வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

சாம்சங் என்ற தென்கொரிய பூதம் !

பாண்டியன்ஜி

இரண்டாண்டுக்கு முன் வாங்கிய என்னுடைய மடி கணினிக்கு     ( Laptop )  இப்போது ஒரு தடுமாற்றம். சாய்ந்து நிற்கும் அதன் ஒளித்திரையில் முதுமையின் ஒளிக்கோடுகள் ஆங்காங்கே தோன்றி மறையத் தொடங்கிய நேரம். பெருமழை பொழிவதர்க்கு முன்னால் தெளிந்த வானில் தாறுமாறாக தென்படுகிற ஒளிக் கீற்றுகளைப்போல அதன் சின்னத் திரையில் மயிரிழைக்கோடுகள் தோன்றி மறைந்தன.
என்னுடைய கடந்தகாலங்களில் எழுத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்தாலும் பல்வேறு காரணங்களினால் என்னால் அந்த பாதையில் பயணிக்க இயலாமற் போய்விட்டது. ஆனால் இப்போது முழுமையாக இயந்திர சூழலிலிருந்து விடுவிக்கப்பட்டதாலோ என்னவோ நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த என் கனவுகள் சிவந்து புகையத் தொடங்கின.
அப்போதுதான் என் எண்ணங்களை எழுத்தில் வடிக்கவும் இதழியல் கனவுகளை சாத்தியமாக்கி கொள்ளவும் எனக்கு இந்த மடிகணினி துணையாயிற்று.  24 * 7 என்பார்களே அது போன்ற  ஒரு கடுமையான உழைப்பை அந்த ஜீவன்  சந்திக்க நேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து எதிர்பாராமல் இழுக்கப்பட்ட கோடுகள் என் எழுத்துக்கு இடையூராயிற்று. மனதிற்குள் ஒருவித நெருடலையும் ஏற்படுத்திற்று.
இது போன்ற பழுதுக்கு கணினியின் மென் பொருள் காரணமல்ல   என்பதை உறுதி செய்து கொண்ட நான் சாம்சங்கின் வாடிக்கையாளர்  சேவைக்கு மின் அஞ்சல் செய்தேன். அடுத்த ஒரு மணியில் சாம்சங் வாடிக்கையாளர் சேவை மையம் கோடம்பாக்கம் ( chennai ) சன் இன்போ வுக்கு வழிகாட்டியது.வழக்கமான வாடிக்கையாளர்  சேவை நாம் அறிந்தவரை ஒரு சடங்குதான்.
அதன் விளைவாக அக்கம் பக்கம் காணப்பட்டவர்களின் அலட்சிய பார்வை..இருந்தபோதும் என்னுள் ஒரு நம்பிக்கை ஒளி. முதன் முதலாக சாம்சங் நிறுவனம் இந்த மண்ணில் காலடி வைத்தபோது வழங்கிய தொலைக்காட்சி பெட்டியில் ஏறதாழ இருபதாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட ஒளித்திரை பழுதை கிண்டியிலிருந்த சேவை மையத்தின் மூலம் மிக எளிதாக விலக்கிக்கொண்ட இனிய அனுபவம் எனக்குண்டு. அது கூட என் எதிபார்ப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
இந்த தருணத்தில் என் சிந்தனையைக் கிளருகிற இன்னொன்றையும்  இங்கே சொல்லியாகவேண்டும். இந்த  உலகமே  இணையத்தால் பின்னப்பட்ட வலையில் சிறைபட்டபோது அதற்கேற்பட்ட பயன்கள் அளவற்றவை. ஒவ்வொரு தேசமும் இப்போது கூப்பிடு தூரத்துக்கு வந்துவிட்டது .அதற்கெல்லாம் இணையம் வழங்கிய மின்னஞ்சல் முக்கியமான காரணமாயிற்று.
முன்பெல்லாம் முதல் நாள் அனுப்பிய அஞ்சலை அடுத்த நாளே பட்டுவாடா செய்த இந்திய அஞ்சல் துறையை பார்த்திருக்கிறேன்.முதல் நாள் அனுப்புகிற உள்ளூர் அஞ்சல் கூட அன்றே பட்டுவாடா செய்யப் பட்டதையும் கண்டிருக்கிறேன்.
காலம் செல்லச்செல்ல வழக்கமாக தொழிலில் ஏற்பட்ட சலிப்பலோ என்னவோ மற்ற அரசு ஊழியர்களைப்போல அஞ்சல் உழியர்களுக்கு ஏற்பட்ட ஒருவித சலிப்புணர்வு இப்போது கூரியர் சர்வீஸ் கொடிகட்டி பறக்க காரணமாயிற்று.
கூரியர் நிறுவனங்கள் கூட துவக்க காலத்தில் அடுத்த நாளே அஞ்சல்களை சிரத்தையோடு பட்டுவாடா செய்ததை பார்த்திருக்க முடியும். எதிர்பார்த்ததைப்போலவே தனியார் நிறுவனங்களிடையே ஆரம்பத்தில் காணப்பட்ட சிரத்தை நாளாக நாளாக இருந்த இடம் தெரியாமல் போனதென்னவோ உண்மை.
இந்த நிலையில் இணையம் வழங்கிய மின்அஞ்சல் இந்த மண்ணுலகுக்கே வரப்பிரசாதமாயிற்று. நடுத்தர வர்கத்தினரிடையேயும் படித்த இளைஞரிடையேயும் முழு வீச்சில் இடம் பிடித்தது.. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கூட மின்அஞ்சல் வசதியை ஏற்படுத்திக் கொண்டன. உலகத்தின் பல்வேறு மூலைகள் பக்கத்தில் வரத்துவங்கின.
இருந்தபோதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த அற்புத கொடையை வெரும் பெருமைக்காகவே வெளிப்படுத்திக்கொண்டதாக நினைக்கிறேன்.முக்கியமாக அரசு நிறுவனங்கள் தங்களுக்கு வரும் மினஞ்சலுக்கு பதிலளிக்கவேண்டியது அவசியமானதாக கருதியதாகவே தெரியவில்லை.அதிலும் இந்திய தொலைத்தொடர்புத்துறைக்கு அனுப்பப்பட்ட பலவேறு அஞ்சல்களுக்கு நான் இதுவரை பதிலேதும் பெற்றதாக நினைவில்லை.இந்த அற்புதசேவையை யாரும் முழுமையாக   பயன்படுத்திக்கொள்ளாதது ஒருவகையில் துரதிஷ்டம்தான்.
அந்தவகையில் சாம்சங் நிறுவனத்துக்கு நான் அனுப்பிய அய்ந்தாறு மின்னஞ்சலுக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை என்னை வியப்பில் ஆழ்த்தியது. பெரும்பாலான நிறுவனங்கள் தானே இயங்கும் ஒலிகருவிகளிலோ தகவல் அனுப்பும் இயந்திரங்களிலோ இணைத்து வாடிக்கையாளர்களை சலிப்படைய செய்வதை பார்த்திருக்கலாம்.
அது போல அல்ல. என்னுடைய மின்னஞ்ல்களுக்கு அடுத்த அரைமணியில் பதிலளித்தது மட்டுமின்றி எனது கணினி பழுது நீங்கி என்னிடம் வர சென்னை பிராந்திய மேனேஜர் எடுத்துக்கொண்ட பிரத்தியோக முயற்சிகள் ...இன்னும் நாம் கற்க வேண்டியவை.
நெஞ்சை நெருடுகிற எந்த நிகழ்வையும் சற்று பின்னோக்கி பாற்கின்ற வழக்கம் இயல்பாகவே எனக்குண்டு. அந்தவகையில் சாம்சங் கடந்துவந்த நெடும்பயணம் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.எப்படி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உழைப்பு..

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னால் கொரியாவின் பெருநகர் ஒன்றில் விதைக்கப்பட்ட விதை இன்று மாபெரும் விருட்ஷமாக உருவெடுத்து உலகெங்கும் வேர்பரப்பி தன்வணிகத்தையும் நம்பிக்கையும் பெருக்கிக்கொண்டிருக்கிறது.
1910 ல் கொரியாவின் சீஅவுல் ( seoul ) நகரில் மிக பெரிய நிலப்பிரபு ஒருவருக்கு மகனாய் பிறந்தவர் லீ பயுங் சுல் ( lee byung - chull ) . லீ பயுங் கல்லூரி நுழைந்த வேளை ..எதிர்பாராமல் தன் தந்தையை இழக்க நேரிடுகிறது. குடும்பத்தின் சுமையையும் அளவற்ற செல்வத்தையும்  காக்க வேண்டிய பொறுப்பு இளைஞன் லீ பயுங் தலையில் சுமையாக இறங்குகிறது.மாணவ வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. பட்டப்படிப்பு பாதியிலே நிற்கிறது.அப்போது தன் கன்னி முயற்சியாக அவன் துவக்க நேர்ந்த அரிசிஆலை எதிர்பார்த்த அளவுக்கு இயங்காமற் போகிறது.
1938 ல் லீ பயுங் 14 ஊழியர்களுடன் இயங்கிய அந்த நிறுவனத்தை  ஒரு சரக்கு கையாளும் போக்குவரத்து நிறுவனமாக மாற்றியமைக்கிறார். அதற்கு மூன்று நட்சத்திரங்களை அடையாளமாக்கி சாம் சங் என்று பெயரிடுகிறார். சாம்சங் என்ற கொரிய சொல்லுக்கு மூன்று நட்சத்திரங்கள் என்ற பொருளாம்.
கொரியா தேசமே சப்பானியர்களின் ஆதிக்கத்துக்கு கட்டுப் பட்டிருந்த இருந்த நேரம்.சாம்சங் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்க சக்திகளுக்கு ஈடு கொடுக்கவேண்டியிருந்தது.அத்தோடு முடிந்து போகவில்லை.
அதையடுத்து கொரியர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை. .அத்தனைக்கும் ஈடு கொடுத்து தனது இருப்பிடத்தை தொடர்ந்து மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம். கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருந்தாலும் சாம்சங்கின் வளர்ச்சியும் லாபமும் பாதிக்கப் படவில்லை. லீபயுங்கின் அயராத உழைப்பு ,
1953 ல் சீஅவுல் சர்க்கரை ஆலை ஏற்படுத்தப்படுகிறது.
சர்க்கரை ஆலையின் அமோக வளர்ச்சி மேலும் மேலும் சாம்சங் புதிய துறைகளில் கால் வைக்க காரணமாயிற்று. துணி ஆலை துவங்கப் படுகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் இறங்கிறது.காப்பீடு துறையில் கால் வைக்கிறது. வீடுகளுக்கு தேவையான அன்றாட பொருள்களையும் விட்டுவைக்கவில்லை. மொத்தத்தில் குண்டூசியில் இருந்து பாதுகாப்பு ராணுவவிமானங்கள் வரை சாம்சங் ஆதிக்கம் நீளுகிறது.
1961 ல் தென்கொரியாவில் புதிய அரசு அமைந்தபோது ஏறத்தாழ லீ பயுங்கின் காலம் முடிவுக்கு வருகிறது.கொரியாவின் அனைத்து வர்த்தக கூட்டமைப்பின் உயர் பதவியிலிருந்த லீபயுங் கொரியாவின் உச்ச செல்வந்தர் என்ற புகழுடன் 1987 ல் மறைகிறர்.அவருக்குப்பிறகு குன் ஹீ லீ சாம்சங்கில் பொறுப்பேற்கிறார். அப்போதுதான் சாம்சங் உலகம் முழுதும் தன் சிறகை விரிக்கத்துவங்குகிறது.1969ல்உதயமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் முழுவீச்சில் தன் உற்பத்தியை துவக்குகிறது.
உலகெங்கும் அனைத்து துறைகளிலும் வேர் பரப்பிய சாம் சங் நிறுவனம் உலகளாவிய வர்த்தகத்துக்கு இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டபோது பிறப்பிலேயே அணுமின்னியலை தொழிலாக கொண்ட பல்வேறு நிறுவனங்களுடன் காலடி எடுத்து வைத்தது. இந்த தேசத்தின் ஒவ்வொருமூலையிலும் தன் ஆலைகளை நிறுவி தொலை நோக்கு பர்வையுடன்  செயல்பட்டு அனைத்து நிறுவனங்களிலும் இன்று முன்னணியில் நிற்கிறது சாம்சங்
இந்திய மக்களின் ஒவ்வொரு இல்லத்திலும் பல்வேறு வழிகளில் சாம்சங் நுழைந்திருக்கிறது. பெண்மணிகளுக்கு பாத்திரம் கழுவுவதிலிருந்து சமையல் செய்து துணிகளை துவைத்து உலர்த்துவதுவரை துணை நிற்கிறது.தொலைக்காட்சி பெட்டிகளை தந்து அவர்களின் ஓய்வை மகிழ்வுக்குள்ளாக்கிறது. பழம் காய்கனிகள் சேமிக்க துணை நிற்கிறது.கணினி மருத்துவத்துறைகளில் முழுவதும் நுழைந்து எவரும் எட்டமுடியாத உயரத்தை எட்டியிருக்கிறது. இந்த தேசத்தில் வர்க பேதமின்றி பெரும்பாலான இந்தியர்களின் கைகளில் கைபேசியாக நுழைந்து அவர்தம் நெஞ்சங்களில் தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டது.

2010 எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் மட்டும் இந்திய சந்தையில் ஏறத்தாழ 3.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகம் செய்து சாம்சங் சாதனை படைத்திருக்கிறது.
*              வருங்கால தேவைகளை முன்னிறுத்தி அதற்கான உற்பத்தி..
*              உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் கால் வைத்து வர்த்தக சிறகை விரித்தல்..
*              வர்தகத்தை பின்தொடர்ந்து சலிக்காத வாடிக்கையாளர் சேவை..
இவைதாம் சாம்சங்கின் மூன்று நட்சத்திரங்களின் தாரக மந்திரமாய் இருக்குமென்று நினைக்கிறேன்.அதனால்தான் இந்த மாபெரும் சரித்திரம் சாத்யமானதாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.
சாம்சங்கின் விற்பனைக்குப்பின் சேவையை எண்ணும்போது அரேபியக்கதையொன்று நினைவுக்கு வருகிறது.அதில் இடம்பெற்ற அற்புத விளக்கை கைகளால் தடவ..புகையோடு பூதமொன்று எழும்பி சேவைக்கு பணிந்து நிற்பதாக படித்திருக்கிறேன்.அதில் உண்மைக்கு எத்தனை இடமுண்டோ இல்லியோ இன்று வாடிக்கையளர் பணியில் சாம்சங் அற்புதவிளக்கில் எழும்பிய தென் கொரிய பூதமாகவே நினைவில் நிற்கிறது.
இல்லையென்றால் 1910 லிருந்து தொடரும் சரித்திரம் ...எண்ணிப்பார்க்கவே பிரமிப்பூட்டுகிறது.


_______________________________
இடுகை 0067

நல்ல பதிவு. நல்ல செயல்களை உலகறிய செய்ததிற்கு வாழ்த்துக்கள். உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துக்கள். http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.
    நல்ல செயல்களை உலகறிய செய்ததிற்கு வாழ்த்துக்கள்.
    உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !