திங்கள், டிசம்பர் 30, 2013

தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள் !

வில்லவன் கோதை

இயல்பாகவே  தமிழர்கள் ரசனை மிக்கவர்கள்.
உண்பதிலும் உறங்குவதிலும்  மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட.
பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள்   கற்பனை வளமும் மிகுந்தவர்களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய குவியல்களுமே இதற்கு சான்றென கருதுகிறேன்.
ரசனை மிகுந்தவராக இருப்பதால்தான் ஒரு காரியத்தை
ஆஹ..ஓஹோ
என்று பாராட்டுவதும் இன்னொரு காரியத்தை
த்தூ..து 
என்று நிராகரிப்பதும்  எப்போதுமே இந்த சமூகத்தில் நிகழ்கிறது.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்...! தலையாலங்கானத்து செரு வென்ற ...பாண்டியன் ! -  இப்படியெல்லாம் பொன்னும் மணியும் கொடுத்து ஆதரித்த மன்னர் பெருமக்களை போற்றி புகழ்ந்து  பாடி  ,  அது அற்றபோது கவியால் தூற்றித்திரிந்த புலவர் பெருமக்களும் ஏராளமாய் நம்மிடையே உண்டு.
இந்த கற்பனை வளமும் ரசனைக்குணமுமே  ஒரு நிகழ்வை அடைமொழி (பட்டங்கள் )போட்டு தமிழரை பேசத்தூண்டுகிறது.
தான் பெற்ற மகவை தூக்கி அணைத்து மகிழும் தாய்
என்னைப்பெத்த  ராசா என்றும்   கண்ணே மணியே
என்றும் கைக்கெட்டாத கற்பனையில்  பூரிப்பதை பார்க்கிறோம். காதல் கொண்ட கன்னியை  முத்தாரமே முழுநிலவேயென்று கொஞ்சி மகிழும் ஆடவரைக் கண்டிருக்கலாம்.
ஒரு காரியத்தை சாதுர்யமாக முடித்தவனை   பெரிய கில்லாடிடா  .. என்றும் அதில் அவன் சறுக்கும்போது  சரியான  தர்த்திடா    ... என்றும் விளிப்பதை  கேட்டிருக்கலாம்.
அவன் அந்த விஷயத்ல மன்னன்டா.
இவன் ஒரு சரியான ட்யூப் லைட்டுடா..
நாலுபேர் ஒன்றாக சந்திக்கநேர்ந்தாலே  இப்படி பல்வேறு பட்டப் பெயர்களை  தாராளமாக பேசக்கேட்கலாம்.
அப்படித் துவங்கியதுதான் தமிழர்தம் அடைமொழி அத்தியாயம். இந்த அடைமொழிப்பண்பு  பெரும்பாலும் மொழிசார்ந்ததாகவே இருந்திருக்கிறது . எழுத்துக்கும் மொழிக்கும் முக்கியத்துவம் ஏற்பட்ட போது இந்த அடைமொழிகளின் வளற்சி எல்லையற்று எகிறதுவங்கிற்று.
காலங்காலமாக தங்கள் குழந்தைகளுக்கும் வாழும் ஊர்களுக்கும்  காரணத்தோடு பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். பின்னொரு சமயம் பெயருக்கான காரணத்தை பொருத்தி பார்த்தவர்களும் அவர்கள்தாம்.
சமூகம் கலை இலக்கியம் அரசியல் இவைகளில் அடுத்தடுத்த படிகளில் நிற்போருக்கு  இந்த அடை மொழிகள் அவசியமாயிற்று. மருத்துவம் தொழில் நுட்பம் போன்ற துறைகளுக்குக்கூட  இத்தகய அடை மொழிகள் வேண்டியிருந்தது.
சமூக நீதிக்காவலர்
இலக்கியச்செம்மல்
அஞ்சா நெஞ்சன்
என்ற ரீதியில் சாதனை நிகழ்த்திவர்கள் போற்றப்பட்டனர். நாவன்மை மிக்கவரை நாவுக்கரசர் என்று பேசினோம். கல்வியில் கணக்கில் தேர்ந்தவரை  கணித மேதையென்றும் கணக்குப்புலியென்றும் அடையாளம் காட்டினோம். நெஞ்சுரத்தோடு  சட்டங்களை இயக்கியவரை இரும்பு மனிதர் என்றோம். இலக்கியத்தில் ஊறியவரை  இலக்கிய செம்மல் என்றோம்.  இசையில் மூழ்கித்திளைத்தவரை இசை ஞானி என்றோம் கவிதையில் தேர்ந்தவரை  கவிஞர் என்றும் கவியரசு என்றும் கூவி மகிழ்ந்தோம் கலையுலகில் கதா பாத்திரமாகவே  வாழ்ந்தவரை  நடிகர் திலகமென்றோம். எப்போதும் மக்களை மனதிற்கொண்டவரை மக்கள்திலகமென பேசினொம்..காதலில் திளைத்தவனை காதல் மன்னன் என்றோம். கனவுகளில் வந்தவளை கனவுக்கன்னி என்றழைத்தோம்.
பண்டிதரை ரோஜாவின் ராஜாவென்றும் காந்தியை மகாத்மாவாவென்றும் மனதாரக்கொண்டாடினோம்..
சகல துறைகளிலும் இப்படி சக மனிதர்களை அடைமொழியிட்டு அழைப்பது  தமிழற்கு  தவிர்க்க இயலாதவொன்றாகிவிட்டது. நாட்டியப் பேரொளி ,கலைமாமணி என்றெல்லாம் அரசு வழங்குகிற பட்டங்கள் கூட ஒருவகையில் அடைமொழிகள்தானே.
இதுவே அரசியல் என்று வரும்போது  சிங்கமே என்றும் சிறுத்தையே என்றும்  வன்முறையில் அடைமொழிகள் எல்லைதாண்டுகிறது
தகுதி மிக்கவருக்கு தகுதியான சொற்களை அடைமொழியாக்கி அழைப்பதில் தவறேதுமில்லை. நேர்மையான அடைமொழிகள் சாதனையாளர்கள் மென்மேலும் ஊக்கமுற உதவுவது உண்மைதான். மற்றவரிலிருந்து பிரித்துப்பார்த்து அவர்களை  பெருமைகொள்ள இந்த அடைமொழிகள்  உதவுகிறது
எனக்குத் தெரிந்து
ஐம்பதுகளில் திராவிட இயக்கத்தினர் இந்த மண்ணில் துளிர்த்தெழ  அவர்கள் எடுத்த முக்கியமான ஆயுதம் மொழியாக இருந்தது .
எழுத்தும் பேச்சும் வளற்சியுற்றது அப்போதுதான் என்று நினைக்கிறேன். தந்தை என்றும் சுயமரியாதைச் சுடரென்றும் அறிஞர் என்றும் கலைஞர் என்றும் நாவலர் என்றும் பேச ஆரம்பித்து அவர்களெல்லாம் அன்று அடைமொழிகளை சுமந்து திரிந்தார்கள்.அவர்களின் அன்றைய திறனை அறிந்தோர் அதற்கான தகுதி அவர்களுக்கிருந்ததாகவே சொல்வர்.  
இன்று இந்த அடைமொழிகள் தெருத்தெருவாய் சீரழிவதற்கு தலையாய காரணமென்ன.
எல்லாமும் எல்லார்க்கும் கிடைத்ததுதான்.
முன்பெல்லாம் தகுதி மிக்கவனாக கருதப்பட்டவனுக்கு கிடைத்த இந்தவெகுமதி  இன்று இலவசதொலைக்காட்சிபோல எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. கல்விக்கூடங்கள் இப்போதெல்லாம் கற்றவன் கற்காதவன் எல்லாருக்கும் சர்வசாதாரணமாக  பட்டங்களை வழங்குவது போல.
சரிநிகர் சமானமாக்கியது பணம் காசு துட்டுதான்.
எழுத்தில் சாதனை புரிந்தவனை பாராட்ட எழுத்தை அறிந்தவனாக இருக்கவேண்டும். இசையில் உயர்ந்தவனை புகழ்ந்துபேச இசையில் ஊறியவனாக இருக்கவேண்டும். மொத்தத்தில் தகுதி மிக்கவனை அடைமொழிகொடுத்து அழைக்க தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்.
 அப்போதெல்லாம் வயதில் மூத்தவர்களே  புகழுரைக்கு தலைமை யேற்றார்கள்.
இன்று நிலமை அப்படியில்லை
அடைமொழிக்கு அவசியமாக கருதப்பட்ட மொழி மங்கிப்போயிற்று. மொழியறிவை இந்தத்தலைமுறை தவற விட்டு  வெகுநாளாயிற்று. மொழியை மறந்து  அடுக்குச்சொற்களை மட்டுமே நம்பி அடைமொழியிட்டு அழைக்க ஆரம்பித்தார்கள்.
சொற்களிலே பிழை ,
ஒட்டாத உவமைகள் 
தகுதியற்றவனுக்குதரப்பட்ட  அடைமொழி 
மொழியின் நிலை சங்கடத்துக்குள்ளாயிற்று.  
அச்சுக்கலையும் ஒளிஊடகங்களும் இன்று இவர்கள் கரங்களில் சிக்கித் திணருகின்றன.
 ஒரு சாதாரண தொண்டன் தன் சந்தோஷத்தை ப்ளக்ஸ் விளம்பரங்களாக அச்சிட்டு தெருத்தெருவாக கொண்டாடுகிறான். தன் தேவைகளுக்காக தகுதியற்றவனுக்கு  தகுதியற்றமொழியை அடைமொழியாக்குகிறான்
விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வருபவரை  , வீட்டிலிருந்து கோட்டைக்கு போகிறவரை.....  நிரந்தர முதல்வரே     (  மனிதன் வாழ்வே நிரந்தரமற்ற நிலையில் ..)
சதையின் சதையே   மூளையின் மூளையே  எலும்பின் எலும்பே
என்றழைத்து அடைமொழிகள் வரிசை வரிசையாக சாலையை அடைத்து நிற்கின்றன.
இப்படியெல்லாம் தமிழர்தம் அடைமொழி பொருளிலும் உவமையிலுயும்  அழுகிப்போனதுதான்  மிச்சம்.
அச்சு ஊடகங்களும் ஒளி ஊடகங்களும் இல்லையென்றால் இன்று வீதிக்கு வீதி அடைமொழிகளைத்தாங்கிநிற்கும்  துணி ஓவியங்களுக்கு தேவை இருக்காது. அவை பொரும்பாலும் மேடைகளிலும்  சுற்றுச்சுவர்களில் மட்டுமே வாழக்கூடும்.
கடந்த காலங்களில்  இயல்பாக  அழைக்கப்பட்ட  உடன் பிறப்பே என்ற அற்புத வாசகம்      ஒருபடி மேலே போய் ஒவ்வாத  இரத்தத்தின் இரத்தமாயிற்று  அதுவே அடை மொழிகளின்   அலங்கோலங்களுக்கு முதற்படியாயிற்று.

நன்றி
திண்ணை  - தமிழின்  முதல் இணைய இதழ்   29 டிசம்பர் 2013

இடுகை  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !