வெள்ளி, ஏப்ரல் 25, 2014

ஏற்காட்டில் ஏற்பட்ட இரண்டாவது சந்திப்பு ! இரண்டு

                             2  நினைவில் நின்ற ஒரு கனவுத்தொழிற்சாலை !
அறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை  அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில்  இரவு பகலாக உழைத்திருக்கிறோம். இருந்தபோதும் எங்களில் பெரும்பாலோர்  இந்த  ஏற்காட்டை அப்போதெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதற்கான  அவகாசமோ அதைப்பற்றிய விருப்பமோ அன்றைக்கு எங்களுக்கு இருந்ததில்லை.
 சேலம் ரயில்நிலையத்தின் பரபரப்பான முதல் நடைமேடையில்  சற்றும் எதிர்பாராத ஒரு அன்பான வரவேற்பு எங்களுக்கு கிடைத்தது. வாரியப்பணிகளில் எங்களுக்கு இளையவரான   சேலம் முத்துகுமார் எங்கள் வருகையை எப்படியோ  அறிந்து  மிடுக்கான உடையில்  புன்னகையோடு எங்களை எதிர்கொண்டார். பத்து நிமிட மகிழ்வான உரையாடலைத்தொடர்ந்து  ஸ்டேஷனுக்கு வெளியே வந்தபோது  ஈரோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் பழனிச்சாமி எங்களை வரவேற்று எங்கள் சுமைகளை ஏற்றுக்கொண்டார். முன்னதாகவே நண்பர்கள் ஜெகநாதனும் குமாரசாமியும் நண்பர் தங்கவேலுவோடு காத்திருந்தனர்.
ஸ்டேஷனுக்கு வெளியே நாங்கள் முற்றிலும் எதிர்பாராத இன்னொரு நண்பரையும் காணமுடிந்தது. எங்கள் மின்வாரியப்பணிகளில் எங்களுக்குப்பின்  இணைந்தவரான பொள்ளாச்சியைச் சேர்ந்த நண்பர் தாமோதரசாமிதான். கடைசிநேர அவசரஅழைப்பில் அவர்  கலந்து கொண்டிருக்கலாம்.
சராசரி உயரம்தான் என்றாலும் பார்ப்பதற்கு  நெடுநெடுவென்று காணப்படுபவர்.  எப்போதும் ஒரு மங்கலான பார்வை , அதேபோல்    சன்னமான குரல்  .நாங்கள் முற்றிலும் இங்கே எதிர்பாராதவர்.
பயணத்திட்டம் குறுகியதாய் இருந்ததால் சேலம்நண்பர் முத்துகுமாரின் பிடிவாதமான விருந்தை தவிர்க்க வேண்டியதாயிற்று. அவசரம் அவசரமாக .ஸ்டேஷனுக்கு எதிரேயே இருந்த ஒரு தேனீர் கடையில்  கிடைத்த வடையையும் தேனீரையும் உட்கொண்டு மலைப்பயணத்துக்கு தயரானோம். தன் தற்போதைய உடல் நலன் கருதி நண்பர்  முத்துகுமார்  இந்த பயணத்தில் இணையாமல் அன்போடு விடைகொடுத்தார்
ஈரோடு நகரிலிருந்து   தங்கவேலு எங்கள்  பயணத்தை எளிதாக்க  இரண்டு கார்களோடு வந்திருந்தார். ஒன்று புதிதாக வாங்கப்பெற்ற அவருடைய  டயோட்டா. இன்னொன்று எங்களுக்காக ஒரு ஓட்டுநருடன் அனுப்பப்பெற்ற அவருடைய மருமகனுடையது.
நாங்கள் இரண்டாகப்பிரிந்து இரண்டு வண்டிகளையும் சமமாக நிரப்பிக்கொண்டோம். இரண்டு கார்களும் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர்  தூரத்தை போக்குவரத்து மிகுந்த சேலம் தார்ச்சாலைகளில் கடந்து   அதர்க்குப்பின் மலையேறத் துவங்கின.
இருபுறமும் அடர்த்தியான காடுகள் நெடுநெடுவென்று நேராக வானுயர்ந்த மரங்கள்   .தாறுமாறாக சிதறிக்கிடக்கும் பல்வேறு தாவரங்கள் . பச்சைப்பசேலென்ற இயற்கையின் விஸ்வரூபம்  ஆரம்பமாயிற்று.
பின் இருக்கையில் நடுவிலிருந்த நண்பர் வீ .மணி உற்சாகமாக பேச ஆரம்பித்தார். வண்டிக்கு வெளியே வேகவேகமாக பின்னோக்கிச்செல்லும் பசுமையான காட்சிகள் என் நினைவுகளை கிளறத்துவங்கியது.
எண்ணிப்பார்க்கிறேன்.
சேலம் என்று பேசப்படும்போது இன்றையதலைமுறைக்கு உடனடியாக நினைவுக்குவருவது  சேலத்து மாம்பழங்களாகத்தான் இருக்கும். அதன் ருசியே அலாதியானதுதான்.  இந்த மாம்பழங்கள் இயல்பாக சேலத்துக்கு அப்பால் வெகுவாக  விளைந்தாலும் சேலத்தில் சந்தைப்படுத்துவதால் சேலம் அந்த அடையாளத்தை எளிதாக  கைப்பற்றிக் கொண்டது.
இன்றும்  சேலத்தில் பலவேறு தொழில்கள் விரிந்து காணப்பட்டாலும் செய்தித்தாள்களின் வாசனையை உணர்ந்தோர்க்கு நடுவண அரசிடம் போராடிப்பெற்ற சேலம் உருக்காலை  நிறுவனம் ஒருவேளை நினைவுக்கு வரலாம்.
ஆனால் என்நினைவுகள் அதனையும் தாண்டி பள்ளிப்பிராயத்துக்கு பயணித்தது. பள்ளிச்சிறுவனாயிருந்த நான் அப்போதெல்லாம் பெருவாரியான   திரைப்படங்களை காணுகின்ற திரைப்பட ரசிகனாயிருந்தேன்.  இப்போது போல் மகிழ்வோடு களிக்க அன்றைக்கு நவீன வசதிகள் என்று வேறு எதுவும் இல்லாதிருந்த சமயம்.
எம்ஜியார் திரைப்படங்களும் சிவாஜி திரைப்படங்களும் மாறிமாறி கோலோச்சியகாலம். ஜெமினி கணேசன் எஸ்செஸ் ராஜேந்திரன்   படங்களும் பின்னாளில் தொடர்ந்து ஜெய்சங்கர் படங்களும் வருவதுண்டு.
அன்நாளில் பெரும்பாலான  தென்னிந்திய திரைப்படங்கள் சென்னையிலும் சேலத்திலேயும் தயாரிக்கப்பட்டன. கோவையில்கூட  ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சி ராஜா என்ற ஸ்டுயோ இருந்தது நினைவுக்கு வருகிறது.
சேலத்தில் எடுக்கப்பெற்ற பெருவாரியான படங்களின் வெளிப்புற காட்சிகள் இந்த ஏற்காடு மலைச்சரிவுகளிலும் அபாயகரமான பாறை விளிம்புகளிம்தாம் எடுக்கப்பெற்றவை.
இதே ஏற்காடு நெடுஞ்சாலையில்தான் தொள்ளாயிரத்து முப்பதுகளிலிருந்து திரையுலக வரலாற்றில் நூற்றுஐம்பதுக்கு மேற்பட்ட  வெற்றிச்சித்திரங்களைத்தந்த  மாடர்ன் தியேட்டர் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னாளில் தமிழகத்தையே வழிநடத்துகின்ற வாய்ப் பை பெற்ற பெரும்பாலான கலைஞர்களின் அன்நாளைய பசிப்பிணியை போக்கியது  இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.
1935  ல்  பஞ்சம் பசி பட்னிகளை மையமாக கொண்டு எடுக்கப்பெற்று சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நல்லத்தங்காள்  திரைப்படம்   மாடர்ன் தியேட்டர்  தமிழ்த்திரைக்குத்தந்ததுதான்.
திரையுலக வரலாற்றிலேயே முதன் முதலாக பல்வேறு புதுமைகளை  புகுத்தி தமிழ்த்திரையில் வெற்றிகண்டது இந்த சேலத்தைச்சேர்ந்த டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ்  நிறுவனம்தான்.
1938 ல் இந்த மண்ணிலேயே முதன் முதலாக பாலன் என்ற மலையாளப்படத்தை மாடர்ன் நிறுவனம் திரையிட்டது.
1940 ல் பி யூ சின்னப்பா  இரட்டை வேடங்களில் நடிக்கப்பெற்ற  வெற்றிப்படம்  உத்தம புத்திரன்.
1942 ல் அன்நாளிலேயே  பிரமிக்கத்தக்க பொருட்செலவில்  வெளிவந்த மனோன்மணி
1952  ஆங்கிலப் படம் கூட இங்கு எடுக்கமுடியும் என்று நிரூபித்த ஜங்கிள்
1956 ல் முதன்முதலாக வண்ணங்களை குழைத்து தரப்பட்ட அலிபாபாவும் 40 திருடர்களும்
1961 ல் முதன்முதலாக வெளிவந்த மலையாள வண்ணப்படம்
இவையெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸின் திரையுலக வரலாற்று அடையாளங்களாக பேசப்பட்டாலும்  இந்த மண்ணுக்கு ஐந்து வருங்கால  முதலமைச்சர்கள் உருவாக அன்றே அடித்தளமிட்டது இந்த  நிறுவனம்தான்.
கலைஞரின் மந்திரிகுமாரி ஏவீபி ஆசைத்தம்பியின் சர்வாதிகாரி   இங்கிருந்துதான் வந்தது. பின்நாளில் ஆர் எஸ் மனோகர் ,ஜெசங்கர்  நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைகொண்ட பெரும்பாலான திரைப்படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் ஆக்கங்களே.
இன்றையதிரையுலகில் கலைஞர் மட்டுமல்ல, பெரும்பாலான திரைக்கலைஞர்களின்  திரையுலக அரிச்சுவடியே  சேலம்தான்.
ஏற்காடு நெடுஞ்சாலையில் ஏறத்தாழ பத்து ஏக்கரில் பரவிக்கிடந்த இந்த நிறுவனம்  1982  ல் இயக்கத்தை நிறுத்தியபோது அந்த ரம்மியமான பிரதேசம் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளாக மாற்றம் பெற்றது.
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அந்த நிறுவனத்தின் முகப்பு மட்டும் தன்னந்தனியாக இன்றும் கம்பீரமாக நிற்பதை ஒரு சேலத்து நண்பர் மனம்நெகிழ சொன்னார். புதிதாக ஏற்காடு சுற்றுலா  வருவோர்  இந்த திரையுலக வரலாற்று வாயிலை தரிசிக்காமல் போவதில்லையாம்.
அடுத்த வாரம் பார்க்கலாம்  !  )
 -   நன்றி  !  தமிழ் முதல் இணைய இதழ்   திண்ணை    20  ஏப்ரல் 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !