வெள்ளி, ஜூலை 03, 2015

பெரம்பலூருக்கு அருகில் . . .

வில்லவன் கோதை

சென்னை  திருச்சி நெடுஞ்சாலை.
கடந்த திங்கட்க்கிழமை    ( 30  ஜூன் 2015  )  காலை பத்து மணியிருக்கும்.!
உச்சி வெயிலின் கொடூரமான தாக்கம்  தொடக்கத்திலேயே புலப்பட்டுவிட்டது.
பெரம்பலூரிலிருந்து தெற்கு நோக்கி பதினைந்து கிலோமீட்டர்  தொலைவு தினந்தினம் நெடுஞ்சாலை விபத்துகளுக்கு குறைவற்ற பாடாலூருக்கு முன்னால் குறுக்கிட்ட மேம்பால இறக்கம். சாலையின் வலது புறத்தில் இடையே குறுக்கிட்ட  ஒரு சின்னஞ்சிறு கிராமத்தின் பாதுகாப்புக்காக எழுப்பப்பெற்ற இறக்கமான தடுப்புச்சுவர். இன்னொருபக்கம்சாலையின் இருபகுதிகளை பிரிக்கும் மையத்தரைப்பகுதி. நீண்டு கிடக்கும் அந்த மணற்பரப்பில் வரிசையாக சீரான இடை வெளியில் ஊன்றப்பட்ட ஒலியை உறிஞ்சும் தன்மைகொண்ட அரளிச்செடிகள்.
இந்த கொடும் வெயிலில் அவைகளின் தீராத தாகத்துக்கு நீர் வார்க்கும் தண்ணீர் லாறியொன்று மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.
வெகுதூரத்தில் பயணிகள் எவருமற்ற நெடுந்தூர சொகுசுப்பேரூந்து
ஒன்று  இடதும் வலதுமாக மாறி மாறி ஒருவித மயக்கத்தில் பயணித்து வந்து கொண்டிருந்தது.
அதேசமயம் –
உலோக உலர்சாம்பல் நிற  போர்டு  டைட்டான் வகை காரொன்று  சீரான வேகத்தில்  சொகுசுப்பேரூந்தை நெருக்கமாக அணுகிற்று.
ஒரு கடிகார பெண்டுலத்தைப்போல மாறி மாறி பயணித்த அந்த சொகுசுப்பேரூந்து  சற்றும் எதிர்பாராமல் திடீரென்று இடது ஓரமாக நகர்ந்து  மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த தண்ணீர் லாறியின் மேல் மோதிற்று. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன தண்ணீர்  லாறி முன்னோக்கி நகர்ந்து சாலையின் குறுக்கே நிலைகொண்டது. சொகுசுப்பேரூந்தின் மீது மோதுவதைத் தவிர்த்த டைட்டான் கார் வலதுபக்கம் திரும்பி குறுக்கே கிடந்த லாறியில் பட்டு நின்றது.   
கண்ணெதிரே நிகழ்ந்த தாக்குதலைக்கண்ட டைட்டான் காரை ஓட்டியவர் இடதுபுறமாக ஒடித்து அழுத்தமாக பிரேக்கைக்கொடுத்து  வண்டியை நிறுத்தினார்.
கிராமத்துக்கு பாதுகாப்பாக எழுப்பப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் நெருக்கி நின்றது கார்.இடிபட்ட வேகத்தில்  காரின் கதவுகள் திறக்க வழியின்றி இறுகிற்று.
முன்னால் தள்ளப்பட்ட லாறியின் பின்பகுதி  கடுஞ்சேதத்துக்குள்ளாயிற்று. விபத்தை ஏற்படுத்திய சொகுசுப்பேரூந்தோ முற்பகுதி முழுதும் உருக்குலைந்து போயிற்று. பேரூந்தை ஓட்டிய ஓட்டுனர் கால்கள் இரண்டும் இடிபாடுகளில் சிக்கி நசுங்கி மீளமுடியாமல் தவித்தார்.
சாலை முழுதும் விபத்துக்குள்ளான வண்டிகளின் எரிபொருள் எண்ணையும் தண்ணீரும் கலந்து பரவலாக ஓடத்துவங்கிற்று.அந்த சுட்டெரிக்கும் வெயிலில் மனிதர்களே காணக்கிடைக்காத அந்த பிரதேசத்தில் ஆண்களும் பெண்களுமான ஒரு ஜனத்திறள் ஈசல்களைப்போல முற்றுகையிடுகிறது.


வலதுபுற தடுப்புச்சுவரில் நெருக்கி    கதவுகள் திறக்க இயலாது நின்றுபோன டைட்டான் காரில் இருந்தவர்கள் கைகளாலும் தலைகளாலும் கண்ணாடியை மோதி  வெளியேற முயன்றனர் 
சாலையில் ஓடும் எண்ணைக்குழம்பு ஒருவகை பீதியைக்கிளப்ப  கூடியிருந்த ஜனத்திறள்  கற்களால் கண்ணாடியை உடைத்து  தவம் இருந்து பெற்ற பிள்ளை இரண்டரை வயது கவினை வெளியேற்றி மீண்டுமொரு நற்பிறப்பை ஏற்படுத்தினர்.
பின்னர் கதவுகள் திறக்கப்பெற்று காரில் பயணித்தவர்கள் வெளியேறினர்.வண்டிக்கு ஏற்பட்ட  சேதங்களைத்தவிற  வண்டியிலிருந்த அனைவருக்கும் ஒரு சில உடல் பிடிப்புகளைத்தவிற  பெரிதான வேறு பாதிப்புகள் இல்லை.இருந்தபோதிலும் -
குழந்தை கவின் உட்பட வண்டியிலிருந்த அனைவருமே மனதளவில் ஒருவித அழுத்தத்தை உணர்ந்தனர்.
இந்த வண்டியில் பயணம் செய்தவர்கள்  எனது மனைவி  உமா , எனது இரண்டு மணமான மகள்கள் கவிதா  ( மாலதி ) , சவீதா   , எனது பேரன் இரண்டரைவயது கவின்.  டைட்டான் காரை  ஓட்டியவர் எனது இளைய மருமகன் மோகன் பாபு. அத்தனைபேருமே திருச்சியில் ஒரு மகிழ்வான நிகழ்வில் கலந்து கொள்ள  சென்றவர்கள்.
அடுத்த அரைமணியில் பெரம்பலூரில் இருந்த எனது மூத்த மருமகன் பாலகிருஷ்ணன் தகவல் அறிந்து  அவரது நண்பர்களோடு  வந்தார். நிகழ்ந்து முடிந்த விபத்தில் எங்கள் பங்கு விவாதிக்கப்பெற்று சிக்கல் முடிவுக்கு வந்தது.விபத்தில் மூன்றாம் நபரான நாங்கள் பிரச்சனைகளிலிருந்து எழுத்துமூலம் வெளியேறினோம்.
இரண்டரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைபட்டு  ஏராளமான வண்டிகள்  காத்திருக்க வேண்டியதாயிற்று.
இங்கே ஒன்றை அவசியம் குறிப்பிடவேண்டும் 
எதிர்பாரத விபத்துகளுக்கேற்ப நவீன வகை  சாப்ட்வேர்களுடன் வடிவமைக்கப் பெற்றிருந்த போர்டு டைட்டான்  க்ளாசிக் வகை காரின் செயல்பாடு இந்த சூழலில் போற்றத்தக்கது.
‘’ லாறியின் வலது முனை காரின் ஏ பில்லரில் மோதியபோது ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தேன். உள்ளேயிருந்தவர்களுக்கு
 பயப்படாதீங்க என்று எச்சரிக்கை செய்துவிட்டு வண்டியை வலது பக்கம் ஒடித்து அழுத்தமாக ப்ரேக்கை பிரயோகித்தேன். நினைத்த்தைப்போலவே சாலையின் வலது பக்க தடுப்புச்சுவரில் நெருக்கி வண்டி நின்றது.
சாலைமுழுதும் வழிந்தோடிய எண்ணைக்குழம்பும்  அடிபட்ட லாறியை ஆயில் டேகங்கர் என்று கருதியதாலும்  முதன்முதலாக பயம் என்ற சொல்லை அந்த கணத்தில் உணர்ந்தேன் .உள்ளேயிருந்த குழத்தை பெண்கள் நினைவுக்கு வர  காரின் கண்ணாடியை உடைக்க நினைத்தேன்.
           வெளிப்புற வெளிச்சத்தாலும்  வண்டி தீப்பிடிக்க்க்கூடுமென்ற  அச்சத்தாலும் டைட்டான் எழுப்பிய எச்சரிக்கை என்னால் கவனிக்க இயலாமற்போயிற்று.
இருந்தபோதும் இரண்டு வண்டிகளின் இடிபாடுகளில் நாங்கள் சிக்க நேரிட்டுவிட்டது  துரதிஷ்டம். ‘’
மிகுந்த சோர்வோடு சொன்னார் என் இளைய மருமகன் மோகன் பாபு.
‘’ அந்த கடும் வெயிலிலும் எங்கிருந்தோ திரண்டு வந்த அந்த ஜனத்திறள் எங்கள்மேல் காட்டிய அன்பும் அரவணைப்பும் மறக்கமுடியாதது.!  ‘’
என்கிறார் என் மூத்தமகள் மாலு
‘’ நான் வணங்கும் தெய்வமே எங்களை காத்தது .! ‘’
இது என் மனைவியின் நம்பிக்கை.
என்வாழ்வில் எத்தனையோ இடற்களை சந்தித்த எனக்கு இந்த தகவல்கள் அருகிலிருந்தும் என் நலன் கருதி உனக்கு  தரப்படாமல்போயிற்று.
அதே சாலையில் அடுத்த நாள்  வேறொரு வண்டியில் நாங்கள் பயணித்தபோது  விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டேன்.ஒன்றோடொன்று மோதி முகங்களை இழந்த ஒரண்டு வண்டிகளும் சாலையோரத்தில் கேட்பாறற்று சிதறிக்கிடந்தன. இரண்டரைமணி நேரத்துக்கு மேல் தடைபட்டுக்கிடந்த அந்த நெடுஞ்சாலை அத்னையும் மறந்து இப்போது சீறாக இயங்கிக்கொண்டிருந்தது . மனிதர்கள் வாழ்வும் அப்படித்தான் !
‘’ கண்ணாடிய தொறக்காதப்பா . பஸ்சு உள்ளார வந்துடும்  ‘’. 
அந்த  பயணத்தில் குழந்தை கவின் பேசியது  அவன் அவைகளை இன்னும் மறந்துவிடவில்லை என்பதை உணர்த்திற்று. அன்றைய திருச்சி பதிப்பு நாளிதழில்  வண்ணப்படத்தோடு  இந்த விபத்து பேசப்பட்டது.
விபத்துக்கள் எப்போதும் தானாக நிழ்வதில்லை என்று நம்புபவன் நான்.
மன்னிக்கப்பட்ட தருணங்கள் பெரும்பாலும்  அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றே கருதுகிறேன்.
இது ஒரு கெட்ட நேரம்.
 கருணையால் உயிர் பிழைத்தோம்
இப்படித்தான் ஒவ்வொருவரும் பேசினர்.

இவையெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் தர்கத்தை தாண்டியவை என்றே கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !