வில்லவன் கோதை
அது ஒரு இனிமையான மாலைப் பொழுது !
தமிழன் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு !
என்ற எழுச்சி மிக்க இசையொலி அந்த ஊருக்கு வெளியேயிருந்த டூரிங் தியேட்டரின் உச்சியிலிருந்து வெளியேறி நாற்புறமும் சூழ்ந்திருந்த கிராம மக்களை ஒருவித பரபரப்புக்குள்ளாக்குகிறது.
இன்னும் சற்று நேரத்தில் அன்றைய முதற்காட்சியாக திரையிடப்பட இருக்கின்ற சாகாவரம் பெற்ற கலைஞன் எம்ஜி ராமச்சந்ரன் நடித்த மலைக்கள்ளன் திரைப்படத்துக்கான முன்னோட்டம்தான் அது.
அன்று அந்த திரைப்படத்துக்கு நான் அழைத்துச் செல்லப் பட்டிருந்தேன்.தொள்ளாயிரத்து ஐம்பத்தி நாலு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஏறகுறைய எட்டு வயதிருக்கும். அதற்கு முன்னதாகவே அவர் நடித்த வேறு சில படங்களை பார்த்திருந்தாலும் என் நினைவுத்திரையில் எம்ஜியார் என்ற வடிவம் முழுமையாக பதிந்து போனது அன்றுதான்.
அன்று என் மனதைக் கவர்ந்துபோன அந்த கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை. என்னைப்போலவே களவாடப்பட்டவர்கள் அந்த தலைமுறையில் பெரும்பாலோர் இருக்கக்கூடும்.
தொள்ளாயிரத்து எழுபத்தைந்தில் திரைக்கு வந்த அதே எம்ஜி ராமச்சந்ரனின் இதயக்கனி என்றொரு திரைப்படத்தில் முகப்பிசையாக கவிஞர் வாலியின் பாடல் ஒன்று ஒலிக்கும்.
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
மக்கள் திலகம் எம்ஜியாரின் வாழ்வைப்பேச இப்படியொரு பாடலைத் தவிற வேறொரு சரியான உவமை இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. மக்கள் திலகத்தின் வாழ்வை காவிரித்தாயின் நெடும்பயணத்தோடு ஒப்பிட்டு அந்தப்பாடலில் வாலி பேசுவார்.
தொள்ளாயிரத்து பதிநேழில் ஸ்ரீலங்காவின் கண்டியில் பிறந்து கேரளத்தில் தவழ்ந்து , தமிழகத்தில் வேர்பரப்பி விருட்சமாக பெரும்பாலான மக்கள் மனதில் இன்றும் நிற்பவர் எம் ஜி ராமச்சந்திரன்..
சரியாக எழுபதாண்டுகள் வாழ்ந்த ராமச்சந்திரனின் முற்பகுதி வாழ்க்கை அவருக்கு அத்தனை எளிதாக இருந்திடவில்லை. அன்றைக்கு அவர் அனுபவித்த பசியின் கோரச்சுவை இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒன்று.
அவர் தந்தை மருதூர் கோபால மேனன் மறைவுற்றபோது எம்ஜி ராமச்சந்திரனும் அவர் மூத்த சகோதரர் எம் ஜி சக்ரபாணியும் பச்சிளம் குழந்தைகள். ஈழத்தீவில் வாழ வழியின்றி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவின் கேரளத்துக்கு குடிபெயர்ந்தார் அன்னை சத்யபாமா.
அடுத்து தமிழ்நாட்டின் கும்பகோணம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. வறுமையின் பிடியில் இறுகிய அந்த குடும்பம் பிழைப்பிற்கு வேறுவழியின்றி அன்னாளில் தாழ்வான தொழிலாக கருதப்பட்ட நாடகத்தொழிலை ஏற்கிறது.
ஈழத்து சகோதரர்கள் ஏழு எட்டு வயதிலேயே நாடக சபாக்களில் வேஷம் கட்டத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடகங்களில் சின்னச்சின்ன வேஷங்களை ஏற்ற ராமச்சந்திரன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாய் ஒரு துணைப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
அடுத்த பதினைந்து ஆண்டுகள் திரையுலகில் அவருக்கு கிடைத்ததொல்லாம் வெரும் துணைப்பாத்திரங்களே.
தொள்ளாயிரத்து நாற்பத்தேழில் முதன்முதலாக அவர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து வருடத்துக்கு இரண்டிரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ராமச்சந்திரன் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை.
நாற்பத்தேழில் இந்ததேசம் நள்ளிரவில் விடுதலை பெறுகிறது. விடிந்தபின்னும்கூட இந்த தேசத்தின் பெருவாரியான மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. இனம் மதம் சாதி போன்ற பெரும் சுவர்கள் அவர்கள் வளர்ச்சிக்கு இடையூராய் நிற்கிறது. தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த இயக்கமும் பேறறிஞர் அண்ணாவின் அரசியல் சார்ந்த திமுகாவும் வலுவாக காலூன்றுகின்றன. கல்வியிலும் கலையிலும் ஈடுபாடு மிக்க திராவிட இயக்கத்தினர் தங்கள் கருத்துக்களை அடித்தளத்து மக்களிடையே கொண்டு சேர்க்க கலைத்துறையை கையில் எடுக்கின்றனர்.
அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி, சிற்றரசு, மாறன் போன்ற திமுகாவின் முன்னணித்தலைவர்கள் எல்லாம் திரைக்கதை தீட்டிய திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரைக்குவந்து நாடெங்கும் பேசப்படுகிறது. பேறறிஞர் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரபட்ட தமிழ்த் திரையுல கலைஞர்கள் தங்கள் இயல்பான ஆத்தீக மரபுகளை மாற்றிக்கொண்டு சீர்திருத்தம் பேசிய இயக்கத்தில் இணைகின்றனர். அதுவரை காந்தியார்மீதும் காங்கிரஸ் பேரியக்கத்தின்மீதும் நேசம் செலுத்திய ராமச்சந்திரன் ஐம்பத்தி மூன்றில் திமுகாவில் இணைகிறார்.
தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கில் நாமக்கல் கவிஞரின் மலைக்கள்ளன் கலைஞரின் திரைக்கதையில் வெளிவந்து எம்ஜியாரை எட்டாத உயரத்துக்கு கொண்டு செல்கிறது. தமிழ்த்திரையுலகுக்கு முதன் முதலாக தேசிய விருதை மலைக்கள்ளன் திரைப்படம் பெற்றுத்தருகிறது. ஏறத்தாழ ஆறு தேசிய மொழிகளில் மலைக்கள்ளன் திரைப்படம் வெளியாகி திரையுலகம் அதுவரை காணாத வசூலை வாரிகொட்டுகிறது.
அதைத்தொடர்ந்து அவர் நடித்து திரைக்கு வந்த ஒவ்வொரு படமும் ஒரு சரவெடி என்றே சொல்லவேண்டும்.
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா . என்ற எம்ஜியாருக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் அன்றைய தலைமுறையையே பித்தர்களாக்கிற்று என்று சொல்லலாம்.
கலைஞர்தான் முதன் முதலாக எம்ஜியாரை புரட்சி நடிகர் என்ற அடைமொழி இட்டு அழைக்கிறார். அடுத்தடுத்து புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள் மகத்தான வெற்றி பெற்று வசூலில் சாதனை படைக்கிறது.
இயல்பாகவே இறையுணர்வு மிக்க ராமச்சந்திரன் அண்ணாவின் கருத்துக்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கடவுள் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காவும் நலிந்த பிரிவினருக்காகவும் திரைப்படங்களில் உயர்ந்த குரலெழுப்புகிறார். நடைபாதையில் குடியிருப்பவர் நலனுக்காக போராடுகிறார். திரைப்படங்களில் கூட புகைபிடிப்பதை நிறுத்துகிறார். மது அருந்தும் காட்சிகளை தவிர்க்கிறார். தான் நடித்த எல்லா திரைப்படங்களிலும் தருமத்துக்கும் நியாயத்திற்கும் குரல் எழுப்புகிறார். பெண்களைக் காக்க சண்டைபோடுகிறார்.
அவருக்காக திரைக்கதைகளும் பாடல்களும் பிரத்யோகமாக உருவாக்கப்படுகின்றன. பாற்க பரவசமூட்டும் எம்ஜியாரின் கவர்ச்சியான தேகம் அதற்கெல்லாம் ஈடு கொடுக்கிறது. அவருடைய திரைப்படங்கள் அத்தனையும் அவரது ரசிகர்களை ஏமாற்றியதில்லை. எந்த படமும் அவருடைய தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டதாக நினைவில்லை.
தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப்பிம்பம் ஆழப்பதிகிறது. சென்னை ரசிகர்களுக்கு அவர் வாத்தியார் ஆகிறார்.
அவருக்கான ரசிகர் மன்றங்கள் திமுகாவின் சார்புமன்றங்களாக பெருமளவில் துவக்கப்படுகிறது. அவருடைய ஒவ்வொரு திரைப்படத்துக்கும் தோரணங்கள் கட்டி திரைஅரங்கத்தை அலங்கரிக்கிறது அந்நாளைய திமுக பட்டாளம்.
இன்றைக்குத் தொடரும் ரசிகர்களின் கட்டவுட் பாலாபிஷேக கலாச்சாரத்துக்கு அதுவே முன்னோடி என்று கருதுகிறேன். அன்று அவர் வளர்ச்சிக்கு திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் ஒரு மாபெரும் ஏணியாக நின்றன.
அப்போதுதான் தனக்குத்தானே அடைமொழியிட்டு அழைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை மிக்க எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எம்ஜியாரை மக்கள் திலகமென்று முதன்முதலாக அழைக்கிறார் அதுவே அவர் பெற்ற இரண்டாவது இயல்பான அடைமொழி.
ஏறதாழ நூற்றுமுப்பது படங்களுக்கு மேல் நடித்திருந்த எம்ஜியார் நடிப்புத்துறை மட்டுமின்றி கலைத்துறையின் சகல நுணுக்கங்களையும் பெற்றிருந்தார். படத்தொகுப்பிலும் இயக்குதலிலும் அவர் தேர்ந்திருந்தார். சுயமாக திரைப்படம் தயாரிப்பதிலும் அரங்குகளுக்கு வினியோகிப்பதிலும் கூட அவருக்கு பயிர்ச்சியிருந்தது. நாடோடிமன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய மூன்று வெற்றிப்படங்களும் அவர் இயக்கத்தில் வந்து வரலாறு படைத்தவை.
அறுபத்தொன்பதில் அடிமைப்பெண் படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் சென்றபோது தொப்பியணியும் வழக்கத்தை மேற்கொண்டார். அப்போதிலிருந்து தொப்பியும் கருப்புக்கண்ணாடியுமின்றி அவர் வெளியுலகிற்கு தோன்றியதில்லை. தன் தோற்றத்தை எப்போதும் ஒரே மாதிரியும் ஒப்பனையோடும் அமைத்துக்கொள்ள அவர் என்றைக்குமே தவறியதில்லை.
ஏறத்தாழ அகவை அறுபதைக்கடந்த போதும் இளம் கதாநாயகிகளோடு காதற் காட்சிகளில் தொடர்ந்து நடித்து தமிழ்த்திரையுலகை பழிதீர்த்துக்கொண்டவர் மக்கள்திலகம். மக்களிடையே ஏற்படுத்தியிருந்த இந்த ஒப்பனைப் பிம்பத்தை மண்ணில் மறையும்வரை காத்தவர் மக்கள் திலகம் மட்டுமே.
இளம் வயதில் அவரை திரும்பிப்பாற்காத இந்த தமிழ்த் திரையுலகம் அவருடைய கிழவயதில் அவர் கால்களில் மண்டியிட்டு கிடந்தது மிகப்பெரிய வினோதம்.
வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தை போக்குகின்றவராகவும் எம்ஜியார் திகழ்ந்தார். இயல்பிலேயே மிகுந்த இரக்கசிந்தனை அவருக்கிருந்தது. வருமையிலும் பகிர்ந்துண்ணும் பாங்கை அவர் பெற்றிருந்தார்.
தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டில் இந்தியாவுக்கெதிராக சீனா போர் தொடுத்தபோது பாரதப்பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அந்நாளிலேயே தன் உழைப்பிலிருந்து 75,000 ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் எம்ஜியார். குழந்தைகளையும் முதியோர்களையும் பெரிதும் நேசித்தவர் எம்ஜியார். அந்நாளில் சுயமாக இயங்கி வந்த கல்விக் கூடங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அவர் அளித்த நன்கொடைகள் கணக்கில் அடங்கா.
நான் படித்த சென்னை மேற்கு மாம்பலம் உயர்நிலைப்பள்ளி ( இன்று அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி என்ற பெயராம் ) கட்டிட நிதிக்காக அட்வகேட் அமரன் என்ற நாடகத்தை நடத்தி பெருநிதி அளித்தவர் எம்ஜியார். இருந்தபோதும் அந்த பள்ளி இன்றும் பழைய தோற்றத்திலேயே கீற்றுக்கொட்டக்கையில் நீடிப்பதை சமீபத்தில் பாற்கநேர்ந்தது.
எம்ஜியாருடைய வாழ்வில் முதல் இரண்டு மனைவிகள் அடுத்தடுத்து மரணமுற்றபோது மூன்றாவதாக அவரோடு இணைந்து நடித்த விஎன் ஜானகியை அறுபதுகளில் மணந்து அவர் ஜானகி ராமச்சந்திரனானார்.
திரையில் எனக்கொருமகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்று குதூகுலத்தோடு குதித்துப் பாடிய எம்ஜியாரின் விருப்பம் கடைசிவரை பொய்யாயிற்று.
தொள்ளாயிரத்து அறுபத்தேழில் ஏறத்தாழ இருபது படங்களுக்கு மேலாக அவரோடு இணைந்து நடித்த நடிகவேள் எம் ஆர் ராதாவால் தனிப்பட்ட காரணங்களுக்காக சுடப்பட்டு தனிப்பிறவியாக அவர் பிழைத்ததை பார்த்தவன் நான்.
தன்வாழ்வுக்கு ஏணியாய் நின்ற திமுகாவின் அந்நாளைய அசுர வளர்ச்சிக்கு எம்ஜியார் திருப்பிச் செலுத்திய பங்கு மகத்தானது.
எம்ஜியாரும் கருணாநிதியும் தொள்ளாயிரத்து ஐம்பதிலேயே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இணைந்து வெளியான மந்திரி குமாரி திரைப்படம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு திருப்பம் தந்தது.
அண்ணாவின் மறைவிற்குப்பிறகு கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்க எம்ஜியாரே துணை நின்றார். இருப்பினும் காலப்போக்கில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கசப்பில் 1972 ல் எம்ஜியாரின் அண்ணாதிமுக உருவெடுக்கிறது. திமுகாவில் கருணாநிதிக்கெதிராக நின்றிருந்தவர்கள் எம்ஜியாரோடு அணிசேர்ந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்த கருணாநிதிக் கெதிரானவர்களும் அதிமுகாவை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளால் பின்தங்கியவர்கள் கருணாநிதிக்கெதிராக எம்ஜியாரோடு சேர்ந்தனர்.
ஒருதனிமனித எதிர்ப்பே அந்தக்கட்சியின் தலையாய கொள்கையாயிற்று. முன்னதாக நலிந்தமக்களிடையே எம்ஜியார் ஏற்படுத்தியிருந்த பிம்பம் அவரது அரசியலுக்கு பெரும்துணையாயிற்று. அண்ணாகாலத்தில் திமுக கலைத்துறையை ஊறுகாயாய் பயன்படுத்திற்று. ஆனால் அதிமுகாவோ அதையே முக்கிய விருந்தாக்கிற்று. மத்திய அரசின் மிட்டலுக்கு பயந்து அதிமுகவை அஇஅதிமுக வாக அவர் மாற்றியது நல்ல வேடிக்கை.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று பாடிய அந்த திரைக்கலைஞன் அடுத்தடுத்து காலப்போக்கில் நான்கெழுத்துக்கும் ஆறெழுத்துக்கும் தாவியது துரதிஷ்டம்.
இயக்கத்தின் வளர்ச்சிக்காக திமுகவினர் தொடர்ச்சியாக அரசுக்கெதிரான போராட்டங்களை நடத்தி சிறைப்பட்ட காலம். அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமலிருக்க கலைத்துறையினருக்கு அண்ணா விதிவிலக்களித்திருந்தார். அவர்களை திமுகாவின் செல்லப் பிளைகளாகவே அண்ணா பாவித்தார். அவர்களை இயக்க வளர்ச்சிக்கு பிரச்சாரக்கருவியாக மட்டுமே கையாண்டார். கழக நிர்வாக செயல்பாடுகளில் அவர்களுக்கெல்லாம் பெரிதாக இடமளிக்க வில்லை.
திமுகாவின் எந்தப்போராட்டங்களிலும் எம்ஜியார் கலந்து கொண்டதில்லை. சிறைபுகுகின்ற வாய்ப்பும் அவருக்கு கிட்டியதில்லை.
திராவிட இயக்கத்தில் இவர்களுக்கெல்லாம் ஒரு இறுக்கமான பிடிப்பு இல்லாமற் போனதற்கு இதுவும் ஒருகாரணம் என்று கருதுகிறேன்.
எழுபத்திரெண்டில் திமுகவைவிட்டு எம்ஜியார் வெளியேறிய போது கட்டியவேட்டியோடு வெளியேறினார் என்று சொல்லவேண்டும். திமுக பெரியாரிடம் சமரசம் செய்துகொண்ட கடவுள் மறுப்பு கொள்கையை முழுதுமாக எம்ஜியார் கைவிட்டதைத்தான் இப்படி குறிப்பிடுகிறேன். பெரும்பாலான ஆத்தீகர்கள் கூட எம்ஜியாரோடு அணிவகுக்க இப்போது சங்கடமில்லாமற் போயிற்று.
பக்திப்பழம் திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மக்கள் திலகத்துக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்குகிறார். அதேசமயம் அவரது அபிமானிகளோ அவரை புரட்சித்தலைவராக்கி மகிழ்ந்தனர்.
தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டுக்குப்பிறகு எம்ஜியார் பிக்சர்ஸ் முகப்புக்கொடி அண்ணா திமுக அடையாளமாயிற்று.அவர் நண்பர் கருணாநிதிக்கெதிராக மக்களிடையே அவர் விதைத்த வெறுப்பு விதைகள் அவர் மறைந்து இரண்டு தலைமுறை கடந்த பிறகும் கூட அகன்றதாக தெரியவில்லை.
பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டுமுறை திமுகாவிலும் மூன்று முறை அதிமுகாவிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள்திலகம். பெரம்பலூர் மதுரை மாவட்டங்களின் நலிந்த பிரிவினர் அவரை கண்களால் கண்ட தெய்வமாக இன்றும் நேசிக்கின்றனர்.
பெருவாரியான மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதல்வராக ஏறதாழ பதினோரு ஆண்டுகள் பதவியில் இருந்தவர். அவரது திரைப்படங்களுக்கு பிலிம்பேர் பத்திரிக்கையின் மதிப்புமிக்க விருதும் மத்திய அரசின் தேசிய விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகம் கௌரமிக்க டாக்டர் பட்டம் வழங்கி அவருக்கு பெருமை சேர்க்கிறது.
மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்கவீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், மகாதேவி, உலகம் சுற்றும்வாலிபன், ரிக்ஷாக்காரன் . . . அவரது வெற்றிப் படங்களின் எண்ணிக்கை இப்படி நீள்கிறது.
அவரது கடைசிகாலங்களில் வெளியான நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தை நான் விரும்பி ரசித்தேன் என்று சொல்லவேண்டும். அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் அவருடைய முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய வரலாறு படைத்ததை மறக்க இயலாதது.
அவருடைய திரைப்படங்களைப்பற்றியோ அவரது நற்குணங்களைப் பற்றியோ அவர் அளித்த நன்கொடைகள் பற்றியோ வரையறுக்கப் பெற்ற சொற்களில் இந்த பதிவில் ஒருபோதும் விளக்கிட முடியாது.
தொள்ளாயிரத்து எண்பத்தியேழு டிசம்பர் இருபத்திநாலில் அந்த மகத்தான கலைஞன் உயிர் நீத்த போது தமிழகமே ஸ்தம்பித்தது. சோகம் என்ற சொல்லின் வலிமையை தமிழகம் அன்று முழுமையாக உணர்ந்தது.
ஏறத்தாழ முப்பதுக்குமேற்பட்ட மதிப்புமிக்க உயிர்கள் அவருக்காக உதிர்ந்து போயின. அவரை அரசியலில் எதிர்த்து நின்றவர்களும் அன்று கண்ணீர் உகுத்தனர்.
மத்திய அரசு எண்பத்தியெட்டில் அந்த பெருமகனுக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கிறது.
பதினைந்து வருடங்களுக்கு மேலாக நேரடியான அரசியல் அநுபவம் இருந்தாலும் மக்கள் திலகத்தின் ஆட்சி அத்தனை திருப்திகரமானதாக இருந்திடவில்லை என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் திமுகாவை விட்டு வெளியேறியபோது அவரோடு அவசரம் அவசரமாக இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் திமுகாவில் பல காரணங்களால் ஒதுக்கப்பட்ட அதிருப்தியாளர்களும், அரசியல் சந்தர்ப்பவாதிகளுமாகவே இருந்தார்கள்.
கருணாநிதியை ஊழல்வாதியாக குற்றம்சாட்டி கட்சி ஆரம்பித்த எம்ஜியார் தனது அரசின் சகல துறைகளிலும் ஊடுருவிய ஊழலை தடுக்க முடியாமற் போயிற்று. திரைப்படங்களில் சாமானிய மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தாலும் அவர் ஆட்சியின் பயன்கள் அவர்களுக்கு எட்டமுடியாமல் போயிற்று. அவரது ஆட்சிகாலங்களில் தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே சிந்திக்கபடாமற் போயிற்று.
நிர்வாகத்திறன் போதாமை, நேர்மையான ஆலோசகர்கள் இன்மை, இவையெல்லாம் அவருக்கெதிராக நின்றது. ஆளும் கட்சியினரின் அபரிதமான தலையீடு அரசு எந்திரத்தை கடித்துக் குதறியது.
அதேசமயம் குழந்தைகளுக்கான காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சீரமைத்து மதிப்புமிக்க சத்துணவுத்திட்டமாக்கியது மக்கள் திலகமே. அரசின் நியாயவிலைக்கடைகளை பெருமளவு விரிவாக்கியதும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வியில் அறுபத்தொன்பது விழுக்காடு இடஒதுக்கீடு ஏற்படுத்தியதும் அவர் ஆட்சி காலத்தில்தான்.
தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்துறந்த மாவீரன் பிரபாகரன் கரங்களை அன்நாளில் வலுப்படுத்த மக்கள்திலகம் துணையாக நின்றதை மறக்கமுடியாது.
காலம் காலமாக கலைத்துறையில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாயபிம்பம், ஒரு ஒப்பனை வடிவம், தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவரை பேசிக்கொண்டிருக்கிறது. திரையுலகில் அவர் வாயசைத்த பாடல்கள் தமிழ்நாடெங்கும் இன்னும் அவரது நினைவை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தனிமனித எதிர்ப்பில் தோன்றிய அவருடைய இயக்கம் இன்றும் ஒரு பெருங்கூட்டத்துக்கு அரசியல்வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இருந்தபோதும் அவரது எதிராளிகளுக்கும் அவர் இன்னும் மனங்கவர்ந்த மக்கள் திலகம்தான்.
என் நினைவுகளில் மக்கள் திலகத்துக்கு நீங்காத ஒரு இடமுண்டு. அதில் ஒன்றும் இரு கருத்தில்லை.
நன்றி ! வல்லமை இணைய இதழ் 27 பிப்ரவரி 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !