மாதொருபாகன்
சாரு நிவேதா
நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தேன். ஏனென்றால், தமிழ் இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் ஒத்தே வராது என்பதை என்னுடைய 26, 27 வயதில் வெளியான ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலிலேயே கண்டு கொண்டேன். அப்போதே என் மதிப்புக்குரிய நண்பர்களாக இருந்த கவிஞர் சுகுமாரன் முதற்கொண்டு அத்தனைத் தமிழ் இலக்கியவாதிகளும் அந்த நாவலைக் கொண்டாடோ கொண்டாடு என்று கொண்டாடினர். எனக்கோ அந்த நாவல் படு சராசரியாகத் தெரிந்தது. இவ்வளவுக்கும் அப்போது சுந்தர ராமசாமியுடன் நான் கடிதத் தொடர்பில் இருந்தேன். அவருடைய வீட்டு மொட்டை மாடியில் மாதந்தோறும் நடந்து கொண்டிருந்த காகங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மிக விருப்பமாக இருப்பதாக தில்லியிலிருந்து சு.ரா.வை முன்வைத்து இயங்கிக் கொண்டிருந்த கொல்லிப்பாவை இதழிலும் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனாலும் ஜே.ஜே. சில குறிப்புகள் சராசரிதான். ஜே.ஜே. பற்றிய என்னுடைய விமர்சனக் கட்டுரை அப்போதைய தமிழ்ச் சூழலில் எந்தப் பத்திரிகையிலும் வெளிவரும் நிலை இல்லாததால் நானே தில்லியில் அதை ஒரு பிரஸ்ஸில் அடித்து ஒரு துண்டுப் பிரசுரமாகக் கொண்டு வந்தேன். தில்லியில் தமிழ் அச்சகங்கள் ஒன்றிரண்டே இருந்தன. அதுவும் கல்யாணப் பத்திரிகை அடிக்கும் ட்ரெடில் அச்சகங்கள். தில்லி வாழ் தமிழர்களுக்கானது. அதிலிலிருந்துதான் மிகுந்த சிரமப்பட்டு அந்தத் துண்டுப் பிரசுரத்தைக் கொண்டு வந்தேன்.
அடுத்து, புதுமைப்பித்தன். சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியத்தின் தந்தை என்றால் புதுமைப்பித்தன் கடவுள். அவரும் எனக்கு சராசரியாகவே தெரிந்தார். (ஆனால் நகுலன் எனக்கு ஒரு ஆசானாகத் தெரிந்தார் என்பது இங்கே முக்கியம்.) இந்தக் காரணங்களினால்தான் நான் ஆரம்பத்திலிருந்தே தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு தீண்டத் தகாதவனாகவும் அருவருப்பானவனாகவும் தெரிந்தேன். இதே காரணத்தினால்தான் நவீன இலக்கியப் பிரதிகளை வாசிப்பதிலிருந்து ஒதுங்கினேன். பெருமாள் முருகனின் ஏறுவெயில் என்ற அவருடைய முதல் நாவலை பல ஆண்டுகளுக்கு முன் வாசித்து விட்டு பல காத தூரம் ஓடினேன். அவ்வளவு தட்டையாக இருந்தது அந்த நாவல். துளிக்கூட அதில் என்னால் ஒரு இலக்கிய அனுபவத்தை அடைய முடியவில்லை. அதிலிருந்து பெருமாள் முருகன் என்ற பெயரையே நான் உச்சரித்ததில்லை. ஏனென்றால், எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்குப் பிறகு அந்த விஷயத்தை நோண்டிக் கொண்டிருக்க மாட்டேன். அவர் எழுத்து மற்றவர்களுக்குப் பிடிக்கிறது. நல்லது. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம். அவ்வளவுதான் என் நிலைப்பாடு.
இந்த நிலையில்தான் மாதொரு பாகன் பிரச்சினையின் காரணமாக அதை வாசிக்கும் கட்டாயத்துக்கு நான் ஆளானேன். ஒரு மாதகால ராப்பகலாக உழைத்துக் கண் விழித்து ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழா கொண்டாடக் காரணமாக இருந்த என் வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லி இன்னும் நான் ஒரு பதிவு எழுதவில்லை. தருண் தேஜ்பால் தில்லியிலிருந்து அவனுடைய சொந்தச் செலவில் சென்னை வந்து போனான். விழா பற்றிய உன் கருத்தை எழுது, நாவலுக்கு எதிர்வினை எப்படி இருந்தது என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான். விரிவாக மின்னஞ்சல் செய்கிறேன், பொறு என்று மட்டுமே குறுஞ்செய்தி கொடுத்தேன். அவனுக்கும் ஒரு நன்றிக் கடிதம் எழுதவில்லை. இந்த நிலையில்தான் மாதொரு பாகனைப் படித்து எழுதினேன்.
.இனி ஜெயமோகனின் நீக்கப்பட்ட பதிவு:
ஜெமோ,
முடித்துவிட்டீர்கள். ஆனால் ஒரு கேள்வி. உங்கள் ‘அண்ணன்’ சாரு இப்படி எழுதியிருக்கிறாரே. http:// charuonline.com/blog/ பதில் உண்டா? skip தானா?
சாம்
அன்புள்ள சாம்,
அவரது கோணம் அது. முழு எரிச்சலில் எழுதியிருக்கிறார். அந்நாவலைப் பற்றிய அவரது கருத்து சரிதான். கொஞ்சம் ‘சென்சிடிவ்’ ஆக இலக்கியம் படிப்பவர்கள் அதை வாசித்தால் கற்பனை வரண்ட எழுத்து, அக எழுச்சியற்ற மொழி என்றே உணர்வார்கள். பெருமாள் முருகனின் இந்நாவல்களின் தரத்தை விட பல மடங்கு மேலாக பல்லாண்டுகளுக்கு முன்னரே சி.ஆர்.ரவீந்திரன், சூரியகாந்தன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்
மாதொருபாகன் ஒரு வகையான ‘அமெச்சூர்’ எழுத்து. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்டது அல்ல. அது எழுதப்பட்டதிலும் தமிழின் முக்கியமான பெரும்படைப்புகள் இருக்க அது சுடச்சுட மொழியாக்கம் செய்யப்பட்டதிலும் உலகம் முழுக்க கொண்டுபோகப்பட்டு தமிழிலக்கியமும் வாழ்க்கையும் இதுதான் என்று காட்டப்பட்டதிலும் உள்ள தந்திரங்கள் எரிச்சலூட்டுவதுதான்.
ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் அரசியல் நடவடிக்கை. அதற்கான அமைப்புகள், நிதிவலைகள் இங்குள்ளன. உலக அளவில் இன்று தமிழிலக்கிய முகங்களாக அறியப்படுபவர்கள் நால்வர் மட்டுமே– சல்மா, பாமா, பெருமாள் முருகன், இமையம். இவர்களை கொண்டு செல்லும் ஒரு பெரிய ‘சானல்’ செயல்படுகிறது. காலச்சுவடு,வ.கீதா,க்ரியா என அவர்கள் ஒரு பெரிய வட்டம். இவர்களில் இமையம் மட்டுமே இலக்கியவாதி.
இவ்வருடம் பல சர்வதேச விருதுக்களை மாதொரு பாகன் பெறலாம். ஏற்கனவே அதன் ஆங்கில ‘பிரமோட்டர்கள்’ அது இங்கே critically acclaimed நாவல் என்று ஊடகங்களில் சொல்லிவிட்டார்கள். அதை அங்கே வாசிப்பவர்கள் இங்குள்ள critics ஐ எண்ணி பரிதாபத்துடன் தலையாட்டிக்கொள்வார்கள். இவ்வளவுதான் தமிழில் சாத்தியம் போல என மனம் கனிவார்கள். இது எப்போதும் நிகழ்வதுதான்.
நான் இப்பிரச்சினையை இன்று நிகழ்வதுடன் கலந்துகொள்ள விரும்பவில்லை. இன்றுள்ள ஒரே கேள்வி இதுதான். ‘இலக்கியத்தில் எதை எழுதுவது எதை எழுதக்கூடாது என்பதை அந்தந்த ஊர் சாதி-மத- அரசியல் பிரமுகர்கள் தீர்மானிக்க வேண்டுமா? அவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் உட்கார்ந்தபடித்தான் எழுத்தாளன் செயல்படவேண்டுமா?’
மற்றதை பிறகு பேசுவோம்.
ஜெயமோகன்
ஜெ. குறிப்பிட்டுள்ள கடைசிப் பத்தி பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. நான் மயிலாப்பூரில் வசிக்கிறேன். மயிலாப்பூர் பெண்களைப் பற்றி நான் அவதூறாக எழுதினால் நிச்சயம் இங்கே உள்ள கவுன்சிலர், தெருக்கோடி தாதா, வட்டச் செயலாளர் போன்றவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் உட்கார்ந்தபடி தான் நான் செயல்பட வேண்டியிருக்கும். கருத்துச் சுதந்திரம் என்பது குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட சாதி, குறிப்பிட்ட மதத்துப் பெண்களை பாலியல்ரீதியாக இழிவுபடுத்துவதா ஜெயமோகன்?
------------------------------------------------------------------------------------------
பின்னூட்டத்தில் அருள்கூர்ந்து சாருவின் மொழியை மேற்கொள்ளாதீர்கள். - வில்லவன் கோதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !