திங்கள், டிசம்பர் 23, 2013

அபூர்வ ( ராகங்கள் ) கோச்சடையன் !

அபூர்வ  ( ராகங்கள்  )  கோச்சடையன் !

(  இந்த நூற்றாண்டின் இணையற்ற கலைஞன் ரஜினி ! )

வில்லவன் கோதை

அறுபத்திமூன்று வயதைக்கடந்து இன்னமும்  தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் ரஜினியை ஒருகணம் எண்ணிப் பார்கிறேன்.

அகன்ற நெற்றி , முடியற்ற மேற்தலை,  ஓரங்களில் தாறுமாறாக தொங்கும் கோரைமுடி , கருத்த உதட்டில் ஒட்டியிருக்கும் சின்ன சிகிரெட் அடையாளம் .
நிறமற்ற ஒரு நிலக்கரிதொழிலாளியை நினைவூட்டும் கரடு முரடான உயர்த்த உடல்வாகு  அத்தனைக்கும் மேலாக எதையும் இலகுவாக ஏற்கும் தெளிந்த பார்வை.

இப்படி ஒரு எளிய தோற்றத்தோடு திரையுலகிற்கு வெளியேயும் வலம் வரும் ஓர் ஒப்பற்ற கலைஞன் ரஜினி காந்.
ஏறதாழ  தொள்ளாயிரத்து எழுபத்தய்ந்தில் அபூர்வராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால்வைத்த இந்த கன்னட இளைஞன் ஆண்டுக்கு ஆண்டு பல்வேறு  முறிக்கப்படாத சாதனைகளை நிகழ்த்தி திரையுலகின் உச்சத்தை எட்டியிருக்கிறார்
தொள்ளாயிரத்து எழுபத்தேழில் தோளில் சுமந்த துண்டுடன் அழுக்கடைந்த தலையோடு  அபூர்வராகத்தில் நுழைந்த ரஜினி  அடுத்து பரட்டைத்தலையுடன் பரட்டையாகவே பதினாறு வயதிலே திரைப்படத்தில்  வந்து ரசிகர்களைக் கவருகிறார்.
தொள்ளாயிரத்து எழுபத்தெட்டில் முள்ளும் மலரும் திரைப்படம் அவரது உழைப்பிற்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுத்தருகிறது. அந்த திரைப்படத்தில்  எழுத்தாளர் உமாசந்திரனின்  காளியாகவே வாழ்ந்த ரஜினி , எழுபத்தொன்பதில் ஆறிலிருந்து அறுபதுவரை திரைப்படத்தில் சொந்த சகோதரனுக்கு தன் வாழ்வையே விதைக்கும் மெழுகுவர்த்தியாக மாறி  தனது இன்னொரு பரிமாணத்தை தமிழ்த்திரையுலகில் நிறுவுகிறார். தில்லுமுல்லு திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர்களை நடுங்க வைத்திருக்கிறார். அவரது ராகவேந்திரர் இன்னொரு பரிமாணம். 
காலப்போக்கில் கலாச்சார மாற்றங்களுக்கேற்ப  பல்வேறு வயதினரின் கனவுகளைச்சுமந்து அடுத்தடுத்து தன் அடையாளங்களை வெள்ளித் திரையில் விதைக்கிறார்  ரஜினி . மெல்ல மெல்ல அவருடை சாதனைகளின் உயரம் எட்டமுடியாத உயரத்தை எட்டுகிறது.
என் நினைவுகள் சரியாக இருக்குமானால் இந்த படங்கள் அத்தனையுமே அவர் அடையாளத்தை  பரப்புவை.

மூன்று முடிச்சு
அவர்கள்
ப்ரியா
புவனா ஒரு கேள்விக்குறி
பைரவி
பில்லா
முரட்டுக்காளை
நெற்றிக்கண்
தில்லுமுல்லு  
ராகவேந்திரர்
தளபதி
மன்னன்
அண்ணாமலை
எஜமான்
பாட்ச்சா
முத்து
படையப்பா
சந்ரமுகி
சிவாஜி
எந்திரன்

ஏறதாழ நூற்றுபத்து  தமிழ் படங்களிலும் ஐம்பதுக்குமேற்பட்ட கன்னட இந்தி படங்களிலும் நடித்து எவரும் பெற்றடையாத தேசிய கௌரத்தை பெருகிறார் ரஜினி.
இவருடைய அத்தனை படங்களுமே அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் படத்தை படைத்தவர்களுக்கு பணத்தையும் அள்ளி கொட்டிய படங்கள் என்று சொல்லலாம்.
இந்தியத்திரை உலகின் உச்சத்தை எட்டிய ரஜினி ஒருவேளை திரையுலக வாழ்வை இன்று துறக்கநேரிட்டாலும் அவர் பெற்றிருந்த சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி இன்னுமொரு தலைமுறைக்கு அவருக்கு சொந்தமானதாகவே இருக்கும்.. இப்படியொரு தகுதியை தக்கவைத்துக்கொள்ள ரஜினி கடந்த காலங்களில் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது. இன்று போல் அடுத்த தலைமுறைக்கும் அவருக்காக உயிர்கொடுக்க ஒரு கூட்டம் காத்திருக்கப்போவது நிச்சயம்.
இதற்கு முன்னால் தமிழ்திரையுலகின் முடிசூடா மன்ன்னாக திகழ்ந்தவர் புரட்சி நடிகர் எம்ஜியார். அவருடைய பின்புலமும் ஏறக்குறைய இப்படித்தான்.அவர் ஏற்படுத்தியிருந்த பிம்பம்  மங்கிப்போவற்கே இன்னுமொரு தலைமுறை தேவைப்பட்டது.
அவர் ரசிகர்கள் நகர்ந்து அவர் ஏற்படுத்திய இயக்கமே இப்போது அவரைத்தாங்கிப்பிடித்திருக்கிறது.
திரையுலகைப்பொருத்தவரை எம்ஜியாரும் ரஜினியும் எப்போதுமே இயக்குநர்களின் நாயகர்கள்தாம்.. இவர்களுடைய பயணத்தின் திசைகளை பெரும்பாலும் நிர்ணயித்தவர்கள் திரைக்குப்பின்னால் இருந்தவர்களே.
காலப்போக்கில் தங்கள் திசைகளை புரிந்து கொண்டு  வாய்ப்புகளை வசமாக்கிகொண்டவர்கள்தாம் எம்ஜியாரும் ரஜினியும்.
இளம் வயதில் வரவேற்பளிக்காத திரைத்துறையை முதுமையில் பழிதீர்த்துக்கொண்டவர் எம்ஜியார்.  முதுமைக்காலத்தில் அவர் நடித்த அத்தனை படங்களுமே அவரை தொடர்ந்து உச்சிக்கு கொண்டு சென்றவை..கடைசிவரை தன் இயல்பான தோற்றத்தை மறைத்து திரைஉலகின் ஒப்பனை வடிவத்தை திரைக்கு வெளியேயும் காத்தவர் புரட்சி நடிகர் எம்ஜியார்  .
அவர் திமுகாவில் இருந்தபோது தனியாக கட்சி எதுவும் துவக்குகின்ற  எண்ணம் இருந்ததில்லை. அவர் கட்சி துவங்கியதும் , அந்தகட்சியும் தமிழக அரசியலில் தவிற்கமுடியாத்தானது எல்லாமே காலவோட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளே !
அப்போது அவருக்கு இயக்கத்தில் ஏற்பட்ட நெருக்கடி  அவர் வெளியேறவேண்டிய சூழலைத் தோற்றிவைத்தது. .அவர் வெளியேறியபோது அந்த  இயக்கமே இரண்டாக பிளந்து போனதுதான் அவருடைய பலம். அன்று அவரோடு பயணித்த அநுபவம் நிறைந்தவர்கள் அவரை புட்சித் தலைவராக்கினர்.
எம்ஜியாரைப்போலல்லாமல் எளிமையான தன் வடிவத்தையே முன்நிறுத்தி அதைப்போன்ற ஒரு சக்தியை தன்னிடத்தே வைத்திருக்கும் ரஜினியின் திறன் அசாத்தியமானது. ஒருபோதும் ஒரே தடத்தில் தன்னால் தனித்தியங்கமுடியாது என்பதை நன்குணர்ந்தவர் ரஜினி. திரையில் இருப்பது இயக்குநர்களின் பலம் என்பதையும் அறிந்தவர். அதனால்தான் அவசரப்பட்டு அரசியல் கட்சி எதையும் அவர் ஆரம்பித்து விடவில்லை.
ஒரு இயக்கத்தை துவக்குவது வேண்டுமானால் மிக  மிக எளிதாயிருக்கலாம். ஆனால் அதை தூக்கி நிறுத்துவது அத்தனை இலகுவானதல்ல. துவக்குவதற்கு வலுவான இலக்குகளும்  சலிக்காத உண்மை உழைப்பும் வேண்டும். அதற்கான மனோதிடமும் பக்குவமும் இன்றி ஒரு இயக்கத்தை வளர்த்திட எவராலும் முடியாது.
மிகுந்த எதிர்பார்ப்போடு மிகப்பெரிய எழுச்சியை தந்த மக்களை  அன்னா அசாரேயும் தமிழ் நாட்டில் விஜயகாந்தும் ஏமாற்றிவிட்டதை இங்கு கவனிக்கவேண்டும்.
அரசியலில் இயங்கும் திடமான மனநிலை ரஜினிக்கு இல்லையென்றாலும் அவருக்குள் அதற்கான ஒரு விருப்பச்சூழல் இருந்தே வந்திருக்கிறது. திரையுலகில் அவருக்கு கிடைத்த சகாக்களைப்போல அரசியலில் அவருக்கு இல்லை. ஒருவேளை அவர் இயக்கமொன்றை துவக்கும்பொது ஓடிவந்து இணைவதற்கு பிரபலமான பலபேர் இருக்கலாம். ஓடி வருபவர்கள்  பெரும்பாலும் திடமான மனமற்றவர்களாகவும் பழைய பெருச்சாளிகளுமாகவே இருக்கக்கூடும். அவர்களோடு பயணிப்பது ரஜினிக்கு கட்டு சோற்றோடு பெருச்சாளி இருப்பதற்கு ஒப்பாகும்.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒருகாலத்தில் ஆழமான அடித்தளத்தில்  எழுப்பப்பட்டவை. பாரதீய ஜனதா இயக்கம் மக்களின் மனக்கிளர்ச்சிகளை மையமாக கொண்டு துவக்கப்பட்டது. திமுகாவோ சுயமரியாதை , மொழியுணர்வு என்ற இலக்குகளின் மேல் எழுப்பப்பட்டது. அண்ணாதிமுக கலைஞரின் எதிர்ப்புணர்வையே மையமாக கொண்டு வளர்ந்தது. இதனால்தான் இத்தகைய கட்சிகள் எத்தனையெத்தனை ஆழத்தில் ஊழலில் மூழ்கினாலும் மீண்டும் மீண்டும்  எழ முடிகிறது.  ரஜனிகூட  ஒவ்வொரு சமயங்களில் சில கட்சிகளின் வெற்றிக்காக குரல் கொடுத்ததுண்டு.
வெற்றியை ஈட்டியபின் அந்த இயக்கங்கள்  லஞ்சத்தில் திளைத்தபோது வேறு வழியின்றி  மௌனமாக மலைக்கு போகவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பாலும்  தவறுகளையே செய்யக்கூடிய மனிதர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இயக்கங்களில் இப்படி பெரிதும் சிறிதுமான தவறுகள் நடக்காமலிருக்க வழியே கிடையாது. வேறு பல நன்மைகளைக்கருத்தில் கொண்டு இந்த இயக்கங்களை ஆதரிக்கத்தான் வேண்டியிருக்கும். அந்த மனோநிலை ரஜினிக்கு இல்லாதபோது அரசியலைத் அவர் தவிற்பதே நல்லதாயிருக்கும்.
இன்னும் கோச்சடையனாக வலம் வரபோகிற ரஜினிக்கென்று ஒரு எழுச்சி மிக்க கூட்டம் காத்திருக்கிறது. இந்த வயது கடந்த மனிதனின் அசைவுகளிலும் அதிரடியான குரலிலும் மயங்கிக்கிடக்கும் ஒரு கூட்டம் இப்போதைக்கு குறையப் போவதில்லை. ரஜினி என்ற வார்த்தை இப்போதொல்லாம்  குழந்தைகளை குதுகுலமடையச்செய்கிறது. இளைஞர்கள் தங்கள் உதிரத்தை அவருக்காக சிந்தத் தயாராய் இருக்கிறார்கள். இப்போதும் வயது முதிர்ந்தோரில் பலர் ஆர்வமாய் அவரை  நேசிக்கிறார்கள். இயக்கத்தலைவர்கள் அவருடைய நெருக்கத்தை விரும்புகிறார்கள்.
தமிழ் நாடுதான் தன்னை வாழவைத்தது என்று பேசும் ரஜினி அந்த தமிழ்நாட்டிற்கு எதனையாவது செய்யவேண்டும். அதை செய்து முடிக்க அவருடைய பட்டாளம் காத்திருக்கிறது.
எனது பார்வையில் –
ரஜினி ஒன்று செய்யலாம். பதவிகளற்ற இயக்கங்களில் தனது படையை ஈடுபடுத்தலாம்.அரசியலற்ற சமூக தளங்களுக்கு அவரது அபரிதமான சக்தி பயனளிக்கலாம். மக்களுக்கு  பொதுவான கல்வி சுகாதாரம் விழிப்புணர்வு, ,சாதி இன நல்லிணக்கம், அரசுத்துறைகளில் கையூட்டு , தனிநபர் ஒழுக்கம்  என்று எத்தனையோ தளங்கள்  முன்னெடுக்க தலைமையின்றி வெருமனே கிடக்கிறது.
இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி தரப்போவதாக சொன்ன ரஜினி இவற்றில் ஏதாவதொன்றில்  கவனத்தை செலுத்தலாம்.
மக்கள் திலகம் எம்ஜியார் தன் ஒப்பனையாலும் அவ்வப்போது தான் செய்த கொடைகளாலுமே தன்னை மக்கள் மனதில் நிறுத்தியவர்.அதற்குபிறகுதான் அவர்துவக்கிய இயக்கம் அவரை புரட்சித்தலைவராக உருமாற்றியது.
இந்த இரண்டமே அற்ற ரஜினிக்கு எம்ஜியாரைப்போன்று ஒரு பெருங்கூட்டம் மண்டியிட்டுக் கிடக்கிறது.அந்த பெருங்கூட்டத்தை பொருள் பொதிந்ததாக்க , அதை என்னாளும் தக்கவைத்துக்கொள்ள அவர் இனியாவது  ஏதாவது செய்தாகவேண்டும்.
ரஜினி வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டுகளில் நாமும் வாழ்வது ஒரு சந்தோஷம்தான் !


இடுகை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !