திங்கள், ஜூலை 08, 2013

கிருமி !

வில்லவன் கோதை

“  வாங்க..தொரசாமிம் வாங்க.. “
வரவேற்றுக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கினார் செந்தாமரைக்கண்ணன். இடுப்புக்குமேலே கட்டப்பட்ட மெல்லிய கட்டமிட்ட லுங்கி கைவைத்த வெள்ளை பனியன் கனத்த உடம்பு. கையிலே ஏதோ புத்தகம்.
துரைசாமியும் சிதம்பரமும் செந்தாமரைக்கண்ணனுக்காக இருக்கைகளில் காத்திருந்தனர்.
‘’’ காலேல நாலு மணிக்குத்தான் தருமபுரிலேந்து வந்தேன். சர்வகட்சி  சார்பா ஒரு விசிட்.   ஒரு ஜோடி புறாக்களிடையே ஏற்பட்ட ஏற்பட்டகாதல் வெவகாரம் அஞ்சாறு கிராமங்களையே அழிச்சிடிச்சி. ஓடறது ஒரே ரத்தம்ண்ணு இந்த சனங்களுக்கு இன்னும் புரியமாட்டேங்குதே.  “‘
வசதியாக எதிர் இருக்கையில் அமர்ந்தார் செந்தாமரைக்கண்ணன்.
‘’ காலமும் கல்வியும்தான்யா மாற்றத்த ஏற்படுத்தணும்.’’
என்ற துரைசாமி
‘’ ஒங்ககிட்ட போன்ல சொன்னனே அந்த சிதம்பரம் இவர்தாங்க. ஆலத்தம்பாடில ஒரு மிராசு. அவரு பையனுக்குத்தான்  கல்யாணம். அய்யாதான் வந்து நடத்தி வெக்கணும். ’’
‘’ வணக்கமுங்க..  ‘’
மெல்ல எழுந்து கைகூப்பினார் சிதம்பரம்.
  தேதி என்ன சொன்னீங்க..’
மேசையின் அடியில் கிடந்த நாட்குறிப்பை தேடி எடுத்தார் செந்தாமரைக்கண்ணன்..
‘’ மார்ச் இருபத்தைந்து. இன்னும் ஒரு மாசம் இருக்கு . ‘’
கையிலிருந்த செய்தித்தாளை மோடாவில் வைத்துவிட்டு பதிலளித்தார் துரைசாமி.
செந்தாமரைக்கண்ணனின் சாதகமான பதிலுக்கு காத்திருந்தார்   சிதம்பரம்.

‘’ ஒண்ணும் ப்ராபளம் இல்ல  . இருபத்தெட்ல பீகார்ல ஒரு கான்பரன்ஸ.ஸ்டேட் ரெப்ரஸ்னேட்டிவா போறேன்.’
பேசிக்கொண்டே நாட்குறிப்பில் மார்ச் இருபத்தைந்தை சிம்பரம் வீட்டு திருமணம் என்று குறித்துக்கொண்டார் செந்தாமரைக்கண்ணன்
“ தொரசாமியே இந்த கல்யாணத்த நடத்தி வெக்கலாம்.  தகுதியான மனுஷன். ”
சிதம்பரத்தைப்பார்த்து பேசினார் செந்தாமரைக்கண்ணன்
சிதம்பரமும் அதைத்தான் விரும்பினார். பழக்கப்பட்ட மனுஷன் .ஏரக்குறைய அனுசரிச்சு போகக்கூடியவர் . .துரைசாமிதான் செந்தாமரைக்கண்ணனை கூப்ட்டுகலாமுண்ணார்.
‘’ ஒங்களுக்கு இருக்கிற அனுபவத்துக்கும் அறிவுக்கும் நான் சாதரணங்க. எத்னையோ குடும்பத்துக்கு நல்லத சொல்லி வாழ்க்கையை தொவக்கி வெச்சிருக்கீங்க.ஒங்களமாதிரி எனக்கு அவ்ளவா பேச வராது.. ‘’
‘‘ அது இல்ல தொரசாமி . ஏத்துகிட்ட கருத்துகளுக்கு ஒப்ப வழுவாம வாழறது சாதாரணமில்ல அத நீ செய்ற.. சரி கெடக்கட்டும். கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னால என்னோட பேசுங்க. கண்டிப்பா வர்றேன். ‘’
தொடர்ந்து சில நிமிடங்கள் பல்வேறு கோணங்களில் பேச்சு நிகழ்ந்தது. செந்தாமரைக்கண்ணனின் உதவியாளர் ராயப்பன் தேனீர் கொண்டுவர பருகிவிட்டு துரைசாமியும் சிம்பரமும் எழுந்தனர்.
‘’ அப்ப நாங்க வர்ரமுங்க.. ‘’
எழுந்து விடை பெற்றுக்கொண்டார் சிதம்பரம்.

த்து ஆண்டுகளுக்குமுன் ஒரு சாய்ங்கால வேளையில் திருத்தருப்பூண்டி தெற்குவீதியில் அடித்தட்டு மக்களுக்கான மாபெரும் கூட்டமொன்று கூடியது. வட இந்திய தலைவர்கள் பலர் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் செந்தாமரைக்கண்ணன் ஆற்றிய பேருரை துரைசாமியை இன்றுவரை விடுவிக்கவில்லை.. அதன்பின் அவருடைய குரல் சுற்றுவட்டாரத்தில் எங்கு ஒலித்தாலும் முதலில் நிற்பவர் துரைசாமியாகத்தான் இருக்கும்.

.காலப்போக்கில் துரைசாமி செந்தாமரைக்கண்ணனுக்கு உற்ற நண்பரானார்.
வைதீகமும் சாதீய நெறிகளும் நிறைந்திருந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செந்தாமரைக்கண்ணன் பகுத்தறிவு இயக்கங்கள் பால் ஈர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழு நேர தொண்டரானார்..பேச்சுக்கலையில் இயல்பாகவே தேர்ந்திருந்த செந்தாமரைக்கண்ணன் வெகு சீக்கிரத்தில் முன்னணித் தலைவரானதில் அப்படியொன்றும் வியப்பில்லை...

நாட்கள் பறந்தன.
சிதம்பரம் வீட்டு கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சிதம்பரம் திருத்தருபூண்டிக்கும் திருவாரூருக்கும் கல்யாண வேலையாக அலைந்து கொண்டிருந்தார். சீர்திருத்த திருமணம் என்றாலும் செய்ய வேண்டிய செலவுகளை செய்துதான் ஆக வேண்டியிருந்தது.பஞ்சத்தில் புரளும் புரோகிதர் கூலிய மட்டும் மிச்சப்படுத்தலாம்.

செந்தாமரைக்கண்ணனை சரியான நேரத்துக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு இப்போது துரைசாமியிடம் இருந்தது.
கைபேசியில் தொடர்பு கொண்டார் துரைசாமி.
அவர் தொடமுடியாத எல்லையில் இருப்பதாக அது சொன்னது . குழப்பமும் பரபரப்பும் மிகுந்த சூழலில் வீட்டுக்குள் நுழைந்தார்

மேசையில் ஒரு பதிவு தபால் அவர் பார்வைக்கு காத்திருந்தது .பழகிய போஸ்ட்மேன் கடிதத்தை கொடுத்திருக்கக்கூடும்.

காலையிலிருந்து எதிர்பார்த்த செந்தாமரைக்கண்ணன்தான் எழுதியிருந்தார்.
கடிதம் எழுத வேண்டிய அவசியம்....      துரைசாமிக்கு ஒரே குழப்பம். அவசரம் அவசரமாக கடிதத்தை பிரித்தார் துரைசாமி.
கருப்பு வண்ணத்தில் மணிமணியான எழுத்துக்கள்.

அன்பார்ந்த துரைசாமிக்கு.
பேசுவதற்கு சொற்கள் கிடைக்காதபோது  கடிதங்களைத்தான் இன்னுமும் நாடவேண்டியிருக்கிறது.
இருபத்திநான்கு வயது வரை சாதீய சமூகத்திலும் பக்தி நெறியிலும் உழன்றிருந்த நான் இருபத்தியய்ந்தாம் வயதின் துவகத்திலே அந்த ஐதீக மரபுகளிலிருந்து விடுபட்டேன்.அதற்கு நான் பயின்ற கல்வியும் நான் பார்த்தறிந்த நிகழ்வுகளுமே காரணமாக இருக்கக்கூடும் ..இந்த பத்தாண்டுகளில் சாதியற்ற சமூகத்தைப்படைக்க எனது பயணம் தொடர்ந்தது. ஏரத்தாழ அறுபத்தியெட்டு சாதிமறுப்பு திருமணங்களை நிகழ்த்தி இந்த குறுகியகாலத்தில் எவரும் நிகழ்த்தாத சாதனைகளை புரிந்தவன் நான்.
இப்போது உனக்களித்த உறுதியை முடித்துவைக்க முடியாமல் திணறுகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் என் ஒரே மகள் தாழ்த்தப்பட்ட ஒருவனை மணமகனாக முடிவு செய்தபோது என்வாழ்நாளில் முதன்முறையாக இடற நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால் என் உடலில் பாய்ந்திருந்த ரத்தத்தில் ஒளிந்து கிடந்த சாதீய வைரஸ் இப்போது வெளிக்கிளம்பி வெறியாட்டம் போட்டுருக்க வேண்டும்.
ஆமாம் துரைசாமி. என் ஒரே மகளின் முடிவை இந்த பகுத்தறிவுவாதியால் ஜீரணிக்க  முடியவில்லை. ஒருவேளை அவளே ஓரு மேல்சாதியில் இந்த முடிவெடுத்திருந்தால் இன்னும் நான் தொடர்ந்து அடுத்தவர்களுக்கு   உபதேசித்துக்கொண்டு ருப்பேன் என்றே கருதுகிறேன்.
இப்போதும் சாதியற்ற சமூகத்தை படைக்கவேண்டுமென்ற அச்சிலிருந்து நான் விலகவிட்டதாக கருதவில்லை..சாதரண மனிதன் இயல்பாக சுமக்கின்ற கடந்தகால மறபுகள் என்னையும் அழுத்துகிறது என்பதைத்தவிற வேறில்லை..
அல்லது நான் பயின்ற பகுத்தறிவு கல்வியும் பார்த்தறிந்த நிகழ்வுகளும்  உளமாற உணரப்படவில்லை என்றே கருதுகிறேன்.

இது என்னைப் பொருத்தவரை JUST A SLIP  அதேசமயம் எனக்கு NOT A FALL  என்பதை நான் அறிந்திருக்கிறேன். ..ஜாதீய கலவரங்களுக்கான அடிப்படை காரணம் இப்போது எனக்கு புரிகிறது. வெறியோடு கலவரங்களில் இறங்கியவர்களின் வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடிகிறது....இது அடுத்தடுத்த தலைமுறைகளில் மட்டுமே  நீங்கக்கூடும்.
சிதம்பரத்தின் மகனின் திருமணத்தை நீயே தலைமை யேற்று முடித்துவை.. ஊருக்கு உபதேசம் எதுவும் செய்யாவிட்டாலும் உன்னளவில் உறுதியாக நிற்பவன் நீ. வேறென்ன வேண்டும். பொறுத்துக் கொள்ளவும்.
முன்னதாக குறிப்பிட்டதைப்போல் பீகாரில் நிகழ விருக்கும்  சாதீய சமூக கருத்தரங்குகளுக்கு முன்னதாகவே செல்லப்போகிறேன். உரையாற்ற அல்ல. உரை கேட்கும் மாணாக்கனாக.
என்றும் உன் ...                                                                                                                                                   செந்தாமரைக்கண்ணன்.

செந்தாமரைக்கண்ணனின் நேர்மை துரைசாமிக்கு அவர் மேல் மேலும் வலு சேர்த்தது அடுத்த நிமிடம் அவரோடு பேச வேண்டுமென்று தோன்றியது துரைசாமிக்கு. கைபேசியை தொடர்ந்து அழுத்தினார்.
செந்தாமரைக்கண்ணன் தொலைதூரத்தில் இருப்பதாக அது சொன்னது. தரைவழிப்பேசியை  அவரது உதவியாளர் ராயப்பன் எடுத்தார்.
‘’பீகார்ல நடக்கிற மாநாட்டுக்கு முன்னதாகவே அய்யா கெளம்பிட்டாங்க .சின்னம்மா கல்யாணத்லகொட  கலந்துக முடில..கட்சி விழா அவுங்களுக்கு அவ்ளவு முக்கியத்துவமா போய்ட்டுது. ‘’  
வருத்தத்தோடு பேசினார்     ராயப்பன்.                                              
கட்சி விழா அவ்ளவு... முக்கியத்....                                                    
அப்படியே இருக்கட்டும். .....
முடிவெடுத்தார்  துரைசாமி.

              ‘’ ன்னண்ணே தலைவர் கல்யாணத்துக்கு தவறாம வந்துடுவாரா...’’  ‘’
இரண்டுநாட்களுக்கு முன்னர் சிதம்பரம் பேசினார்.
             ‘’ அவருக்கு அர்ஜண்டா பீகார் .கான்பரன்ஸுக்கு போக  வேண்டியதாயிட்டு..   தமிழ்நாட்லேருந்து அவர அனுப்ராங்க. ஒன் ஆசைப்படியே நான்தான் இந்த கல்யாணத்த நடத்தி வைக்கப்போறேன். ‘’.
’’ ரொம்ப சந்தோஷம்.நான்தான் அப்பவே சொன்னனே. தலைவர்கள இந்தமாறி விஷேசங்களுக்கு சரியா வர மாட்டாங்கண்ணு.’’                                                               
துரைசாமிக்கு வேறு எதுவும் பேசத்தோன்றவில்லை.


இடுகை 0102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !