பாண்டியன்ஜி
சாகித்திய அகாதமி விருது நாஞ்சில் நாடனுக்கு மயிலை நாஞ்சில் மலர் - நண்பர்கள் இணைந்து கொண்டாடிய பாராட்டு விழா
ஒரு சமயம்
பெர்நாட்சா என்று நினைக்கிறேன்.
ஆங்கில அரசின் மொழிக்கான உயரிய விருதை அவருக்கு அறிவித்தபோது ...
எப்போதோ பெற்றுக்கொண்டேன். இரண்டாவது முறையா...அபத்தம் ! - என்றாராம்.
படைப்பாளனுக்கு எப்போதுமே தலைகனமுண்டு என்று சொல்லுவதை கேட்டிருக்கிறேன்.
ஆனால்..இத்தனை கனமா..?
இடுகை 0043
-----------------------------------------------
சாகித்திய அகாதமி விருது நாஞ்சில் நாடனுக்கு மயிலை நாஞ்சில் மலர் - நண்பர்கள் இணைந்து கொண்டாடிய பாராட்டு விழா
கடந்த மாதம் 26 ஆம் தேதி (26 02 2011) சனிக்கிழமை மாலை.
பல்வேறு சூழல்களில் குமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலிருந்து சென்னை நகருக்கு இடம் பெயர நேர்ந்த நண்பர்கள் சிலர் சமீபத்தில் சாகித்திய அகாதமி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்த்திட மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் குழுமியிருந்தனர்.
முன்னதாகவே ஏற்றுக்கொள்ளப் பெற்ற வேறு சில அலுவல்களை முடித்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் மயிலை கபாலீசுவரர் பேரூந்து நிறுத்தத்தில் இறங்கினேன். மொழி இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவனாக இருந்தபோதிலும் சென்னை புறநகர் வாசியான எனக்கு இது போன்ற வாய்ப்புக்கள் கிட்டுவதேயில்லை. அப்படியே கிட்டினாலும் தூரத்தையும் நேரத்தையும் கருதி முன்னதாகவே வெளியேற வேண்டியிருக்கும்.
பேரூந்திலிருந்து இறங்கி தெற்கு மாட வீதி வழியாக மொல்ல நகரத்துவங்கினேன். மயிலை திருக்குளத்தையொட்டி அமைந்த அந்த வீதி மனதிற்கிதமான மாலைப்பொழுதில் ஒரு சுகமான அநுபவமாக இருந்தது. அருகே அமைந்த வங்கக் கடலும் நீர் நிறைந்த திருக்குளமும் வீசுகின்ற தென்றலுக்கு குளுரூட்டின. வண்ணவண்ண விளக்குகள் ஒளியை உமிழ வணிக நிறுவனங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கின. மணிக்கு மணி பெட்ரோல் விலை உயர நேர்ந்தாலும் இந்த வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேதான் இருந்தது. வீதியின் இருபுரமும் நடைபாதையை விழுங்கிக்கொண்டு முளைத்திருந்த காய் கனி மற்றும் பல்வேறு கடைகள் பரபரப்புடன் காணப்பட்டன. இப்போது மாவடுக்கள் வரத்து துவங்கியிருக்கிறது போலும்.வரிசை வரிசையாக பல்வேறு கடைகளில் சீரான வடிவங்களில் மாவடுக்கள் கொட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் கோயமுத்தூர் பாலக்காடு என்றெல்லாம் பெயர்கள் கூட
சூட்டியிருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாக அலைமோதிய மனித திரளில் என்னால் நகர்ந்து மட்டுமே செல்ல முடிந்தது. தெற்கு மாட வீதி முடிவுரும்போது குறுக்கிடும் கிழக்கு மாடவீதியில் வடக்குப்பக்கம் திரும்பி பத்து பதினைந்து வணிக நிறுவனங்களை கடந்தால் பாரதிய வித்யா பவன் கிழக்கு நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. உள்ளே நுழைந்த நான் ஒரு கணம் தயங்க நேரிட்டது. சரியான இடந்தானோ என்றொரு அய்யமும் எழுந்தது. நாளை நிகழப்போகும் ஒரு திருமணத்துக்கு இன்று நிகழும் வரவேற்பு வைபவத்துக்கு கூடியிருக்கும் குடும்பங்களைப்போல் முதியவர்களும் இளம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் குறுக்கும் நெடுக்குமாக புத்தம் புதியராய் காணப்பட்டார்கள்.
ஆனால் அடுத்த கணம் அரங்கின் முன் வாயிலில் விரிக்கப்பட்டிருந்த புத்தக வரிசைகளைக் கண்டபோது சரியான இடத்திற்கு வந்திருப்பதை உணர முடிந்தது.
வாங்க..மொதல்ல காபி சாப்பிடுங்க...
ஒரு வயதான முதியவர் அன்புடன் விளித்து அரங்கின் பக்கவாட்டுகுக்கு அனுப்பி வைத்தார். பல்வேறு தானியங்களைக்கொண்டு மாவில் மூழ்கி எண்ணையில் பொரித்தெடுத்த சுளியன் போன்ற இனிப்புடன் வெங்காய சருகுகளினால் ஆன பக்கோடாவைக் கொடுத்து சுவையான காப்பியும் வழங்கினார்கள்.முழுதும் குளிரூட்டப் பெற்ற அரங்கினுள் ஆண்களும் பெண்களும் நிறைந்து காணப்பட்டார்கள். அவர்கள அனைவரும் ஒருவருக்கொருவர் அளவளாவிக்கொண்டிருந்தது அவர்கள அனைவரும் முன்பே அறிந்தவர்களாகவோ அல்லது ஒரே மண்ணைச் சார்ந்தவர்களாகவோ இருக்கக்கூடும் என்று உணர்ந்தேன். என்னைப்போன்று மொழிமீது மட்டுமே ஆசை கொண்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த வேறு சிலரும் ஆங்காங்கே காணப்பட்டார்கள்.
பெரும்பாலான சமயங்களில் இது போன்ற இலக்கிய நிகழ்வுகள் முழுதும் வரட்சியாகவே நிகழ்ந்து கண்டிருக்கிறேன்.இப்போதெல்லாம் புதிய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களகூட குளிரூட்டப்பட்ட அரங்குகளில்
சிற்றுண்டியுடன் சிறப்பாகவே நடத்துகிறார்கள்.
வெளியிடப்பெருகிற நூல்களில் போதுமான தரமும் உயர்வும் இருக்கிறதோ இல்லியோ விழா நிகழ்வுகள் உயர்ந்தே காணப்படுகிறது,
விழா சரியாக ஆறு மணிக்குத் துவங்கியபோது விழா நாயகனை பாராட்டுரைக்க பத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்கள் வரிசையாக காத்திருந்தனர் .அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் தமிழுக்கு அணிசேர்த்து தமிழால் உணரப்பட்டவர்கள். நாயகன் நாஞ்சில் நாடனோ ஒரு மேனிலைப்பள்ளி ஆசிரியன் போல் பளிச்சென்று முன்னதாகவே வந்திருந்தார். வாழ்த்துரை வழங்கி ஒரு அறிஞர் குறிப்பிட்டது போல நூல்களை யாத்தளிக்கும் அறிஞர்களுக்கு விழாக் குழுவினர் பளபளப்பான பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர். எழுத்துக்களில் குறட்பா போன்று குறுகிய வாக்கியங்களில் இலக்கியம் படைக்கும் நாஞ்சில் நாடனுக்கு வள்ளுவன் வடிவத்தை வழங்கி சிறப்பித்தனர்.
போற்றிப்பேசிய பெரும்பாலோர் நாடனின் எழுத்துக்களில் காணப்பொறும் நேரிய சிந்தனையையும் புதிய கோணத்தையும் பெரிதும் புகழ்ந்தனர்.
நாடனுக்கு வழங்கப்பட்ட இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தன் சினத்தை பதிவு செய்த முனைவர் தாயம்மா அறவாணன் காலச்சூழலில் தான் பிறந்த மண்ணில் மூடிப்போன மறபுகளையும் வழக்குகளையும் தேடித்துருவி எத்தனை லாவகமாய் எழுத்துக்களில் கையாண்டிருக்கிறார் என்று வியந்து வியந்து போற்றினார்.
தன் இயல்பான குணத்தால் மாவட்டம் மாவட்டமாக சுற்ற நேர்ந்த தன் தந்தையார் இலக்குவனார் நாஞ்சில் மண்ணில் பேசப்படும் சொற்கள்மூலம் தொலகாப்பியனின் குரலையே கேட்டதாக பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பூரித்துப்போனார்.
வங்கி அதிகாரியாய் இருந்த வரலாற்று கட்டுரையாளர் பத்பநாபனோ இன்னும்
பல படி மேலே தாவி தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் காணக்கிடக்கின்ற சொற்கள் இன்னும் வேறு எந்த மண்ணிலுமின்றி நாஞ்சில் மண்ணில் நிறைந்து கிடக்கிறது என்று கூறி வள்ளுவனும் தொல்காப்பியனும் தோன்றியது நாஞ்சில் மண்ணே என்று வாதிட்டார்.அது மட்டுமின்றி திருஞானசம்பந்தரும் அகத்தியனும்அவ்வையும் கூட இந்த மண்ணின் வித்துக்களே என்று அடிமடியிலே கையை வைத்தார்.
விழாவில் உரையாற்றிய பெரும்பாலோர்அறிவிக்கப்பெற்றிருக்கிற விருது எப்போதோ வழங்கப்பட்டிருக்கவேண்டுமென்று பேசி நாடன் வட்டாரவழக்கை கையாண்டிருக்கும் நேர்த்தியை பெரிதும் வியந்தனர்.
அகாதமியின் விருது இப்போதாவது கிடைத்ததே என்று மகிழ்வு கொள்ளத்தான் வேண்டும். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் எழுத்துக்களின் பல்வேறு சிறகுகளில் பயணம் செய்துகொண்டிருக்கிற சொந்த
மண்ணைச்சார்ந்த ஒரு எழுத்தாளனை அடையாளம் காட்ட ஒரு சாகித்திய அகாதமி தேவைப்பபட்டிருக்கிறது என்பதையும் எண்ணிப்பாற்க வேண்டும். அகாதமி விருதுக்கு அறிவித்த பின்தானே இந்த எழுத்தாளனை பெருவாரியான தமிழ் முகங்கள் திரும்பிப் பாற்க முயன்றிருக்கிறது
.பத்திரிக்கைகள் பக்கங்களில் இடம் ஒதிக்கியிருக்கின்றன. எத்தனையோ இடருகளுக்கிடையே (சிலருக்கு இடருகள் முக்கியமற்றதாக தோன்றலாம் ) மொழியையும் மொழிக்குதோள் கொடுத்த வேர்களையும் மறக்காமல் அணி செய்யும் கலைஞர் அரசு கூட உறக்கத்திலிருந்து விழித்து கலைமாமணி விருதை நாடனுக்கு அறிவித்திருக்கிறது.
ஒரு மொழியின் வளற்சிக்கு வட்டார வழக்கு எத்தகய தீங்கை விளைவிக்கும் என்று உறுதியாக உணர்ந்திருந்தாலும் மண்ணின் வழக்கு மொழியில் நானும் மயங்கிக்கிடப்பவன்தான்.குடி குடியைக் கெடுக்கும் என்பதை உணர மட்டுமே முடிகிறது.
புகை ஆரோக்கிய ஆயுளுக்கு பகை என்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள மட்டுமே முடிகிறது.
வட்டார வழக்கு கையாளுகிறவனுக்கும் வாசிக்கிறவனுக்கும் ஒரு போதைப்பொருள். நிகழ்வுகளை வட்டார வழக்கில் வடிவமைக்கப்படும்போது காட்சிகள் ஒளிப்படம் போன்று கண்முன் விரிகிறது என்பது
மறுக்கத்தக்கதல்ல. இருந்த போதும் ஒரு மண்ணின் சுவையை அந்த மண்ணில் விளைந்தவர்களால் மட்டுமே முழுமையாக உணரக்கூடும். அகாதமி தேர்வுக்குழுவில் அந்த வழக்குகளை உணர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே இது போன்ற புதினங்கள அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும். உலகெங்கும் ஆங்கில இலக்கியங்கள் மட்டுமே பரவிக்கிடப்பது எல்லாரும் உணரப்பட்ட வழக்கில் அமைந்தது கூட காரணமாக இருக்க கூடும்.
நாஞ்சில் நாடனின் விருதுக்கு காரணமான சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுப்பை வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். எனினும் சாகித்திய அகாதமி மயக்கம் தொடர்கிறது.
இந்திய அரசு ஆண்டுதோரும் தெரிவுசெய்து அறிவிக்கப்படுகிற சாகித்திய அகாதமி விருது எழுத்துலகில் சஞ்சாரம் செய்யும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் ஒரு தீராத கனவுதான். அதன் விளைவாகவே ஒவ்வொருமுறை விருது அறிவிக்கப்படும் போதும் மாறுபட்ட கூச்சல்கள் எழும்பி சலித்து ஓய்வதைக் காணமுடிகிறது. இன்றைய சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட குழு உருப்பினர்கள்தாம் விருதினை முடிவு செய்கிறார்கள். தவறுகள் தவிற்க இயலாத ஒன்றுதான்.
1955 ல் சொல்லின் செல்வர் ரா.பி சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பத்தில் துவங்கி கடந்த ஆண்டு கவிஞர் புவியரசுவின் கையொப்பம் வரை 59 எழுத்துச் சிற்பிகளை அகாதமி பெருமைப்படுத்தியிருக்கிறது. இடையே என்ன
காரணத்தாலோ அய்ந்து ஆண்டுகள் விருதுக்காக எவரும் அறிவிக்கப்பெறவில்லை.
இந்த ஆண்டிற்கான ( 2010-2011 ) விருது முப்பது ஆண்டுக்கு மேலாக சிறுகதை நாவல் கட்டுரை கவிதை என்று மொழியின் பல்வேறு பரிணாமங்களில் சஞ்சரித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் மகிழ்வுக்குரியதே.
ஒரு சில சமயங்களில் விருதுகள் கொடுக்கப்படாமல் வாங்கவும்பட்டிருக்கின்றன. வாங்கப்பட முடியாமலும் இருந்திருக்கின்றன.இதற்கு எத்தனையோ பின்பலம் நிறைந்த வலுவான அரசில் தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிற எழுத்தாளர்களுக்கு கிட்டாமல் இருப்பதை நோக்கலாம். இருந்த போதிலும் விருது பெற நேர்ந்தவரில் பெரும்பாலோர் சாதனையாளர்தாம் என்று நிறைவு கொள்ளலாம்.
ஒரு சமயம்
பெர்நாட்சா என்று நினைக்கிறேன்.
ஆங்கில அரசின் மொழிக்கான உயரிய விருதை அவருக்கு அறிவித்தபோது ...
எப்போதோ பெற்றுக்கொண்டேன். இரண்டாவது முறையா...அபத்தம் ! - என்றாராம்.
படைப்பாளனுக்கு எப்போதுமே தலைகனமுண்டு என்று சொல்லுவதை கேட்டிருக்கிறேன்.
ஆனால்..இத்தனை கனமா..?
இடுகை 0043
-----------------------------------------------
வாழ்த்துக்கள்.
u r artical fine!
பதிலளிநீக்குwrite more
B. gowtham