வெள்ளி, ஜனவரி 13, 2017

நல் வாழ்த்துக்கள் !

















காலம் வைத்த முற்றுப் புள்ளி .

தை முதன் நாளை தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கமாகவும்  காலம்காலமாக கொண்டாடப்படும் பொங்கல் பெரு நாளாகவும் கொண்டாடிக் களிக்கின்ற அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீடுகளில் கூட பேரிழப்புகள்  நேர்ந்து விட்ட போதும்  புதுப்  பொங்கல் வைக்கின்ற முதன் நாளை வாழ்வில் தவிர்த்துவிடக்கூடாது என்று காலம் காலமாய் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
காலச்சுழற்சியில் வரிசையாக வருகிற எத்தனையோ கொண்டாட்டங்கள்  நம் கைநழுவிப்போயிருக்கின்றன. தனிப்பட்ட அக வாழ்வின் நிகழ்வுகளும் அல்லது புற சம்பவங்களும் இதற்கான காரணங்களாக இருக்கக்கூடும்.
தமிழகமே என்றுமில்லாத வரட்சியின் பிடியில் இன்று சிக்கித் தவிக்கிறது. என் சொந்த மாவட்டத்தில் கொத்து கொத்தாக விவசாயத் தோழர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகிறார்கள். விவசாயத்தைத் தவிற வேறெதுவும் அறிந்திராத கடைசி தலைமுறை அடுத்தடுத்த இழப்புகளை எதிர் கொள்ளும் திறனின்றிஅதிர்வுகளிலும் தற்கொலையிலும் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்கள்.தங்களை நம்பிஇன்னும் இரண்டு மூன்று ஜீவன்கள் மிச்சமிருப்பதையும்கூட  உணராத சூழல்கள் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
இதற்கெல்லாம் தலையாய காரணம் இயற்கை அடுத்தடுத்து ஏமாற்றி விட்டது என்பது மட்டுமல்ல.
தீதும் நன்றும் பிறர் தர வாரா…என்றுதானே  என்றோ சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் இயற்கைக் சூழல்களை நாம் எதிர் கொண்ட விதமும்  , காலாகாலங்களில் நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகளை நினைவிற் கொள்ளாமையும்  இதற்கெல்லாம் தலையாய காரணமாக கருதுகிறேன்.
மழை கொட்டத்துவங்கிய போது குடையை தேடி அலைகின்ற நிலையும்  மின்சாரம் அற்று இருள் சூழ்ந்துவிட்டபின்  தீக்குச்சியை  எண்ணிப்பாற்பதும் நம்முடைய இயல்புதானே.
அணையின் நீர் இருப்பு குறைந்தபோதே அதற்கான முயர்ச்சிகளை மேற்கொள்ளாத அரசு  நம்முடைய அரசு . முடக்கப்பட்டு மூலையிலே எறியப்பட் தமிழர் கலாச்சாரம்   சல்லிக்கட்டை  மீட்டெடுக்க  அதே ஜனவரியில் தீவிரம் காட்டுவதும் நம் அரசுதானே. ஜனநாயக கட்டமைப்பில் பேசித்தீர்க்கவேண்டிய  எத்தனையோ ஆதார சிக்கல்களை சட்டப்படி தீர்ப்பேன் என்று வீம்பு பேசியது  எத்தனை  வேடிக்கை  நீதிமன்றம் எழுதுகின்ற தீர்ப்புகளுக்கெல்லாம்  கட்டுப்படுகிற பழக்கத்தை நாமெல்லாம்  மறந்து வெகுநாளாயிற்று. இதில் சட்டப்படி என்ன கிடைக்கப்போகிறது.
எல்லாருக்கும் கல்வி கிடைத்துவிட்டால்  ஜனநாயகம் தழைத்துவிடும் என்றெல்லாம் நம்பினோம். இன்னும் ஓட்டுக்கு பணம் வாங்குகிற பெருந்தன்மையை  நாம் விட்டுவிடவில்லை. இதற்கேற்ற தலைவர்கள் தான் நம்மை வழிநடத்தும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதுதானே உண்மை.
ஜனநாயகத்தில் கூட்டங்கள்தாமே முடிவுகளை மேற்கொள்ளுகின்றன. அதை வழிமொழிந்து போவதைத்தவிற வேறு வழியில்லை.அதற்காக கிடைத்திருக்கிற ஜனநாயகத்தை விட்டு விலகிடவும் முடியாது.
இப்போதுகூட கிடைத்த ஓட்டுகளை இழந்துவிடக்கூடாதென்ற பெரு நோக்கில் சல்லிக்கட்டில் அத்தனை கட்சிகளும் ஒருசேர தமிழ் கலாச்சாரம் பேசவில்லையா…சட்டப்படி தீர்ப்பை பெறுவோம் என்றவரெல்லாம்  சட்டத்தை தாண்டப்போவதாக சத்தியம் செய்யவில்லையா.
தீராத முடிவுகள் என்று எதுவுமில்லை.. காலம் பொறுமையிழக்கும்போது  கண்டிப்பாக எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தவறுவதே இல்லை.
இந்த டிசம்பரில் அப்படித்தான் ஒரு முற்றுபுள்ளி அழுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.
பொறுத்திருப்போம்.
வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
வில்லவன்கோதை

13 ஜனவரி  2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !