திங்கள், டிசம்பர் 26, 2011

புயலுக்கும் மழைக்கும் ஒரு கிழக்கு வாசல் !

( நாகப்பட்டினத்திலிருந்து... )
பாண்டியன்ஜி_____________________________




நாகப்பட்டினத்துக்கு வந்து ஏரத்தாழ ஒரு மாதத்துக்கு மேலாயிற்று. சொந்த ஊர்தான் என்றாலும் இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடங்களில் இத்தனை நாட்கள் இதுபோல் தொடர்ந்தாற்போல் தங்க நேரிட்டதில்லை .அன்று மின் இயல் இரண்டாமாண்டு பயின்றபோது என் வசதிகளைக் கருத்தில் கொண்டு எங்கள் குடும்பமே நாகைக்கு இடம் பெயர நேர்ந்தது.இப்போது நாற்பது வருடங்கள் நகர்ந்து விட்டது.நான் முழுமையாக நாகையில் வசித்த காலம் நான் தொழிற்கல்வி பயின்ற மூன்றாண்டுகள்தாம் என்று நினைக்கிறேன்..படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த பிறகு இப்படியெல்லாம் நீண்ட நாட்கள் இங்கு தங்கியதில்லை. அவ்வப்போது கிடைக்கின்ற தற்செயல் விடுப்புகளிலும் பண்டிகை கால விடுமுறைகளிலும் அவசரம் அவசரமாக வந்து போனதுண்டு.

பெரும்பாலும் எங்களூரில் நிகழுகின்ற சம்பவங்களை செய்தித்தாள்கள் மூலமாகவே அறிந்திருக்கிறேன். இரண்டாண்டு காலம் பொறியாளனாக பணியாற்றிய கொரடாச்சேரி எங்களூருக்கு மிக அருகிலிருந்தபோதும்கூட பணிச்சுமை கருதி இதே நிலைதான்.

இப்போது என் வயது முதிர்ந்த தாயாரை கண்ணும் கருத்துமாக காத்துவரும் என் சகோதரனுக்கு வேலூரில் தவிற்க இயலாத அரசு அலுவல்.அதன் விளைவாக தாயின் முதுமைக்கு ஈடுகொடுக்க நாகைக்கு நான் வரவேண்டியதாயிற்று.
நாற்பதாண்டுகளுக்கு முன்னால் நான் வலம் வந்த நாகப்பட்டின நகரம் இப்போது என் கண்முன் ஒளிப்படமாக விரிகிறது.இரவும் பகலும் ஓயாது பேரொலி எழுப்பி உறக்கமின்மையை வெளிப்படுத்தும் வங்கக்கடற்கரையையும்... அதன் எதிரே விரிந்து பரந்து கிடக்கும் வரலாற்று காயங்கள் மிகுந்த நாகை நகரையும்.... வடக்கு தெற்காக நீண்டு கிடக்கும் இரண்டு இணைச்சாலைகள் மூன்றாக வகுக்கிறது.ஒருபுறம் இரண்டு சாலைகளும் ஒன்றாக இணைந்து நகருக்கு வடக்கே நாகூரைக் கடந்து கும்பகோணத்துக்கும் சிதம்பரத்துக்கும் பயணிக்கிறது.
நாகை நகருக்கு தெற்கே ஊடுருவிச் செல்லும் இரண்டு சாலைகளும் ஒன்றாக இணைந்து நகரின் முனையில் மேற்கே திரும்பி வேளாங்கண்ணிக்கும் திருவாரூருக்கும் செல்கின்றன. மேற்கு திசையிலிருந்து திருவாரூர் வழியாக நகருக்குள் நுழையும் புகைவண்டிக்கான இருப்புப்பாதை நகரின் மூன்று நிறுத்தங்களைக்கடந்து நாகூரை அடைகிறது.( இப்போது அகல பாதையாக மாற்றப்பட்டு காரைக்காலுக்கும் வேளாங்கண்ணிக்கும் ரயில் வசதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.)
நகரின் மையப்பகுதியில் தார்ச்சாலைக்கும் கடற்கரைக்கும் இடையே காணப்பட்ட மிகப்பெரிய அரசுமருத்துவமனை வளாகம் ஒருகாலத்தில் நாகை மண்ணுக்கு பெருமை சேர்த்தவை.அன்னாளைய மருத்துவர்களின் நேர்மை மிக்க திறன் வாய்ந்த பணி இன்றும் மறக்கமுடியாதவை. மருத்துவ மனை பெற்றிருந்த சகல வசதிகள் வேறு நகரங்களில் அன்று காணமுடியாதவை.
அதனையொட்டி காணப்பட்ட அளவிற் பெரிய பாரதிபூங்கா மாலை வேளைகளில் ரம்மியமாக காட்சி தரும் .மையத்தில் இருந்த குட்டி நூலகமும் அதன் உச்சியில் ஒலிக்கும் வானொலி நிகழ்ச்சிகளும் நெஞ்சை விட்டு அகலாதவை.சாலையின் மேற்கு திசையில் காணப்பட்ட பிரமாண்டமான அவிரித் திடல் கண்டவர் எவரும் மறந்திட இயலாதது. மாலை நேரங்களில் மையத்தில் அமையப்பெற்ற மேடையிலிருந்து அரசின் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.வயது முதிர்ந்தோர் சின்னஞ்சிறு குழைந்தகளுடன் ஆங்காங்கே அமர்ந்து வனொலி நிகழ்ச்சிகளையும் மாலைநேர கடற்காற்றையும் சுவாசிப்பதை பார்த்திருக்கிறேன். திடலெங்கும் இளைஞர்கள் கூட்டம் ஆங்காங்கே கால்பந்து கூடைப்பந்து விளையாட்டுகளை மிகுதியாக விளையாடுதல் பார்ப்பதற்கு பரவசமூட்டும்.இன்று விளையாட்டுகளில் முன்னிலை வகிக்கும் கிரிகெட் ஆட்டத்தை அன்று எவரும் விளையாடி நான் பார்த்ததில்லை.சில சமயங்களில் அரசியல்கட்சிகளின் பொதுகூட்டங்களும் அனல்பறக்க நடைபெருவதுண்டு.பாரதப்பிரதமர் பண்டித நேருவும் திராவிட இயக்கத்தலைவர் பேரறிஞர் அண்ணாவும் வெவ்வேறு சமயங்களில் பேசியபோது மட்டுமே அவிரித்திடல் முழுமையாக நிறைந்து வழிந்ததை பார்த்திருக்கிறேன்.குட்டித்தலைவர்களின் கனல் கக்கும் அரசியல் கூச்சல் பெரும்பாலான சமயங்களில் கடைத்தெரு அருகாமையில் காணப்பட்ட அபிராமி அம்மன் திடலில் நிகழ்வதுண்டு.

அவிரித்திடலையொட்டி சுற்றுச்சுவர்கள்அமைக்கப்பெற்ற பாதுகாப்பான பகுதியில் நீதிமன்றவளாகமும் அரசின் முக்கிய செயலகங்களும் இயங்கிவந்தன.காவல் நிலையம் ஒன்றும் கைதிகளின் கொட்டடியும் அங்கேதான் இருந்தன..இன்றும் அந்த கட்டிடங்கள் அரசின் உபயோகத்திலிருப்பதை காணமுடியும்.

நகராட்சி நிர்வாகமும் கிருத்துவ தன்னார்வ நிருவனங்களும் பல்வேறு கல்வி நிருவனங்களை சிறப்பாக நடத்தி வந்தன.ஒருசில இந்துக்களும் சிறப்புமிக்க கல்விக்கூடங்களுக்கு சொந்தக்காரர்களாயிருந்தனர்.அன்று நாகையை ஒட்டி காணப்பட்ட வலிவலம்தேசிகர் பாலிடெக்னிக்கும் அரசுக்கு சொந்தமான பழம்பெரும் தொழிற்பயிற்சி பள்ளியும் இந்தப்பகுதி இளையதலைமுறையின் எதிர்காத்துக்கு உத்திரவாதமாகவும் தமிழகத்திலேயே மதிப்புமிக்கதாகவும் கருதப்பட்டது. 
அறுபதுகளில் துவக்கப்பட்ட அரசு விரைவுபோக்குவரத்து கழகம் அன்னாளிலேயே தொலைதூர இரவுப்பேரூந்துகளின் மூலம் பக்கத்து மாநிலங்களின் பெரு நகரங்களை நாகையுடன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.
நாகையில் இருந்த இரண்டு திரையரங்குகளில் பாண்டியன் திரையரங்கு தமிழக திரையரங்குகளிலேயே அபரிதமான கொள்ளளவு கொண்ட அரங்காக பேசப்பட்டது.
தமிழகத்தில் பரவிக்கிடந்த பல்வேறு மதங்கள் வெவ்வேறு காலங்களில் நாகையிலும் ஆதிக்கம் செலுத்தின. சைவர்கள் காலத்தில் நாகைநகரம் திரு நாகைக்கரோணம் என்று அழைக்கப்பட்டது.வைணவம் உச்சத்திலிருந்தபோது திருநாகை என்று சொல்லப்பட்டது.பௌத்தம் பரவியிருந்தபோது நாகநகரம் என்று பேசப்பட்டது.மகதமன்னன் அசோகன் எழுப்பிய பௌத்தவிகாரங்களின் அடையாளங்களை நகரின் ஓரங்களில் நான் பார்த்திருக்கிறேன்.சீனபயணியாக வந்த மார்க்கோபோலோ எழுதிச் சென்ற குறிப்புகளிலும் நாகை நகர் சிறப்பாக பேசப்பட்டதை அறிந்திருக்கிறேன்.

அதைப் போலவே இஸ்லாமிய மத குரு மீரானின் வருகைக்குப்பிறகு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாகையைச் சுற்றி பரவலாக தோன்றத்துவங்கின.பின்னாளில் நாகூரில் ஏற்பட்ட அவருடைய சமாதி தொழுகைக்குறியதாயிற்று.

அதன் விளைவாக நாகூரும் வேளாங்கண்ணியும் நாகையின் சிறப்புக்கு துணைநின்றது. 

எம்மதத்தையும் சமமாக நேசிக்கிற இந்துக்கள் வழிபடும் பல்வேறு பாடல் பெற்ற தலங்கள் இந்தப்பகுதியிலேதான் நிரம்ப காணப்பட்டன.இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்துக்களோடு மீனவர் சமூகமும் வழிபடும் அருள்மிகு நீலாதாட்சி அம்மன் திருக்கோயிலும் நெல்லுகடை மாரியம்மன் கோயிலும் நாகைக்கு புகழ் சேற்பவை.நாகையைச்சுற்றி பல்வேறு புகழ்மிக்க தலங்கள் இருந்தாலும் நாகைக்கு மிக அருகில் உள்ள சிக்கல் சிங்காரவேலன் திருக் கோயிலை அறியாதார் இலர்.

அதோடு மட்டுமின்றி அத்தனை மதகோட்பாடுகளுக்கும் மாறான கருத்துக்களை கொண்ட சுயமரியாதைச்சிந்தனைகளுக்கு வித்திட்ட திராவிட இயக்கத்தின் தொட்டிலாகவும் இந்த பகுதிதான் காணப்பட்டது. 
ஆண்டுக்கு ஆண்டு கடும் புயலையும் தொடர் மழையையும் தமிழகத்துக்கு கொண்டுவரும் கிழக்கு வாசலாகவேநாகைநகர்இருந்திருக்கிறது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டு தமிழக அரசுக்கும் தமிழ் மண்ணுக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்யும் நாகப்பட்டினத்தின் பூகோள அமைப்பு அதர்க்கேற்றவாறே அமைந்திருந்தது.வரலாற்று ஏடுகளிலும் சரித்திர சுவடிகளிலும் முக்கிய இடத்தை பற்றியிருந்த நாகை நகரம் என்னைப் பொறுத்தவரை பெருமையும் கர்வமும் கொள்ளத்தக்கதாகவே இருந்திருக்கிறது. நகர கட்டமைப்பிற்கேற்ற மக்கள் தொகை அன்றைய நகரத்தின் பொலிவுக்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருந்தது.காவிரியைப்பொருத்தவரை தமிழகத்தின் கடைகோடி நகரமாக நாகை இருந்தபோதும் காவிரி நீர் கணிசமாக எட்டிய காலம். நீர்வளமும் நிலவளமும் நிறைந்து காணப்பட்ட சமயம்.நகரெங்கும் ஆங்காங்கே பெரிதும் சிறிதுமான நீர் நிலைகள். அவற்றிலே நீளதிலும் அகலத்திலும் வியக்கத்தக்கதாக இருந்த அக்கரைக்குளம் முக்கியமானது.பெரிதும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்கள்.அதன் விளைவாக கம்யூனிச சித்தாந்தம் இன்றும் மிச்சமிருக்கும் பகுதியாக நாகை பேசப்படுகிறது.விவசாயத்துக்கு அடுத்தபடியாக கொடிகட்டி பறப்பது மீன்பிடித் தொழில்.ஏறகுறைய எண்பத்தி நான்கு மீனவ கிராமங்கள் கடற்கரையோரம் வங்கக்கடலையே சுவாசமாக கொண்டிருந்த காலம்.இப்போது அய்ம்பத்தி நான்கு கிராமங்களாக சுறுங்கிப் போயிருப்பதாக பேசுகிறார்கள்.இந்த நகரின் பணபரிவர்த்தனைகளுக்கு மீன்பிடித் தொழிலின் பங்கு கணிசமானது என்றே கருதுகிறேன்
.இந்த மண்ணிலிருந்து திரைகடலோடி திரவியம் தேடப்போனவர்களின் பெரும்பாலான குடும்பங்கள் நாகையையே சூழ்ந்திருந்தன.அதன் விளைவாக அன்னியதேசத்தில் அதிசயமாக காணப்பட்ட பல்வேறு நவீன பொருள்கள் நாகையில் விற்பனைக்கு கிடைத்தன.

கடந்தகால கனவுகளில் மூழ்கிப்போயிருந்த நான் இப்போது  கரைஏறுகிறேன் .நிழல்களை மட்டுமே நேசித்துவந்த எனக்கு நிஜங்கள் தரிசனம் தருகிறது.எனது கர்வமிக்க நாகை இப்போது எப்படி இருக்கிறது.பழமை பேசிப்பேசி புளித்துப்போயிருந்த எனக்கு சமீபத்திய நாட்கள் அதை சாத்தியமாக்கிற்று.

பன்னெடுங்காலமாக கடல்வாணிபதற்கேற்ற துறைமுகமாக கருதப்பட்ட நாகப்பட்டினம் இப்போது துறைமுக தகுதியை இழந்திருக்கிறது. மாறாக தனியொருமாவட்டமாக உருவெடுத்திருக்கிறது.அதன் விளைவாக அரசு அலுவலகங்கள் ஆங்காங்கே எழும்பியிருக்கின்றன. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.பணப்பரிமாற்றம் அதிகரித்திருக்கிறது.புதிய புதிய வங்கிகளின் கிளைகள் தோன்றியிருக்கின்றன.வணிக வளாகங்கள் மிகுதியாக ஏற்பட்டிருக்கின்றன.வாகனங்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.இடம்விட்டு இடம் பெயர எளிதாயிருக்கிறது. வீடு வாசல் 
மாற்றம் பெற்றிருக்கிறது.உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஊழலும் ஒழுங்கீனமும் ஒளிவிட்டு பிரகாசிக்கின்றன.தமிழகம் முழுதும் அரங்கேறிக்களிக்கும் நீயா...நானா அரசியல் நாகை நகரையும் விட்டு வைக்கவில்லை.மக்கள் பெருக்கம் மயக்கமளிக்கும் வகையில் உயர்ந்திருக்கிறது.அதற்கேற்ற கட்டமைப்பிற்கு எவரும் முயற்சித்ததாக தெரியவில்லை.வரட்சியின் பிடியிலிருந்த பக்கத்து மாவட்டத்து மக்கள் பெருவாரியாக நாகைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.சமீபத்தில் சுழற்றியடித்த சுனாமிக்குப்பிறகு நாகை கடலில்கிடைக்கின்ற மீன்களின் வகைகள் மாறுபட்டு போனதைப்போலவே நாகை கலாசாரத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கரைவழிய வந்துசேரும் காவிரிநீர் இன்றைய அரசியல் சாக்கடையில் சிக்குண்டு கானல் நீராயிற்று.நகரின் பெரும்பாலான நீர்நிலைகள் புதர்களாக களைகள் மண்டிக்கிடக்கின்றன.நகரெங்கும் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே கழிவுநீர் குட்டைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.மீன்பிடித்தொழில் முன்னுக்கு வந்து விவசாயத்தை பின்னுக்கு தள்ளியிருக்கின்றன.ஆண்டுக்கு ஆண்டு வரட்சியும் கடும்புயலும் மாறிமாறி வந்து நகரின் வளர்ச்சியை தடுத்திருக்கிறது.அதேசமயம் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சுரண்டிக்கொழுக்க வழி ஏற்பட்டிருக்கிறது.அய்ந்து வீதிகளுக்கு தேர்வு செய்யப்பட் வார்டு உருப்பினரிலிருந்து ஒவ்வொரு அரசியல்வாதியின் தனிநபர் வருமானம் தறிகெட்டு உயர்ந்திருக்கிறது.உழைக்கும் மக்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உத்ரவாதசட்டம் இனிமேல்தான் தாக்கல்செய்யப்போகிறார்களாம்.மக்கள் பணத்தில் ஊதியம் பெரும் அதிகாரிகள் முதலுக்கே மோசம் செய்யத் துணிந்துவிட்டார்கள்.அதன் விளைவாக ஓய்வின்றி சுழலுகின்ற ஒரு சிலரது உழைப்பு களைக்கு கொட்டப்பட்ட நீராகிறது.மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணமும் தன்னார்வ தொண்டு நிருவனங்களின் சேவையும் சேரவேண்டிய இலக்கை எட்டாமலேயே போயிருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் வரட்சிக்கும் புயல் பரிகாரங்களுக்கும் பெறப்பட்ட நிதிகள் இப்படித்தான் கொள்ளை போயிருக்கின்றன..
ஏறதாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சுற்றித்திரிந்த சிவன்கோயில் தெற்கு வீதியும் கோயில் திருக்குளமும் ஒரு அங்குலம் கூட முன்னேற்றத்தை காணவில்லை.மாறாக ப்ளாஸ்ட்டிக் கழிவுகளால் சீரழிய நேரிட்டிருக்கிறது. 
பழமையைப்பேணி புதுமையை ஏற்க நாமும் நமற்கேற்பட்ட அரசும் மறந்து வெகு காலமாகிறது.அதன் விளைவாக மிகப்பழமைவாய்ந்த பூங்கா அழிக்கப்பட்டு மருத்துவமனைக்கான கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.மருத்துவத்துக்கான நவீன வசதிகளை ஏற்படுத்தியும் தகுந்த பராமரிப்பின்றி மருத்துவ வளாகம் ஊழலில் திளைத்திருக்கிறது.
வியப்பிற்குறிய விளையாட்டுத்திடல் பேரூந்து நிலையமாக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கொருமுறை நாகூருக்கும் வேளாங்கண்ணிக்கும் வரும் பக்தகோடிகள் இப்போதெல்லாம் ஆண்டுமுழுதும் வந்து போகிறார்கள்.பேரூந்து வளாகத்தில் வீசப்பட்ட கழிவுகளும் மருத்துவமனை வெளியேற்றிய மருத்துவ கழிவுகளும் நகரை சீரழிக்கிறது.
இவையெல்லாம் 
மக்கள் பெருக்கம் உயர உயர தமிழகம் முழுதும் ஏற்படுகிற இயல்பான நிலைதான் என்றாலும் இதயத்தில் ஏற்படுகிற நெருடல்களை தவிற்க முடியவில்லை.


இடுகை 0081

1 கருத்து:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !