்கவில்லை.
    என் புதிய நண்பர் பழநிச்சாமி குறிப்பிட்டதைப்போல மிகப்பெரியநட்பு வட்டத்தோடு வெளியேறினேன் என்பதுதான் உண்மை.மிகுதியாக வாசிக்கிற
    இணையதளத்தில் எழுதுபவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டுமென நினைக்கிறவன் நான்.அதை சாதிக்க இண்டி ப்ளாகர் போன்ற அமைப்புகளால் மட்டுமே முடியும் என்று நம்புகிறவன் நான்.குறிப்பாக தமிழ் தளங்களில் பெருபாலானவை இந்த வானளாவிய சுதந்திரத்தை நிரூபிக்கக்கூடியவை என்றே தோன்றுகிறது. நன்றி !
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கருத்து மிகவும் அருமை
    தொடர்ந்து எழுதுங்கள்

    அன்புடன்
    ஜெகன்
    http://live-positive.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பார்வைக்கும் மறு மொழிக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !