புதன், டிசம்பர் 18, 2013

வண்ணநிலவன் என்ற வெங்காயம் !

 _______________________________________________________
வண்ணநிலவன் செய்தது நியாயமா ? - வண்ண நிலவனுக்கு ஒரு எதிர்வினை   
மேலான்மை பொன்னுசாமி

மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மிகப் பெரிய சாதனைப் படைப்பாளி. அன்பு என்ற பேருணர்வு இந்தப் பொருளியல் உலகின் ஆரவாரச் சுயநலப் பேயாட்டத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறது என்பது அவரது படைப்புகளின் மொத்தச் சாராம்சக் குணம்.
கிறிஸ்தவப் பேரண்பை முன்வைத்து லியோ டால்ஸ்டாய் அமர காவியங்கள் படைத்தார் எனில், இவர் மதப் பின்புலமில்லாத மானுடப் பேரன்பை இவரது படைப்புகளில் மையப்படுத்தினார்.
சமுதாய முரண்களை, சாதியக் கொடுமைகளை, வர்க்க முரண்களை, வாழ்வியல் சுரண்டல்களை அம்பலப்படுத்துகிற மாதிரி படைப்புகள் இவரிடமிருந்து வெளிப்படாததை ஒரு குறையெனக் கூறமுடியாது. அவரவர் வாழ்வியல் உலகத்திலிருந்து அவரவர் படைப்புகள் எழும். மானுடப் பேரன்பை முன்வைப்பது மனிதநேய இலக்கியத்தை நோக்கி நகர்த்தும். அந்த வகையில் உலகப் பாட்டாளி வர்க்கப் பேரன்பை முன்வைக்கிற முற்போக்காளர்கள் வண்ணநிலவனின் படைப்புகளைக் கொண்டாடுவார்கள். நானும் கொண்டாடுவேன்.
எழுத்தாளர் காமுத்துரைக்குரிய மறுப்பை மட்டும் முன்வைக்க வேண்டும். தேவையில்லாமல் என்னையும், மார்க்ஸிஸ்ட் கட்சி சார்ந்த எழுத்தாளர் ஆளுமைகளையும் ஏளனமும் இகழ்ச்சியும் பண்ணியிருக்கிறார். இலக்கிய அந்தஸ்தே இல்லாத இலக்கியம் படைக்கிறவர்கள்என்று மூர்க்கமான தொனியில் சாடியிருக்கிறார். எழுத்தாளர் சு.சமுத்திரம் அமரராகிப்போனவர். அவரையும் வம்புக்கு இழுத்து நாகரிகமற்று தாக்கியிருக்கிறார். தரம் குறைந்த எழுத்தாளர் அவர்என்று தரமற்ற வார்த்தைகளை வீசியிருக்கிறார்.
திருநங்கையரைப் பற்றிய மனிதநேய நோக்கில் அவர் எழுதிய வாடா மல்லிநாவல் ஒரு காவியச் சுவை நிரம்பிய அற்புத இலக்கியம். அதை வண்ணநிலவன் பார்த்திருக்கிறாரா?
ஒரு கோட்டுக்கு வெளியே’, ‘ஊருக்குள் ஒரு புரட்சிஎன்பவை அவரது மிகச் சிறந்த நாவல்களில் முக்கியமானவை. ஆகச் சிறந்த அழகியல் கூறுகள் அமைந்திருந்த நாவல்கள். கொடுமைகளை, அநீதிகளை எதிர்க்கிற எளிய மனிதர்கள் சொந்த சாதியினராலும், சொந்த ஊராலும் எப்படியெல்லாம் சூறையாடப்படுவார்கள் என்கிற சோகக் காவியம். சாதி கடந்த மனித நேயமிக்கவர் சு.சமுத்திரம்.
அவருக்கு சாகித்ய அகாடமியிலிருந்து விருது அறிவிக்கப்பட்டபோது, கணையாழியில் கஸ்தூரிரங்கன் இங்கும் இட ஒதுக்கீடா?’ என்று வர்ணாசிரமக் குரல் எழுப்பியிருந்தார். அதேகுரல் வண்ணநிலவனிடமிருந்தும் வெளிப்படுகிறது. உயர்சாதியில்தான் இலக்கியம் படைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார். பிற பகுதியினர் இலக்கியம் படைக்க முன்வருகிறபோது, ‘அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து, தரம் கிடையாதுஎன்று புறமொதுக்குகிறார்.
கு.சின்னப்ப பாரதி உலகறிந்த தமிழ் எழுத்தாளர், சிங்களம் உட்பட உலகத்தின் பல மொழிகளில் அவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சோசலிச யதார்த்தவாதம் என்ற உயர்ந்த இலக்கியக் கோட்பாட்டில் வலுவாக காலூன்றி நாவல்கள் படைத்திருக்கிறார். இவரது தாகம்நாவலை தமிழின் சிறந்த பத்து நாவல்களில் ஒன்றுஎன்று இலக்கிய விமர்சகர் க.நா.சு. போற்றுகிறார். க.நா.சு.வை விடவும் உயர்ந்த விமர்சகரா, வண்ணநிலவன்?
டி.செல்வராஜ் ஒரு தலித். கம்யூனிஸ்ட். அவரது முதல் நாவலான மலரும் சருகும்காவிய நயமிக்க நாவல் என்று சகல பகுதி விமர்சன ஆய்வாளர்களாலும் கொண்டாடப்பட்டது. வண்ணநிலவனால் மட்டும் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அவர் காவிய நயமிக்க நாவலாசிரியர்கள் என்று பட்டியல் இட்டிருக்கிற படைப்பாளிகள் நிச்சயமாக போற்றத்தக்கவர்கள். அதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆனால் அவர்கள் யாவரும் உயர்சாதியினராகவும், மார்க்சிஸ்ட் அல்லாதவர்களாகவும் இருப்பது தற்செயலானதுதானா?
மாக்ஸிம் கார்க்கி, மைக்கேல் ஷோலக்கோவ், கிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றோரை பட்டியலில் சேர்க்காமல் தவிர்த்திருப்பதற்கு அவர்கள் மார்க்ஸிஸ்ட்கள் என்பதுதான் காரணம் என்று நம்பலாமா?
வேதங்கள், தத்துவங்கள் பயின்று அறிவுப் பாரம்பரியத்தில் இயங்கி இலக்கிய மேதைகளானவர்களும் உண்டு. கவ்வியறிவு பெரிய அளவுக்கு இல்லாமல், மக்களிடையே இயங்கி, மக்களிடமிருந்து கற்றறிந்த அனுபவப் பாரம்பரியத்தில் எழுத்தாளராவோரும் உண்டு. மார்க்ஸிஸ்ட்கள் இரண்டாம் வகை.
யான் பயின்ற பல்கலைக் கழகங்கள்என்று சமுதாயத்தின் கடைக்கோடியில் உழலும் ஏழை எளியோரைக் காட்டுகிறார், மாக்ஸிம் கார்க்கி. பல்கலைக் கழகம் பார்த்தறியாத அஞ்சாம்வகுப்பு கிராமத்துப் பாமரனான நான் எழுத்தாளனாக மாறியது, மக்களிடமிருந்து கற்றறிந்த அனுபவப் பாரம்பரியம் வழியாகத்தான். சாதிய சான்றிதழோ, உயர்சாதி வேத மரபோ இல்லாத என்னை எப்படி எழுத்தாளனாக வண்ணநிலவன் ஏற்றுக்கொள்வார்? அவரது வர்ணாசிரமம் தடுக்குமே.
வர்ணாசிரம எண்ணமில்லாத தமிழும், தமிழகமும், கற்றறிந்த வாசகப் பெருந்திரளும் என்னை எழுத்தாளனாக ஏற்றுக்கொண்டுவிட்டது. நான் எனது வாழ்வுலகங்களிலிருந்து அனுபவங்களையும், கரிசல் காட்டு மனிதர்களையும், வாழ்வின் அடிநிலை முகங்களையும் எனது படைப்புகளில் காட்டியபோது, அதற்கான இலக்கிய அந்தஸ்து வழங்கினார்கள்.
அவர்களையெல்லாம் அறிவிலிகள்என்று தீர்ப்பு எழுதுகிறார், வண்ணநிலவன். சாகித்ய அகாடமி விருதுகளை மட்டுமே தகுதியின் அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. அதைத் தாண்டிய தமிழக மக்கள் வெளி இருக்கிறதேஅங்கு மார்க்ஸிஸ்ட் எழுத்தாளர்கள் வட்டம்தாண்டிய பரப்புகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத நிஜமாயிற்றே!
வண்ணநிலவன் பழைய நினைப்பில், காலாவதியான மதிப்பீடுகளில் வாழ்கிறார். முற்போக்காளர்களுக்கு அரசியலும் தெரியும். சித்தாந்தமும் தெரியும். அதை கலாபூர்வமான இலக்கியப் படைப்பாக்குவது எப்படி என்பதுவும் தெரியும். அதனால்தான், கு.சி.பா.வும், டி.செல்வராஜும், மேலாண்மை பொன்னுச்சாமியும், காமுத்துரையும் தமிழக மக்கள் வெளிப்பரப்பில் கொண்டாடப்படுகின்றனர்.
விளாதிமர் கெரலோங்கோவின் கண் தெரியாத இசைஞன்என்ற நாவல் அபூர்வமான உலகப் புகழ்மிக்க ருஷ்ய நாவல். அதற்கு நிகராக தமிழில் நிறங்களின் உலகம்’ ‘சிறகுகள் முறிவதில்லைஎன்று இரு நாவல்கள் இருக்கின்றன. இரண்டுமே பார்வையற்றோரின் மனவெளி சமூகவெளி அனுபவங்கள். பார்வையற்றிருந்த படைப்பாளியின் வெளிப்பாடு.
அதன் காவிய நயத்தை உலகமே கொண்டாடுகிறது. அந்த நாவல்களைப் படைத்தவர், தேனி. சீருடையான். த.மு.எ.ச.காரர்.
சு.வெங்கடேசனின் காவல்கோட்டம்காவியத்தனமான மொழிநடையில் குற்றப் பரம்பரையினரின் இனக்குழு வாழ்வின் இருண்ட பகுதிகளை பதிவு செய்த காவியம். தமிழகத்தால் கொண்டாடப்பட்ட படைப்பு. த.மு.எ.ச. பொதுச்செயலாளர் அவர்.
இவற்றையெல்லாம் ஏறிட்டுப் பார்க்காமலேயே சாகித்ய அகாடமி விருது கிடைக்காத கோபத்தில் தராதரம்பற்றிய தராதரமற்ற தீர்ப்பு வழங்குகிறார், வண்ணநிலவன்.
இவரையும், இவரது படைப்புகளையும் தூக்கிச் சுமந்த, தூக்கிச் சுமக்கிற முற்போக்காளர்களாகிய எங்கள் பரந்த உள்ளம் இவரையும், இவரது தீர்ப்பையும் மன்னித்துவிடும். ஆனால், மார்க்ஸிஸ்ட் எழுத்தாளர்கள் தனிமனிதர்களல்ல. பின்னால் கோடித் தோள்களின் அணிவகுப்பு உண்டு. அவர்களும் உங்களை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி   -  ஆழம் இதழ் டிசம்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !