புதன், நவம்பர் 20, 2013

முற்பகல் செய்யின் . . .

 ஒரு சிறுகதை !
வில்லவன் கோதை

‘’  கணேசா ! அஞ்சுமணி வால்வோவ புடிக்கமுடியுமா..? ‘’
மகேந்ரா வேனை சீராக இயக்கிக் கொண்டிருந்த கணேசனைப் பார்த்தேன்.
நாளைக்காலை பதினோருமணிக்கெல்லாம் தலமை அலுவலகத்தில் நான் இருந்தாக வேண்டும். முக்கிய ஆலோசனை கூட்டமொன்றுக்கு செயற்பொறியாளர் ஏற்பாடு செய்திருந்தார். சென்னை திரும்ப இன்று மாலை ஐந்து மணிக்கு  மதுரையிலிருந்து  வரும் வால்வோ பேரூந்து ஒன்றில் முன்பதிவு செய்திருந்தேன் 
           ‘’  நீதான்  ரொம்ப லேட்  பண்ணிட்டியே சார் !   கவலய உடு..வண்டீல ஏத்றது என் பொறுப்பு. ‘’
           பார்வையை அகற்றாமலேயே பேசினான் கணேசன்

தஞ்சையிலிருந்து இருபத்தய்ந்து கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த அந்த சின்னஞ்சிறிய துணைமின்நிலையத்தில் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்த மைக்ரோவேவ் தகவல்தொடர்பு சாதனங்கள் இரண்டு நாட்களாக சலிப்புற்று தங்கள் பணியை நிறுத்திக்கொண்டிருந்தன. இன்று அதிகாலை இதற்கெனவே திருச்சி வந்த எனக்கு டிரைவர் கணேசனை ஒரு மகேந்ரா வேனுடன் ஒதுக்கியிருந்தார்  திருச்சி  செயற்பொறியாளர்.
பவர் சப்ளை சாதனத்தில் ஏற்பட்டிருந்த நுண்ணிய பழுதை நீக்கி இயக்கத்துக்கு கொண்டு வந்தபோது சென்னையும் திருச்சியும் கைகுலுக்கிக்கொண்டு பரபரப்புடன் தகவல்களை பரிமாறிக்கொண்டன. தொடர்ந்து தளர்வின்றி நிகழ்ந்த அந்தபரிமாற்றம் பிழையின்றி நிகழ்வதை எல்இடி ஒளிப்புள்ளிகள் மூலம் உணரமுடிந்தது. முழுமையாக பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து நானும் கணேசனும் கிளம்பும்போதே மணி இரண்டை எட்டியிருந்தது.
           ‘’ இன்னிக்கு இந்த டிஸ்ட்ரிக்ல டோட்டல் பந்த். ஜாக்ரதையா போங்க. ஏற்கனவே பப்ளிக்ல நமக்கு நல்லபேரு. ‘’
கிளம்பியபோதே எச்சரித்தார் அந்த இளம்பொறியாளர்.
மத்திய அரசு எப்போதோ கொண்டுவர உத்தேசித்திருந்த ஒரு மசோதாவை எதிர்த்து  ஒருசில எதிர்கட்சிகள் மாவட்டம்  தழுவிய  பந்த் ஒன்றுக்கு  அழைப்பு விடுத்திருந்தன.
தஞ்சை நகரில் அதற்கிணங்கியோ அல்லது அதன் விளைவுகளுக்கு அஞ்சியோ பெரும்பாலான கடைகள் இழுத்து சாத்தப்பட்டிருந்தன. சாலையோரக்கடைகளில் மட்டும் சொன்னவிலைக்கு மறுபேச்சில்லாமல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே ஒதுக்குப்புரமாக ஒரு சில தேனீர்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தஞ்சாவூருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டரில் ஒதுக்குபுரமாக இருந்த தேனீர் கடையொன்றில் வண்டியை ஓரம் கட்டினான் கணேசன். பத்து மணிக்கு பணியில் இருந்த இளம் பொறியாளர் அவருடைய வீட்டிலிருந்து சூடாக தருவித்து  தந்த  தேனீர்தான். வழியெங்கும் மதிய உணவுக்கு வழியில்லை. திருச்சியில் பேரூந்தில் பயணிக்கும் போது வழியில் எங்காவது பார்த்துக்கொள்ளலாம் என்று தேனீர் குடிக்க இறங்கினேன்.
‘’ இன்னும் ஒரு வருஷத்ல இந்த டீக்கடைக்கு நீ மொதலாளி இல்ல. வால் மார்ட்காரன் வந்துடுவான். இந்த ஜில்லாவுல நீ ஒரு பொட்டிக்கட கூட வெக்க முடியாது.’’
உரத்த குரலில் உறுதியாக பேசிக்கொண்டிருந்தார் சிகப்புத்துண்டை தோளில் அணிந்திருந்த ஒரு முதியவர். அவர் கையில் சுடசுட தகவல்களை தரும் அன்றைய தினப்பத்திரிக்கை இருந்தது.
‘’ அமெரிக்காகாரன் டீக்கட கொடவா வெப்பான். ‘’
வியப்பாக வினவினார் இன்னொரு கருத்த ஆசாமி.
           ‘’ அப்ப மாரிமுத்து டீயவிட அவன் போட்ற  டீ நல்லாருக்குண்ணு சொல்லுங்க. 
டீ மாஸ்டரை வலிய வம்புக்கு இழுத்தார்  சட்டை அணியாத இன்னொரு முதியவர்.
           ‘’ ஒரு டீ அம்பது ரூபாக்குமேல விப்பான். அப்ரம் நீயும் நானும் டீ எங்க குடிக்கிறது. ‘’
பக்கத்தில் இருந்த யாரோ ஒருவர் பதிலளித்தார்.
‘’ மாரிமுத்து ! இபிகாரங்க வந்துட்டாங்க !  அவுங்களுக்கு மொதல்ல குடுப்பா. ரொம்ப களைச்சி போயி வந்திருப்பாங்க. ‘’
எவர் வம்புக்கும் போகாத எங்களையும் வம்புக்கு இழுத்தான்  இன்னொருவன். பார்ப்பதற்கு முரடானக தோற்றமளித்த கணேசனே நிலமையை உத்தேசித்து  மௌனமாக டீயை குடித்தான்.
            சூடான தேனீரை பருகியதும் என் முகமெங்கும் வியர்வைத்துளிகள் வழிந்தன. கைத்துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டியின் நான்கு சக்கரங்களையும் ஒரு பார்வை பார்த்த கணேசன் வண்டியை கிளப்பினான்.
’’ நாளைக்கு மஞ்சுவோட பர்த் டே. வந்துடுவீங்கள்ள. ‘’
நேற்று கிளம்பும்போது இந்து கேட்டது இப்போது நினைவுக்கு வந்தது. அதேசமயம் மஞ்சுவின் குறுகுறுப்பான முகம் நினைவில் தோன்றி மறைந்தது. ஏதாவது கிப்ட் ஒன்று வாங்கியாக வேண்டும்திருச்சியில் நேரம் இருக்குமா தெரியவில்லை வெறுங்கையோடு போய் நிற்பது அத்தனை சரியாக படவில்லை. பணியில் இருக்கும் மன உளச்சல் ! இந்துவே உணராதபோதுகுழந்தைக்கு எப்படி புரியும்.
.வண்டியின் வேகத்தில் சாலையோரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையாக நின்றிருந்த விசாலமான மரங்கள் அவசரம் அவசரமாக பின்னோக்கி நகர்ந்தன. இப்போதே மணி மூன்றைக்கடந்திருந்தது. இன்னும் வால்வோவை பிடிக்க  இரண்டு மணி நேரம்தான் இருந்தது. ஹோட்டல் அறையை காலி செய்ய அரைமணியாவது வேண்டும். இந்த பேரூந்தை தவற விட்டால்  ஏதாவது ஒரு சாதா பேரூந்துக்கு  அலைய வேண்டியிருக்கும். அதுவும் இந்த விடுமுறை நாட்களில் அத்தனை எளிதான காரியமல்ல. எப்படியும் போய்த்தான் ஆகவேண்டும். செயற் பொறியாளரையும் மஞ்சுவையும் கூட சமாளித்துவிடலாம். ஆனால் இந்துவை..  அது லேசான காரியமல்ல.
வண்டி பால்வாடி திருப்பத்தை கடந்து நிமிர்ந்தபோது அந்த கூட்டம் கண்ணுக்கு பட்டது. சாலையின் குறுக்கே ஐந்தாறு பேர்கள் பரவலாக நின்று வண்டியை நிறுத்த முயற்சித்தார்கள்.
‘’ இன்னிக்கு நீ ஹால்ட்தான் சார் ! ‘’
வண்டியின் வேகத்தை குறைத்து வண்டியை ஓரம் கட்டினான் கணேசன். பத்தடி தூரத்தில் குழுமியிருந்த ஐந்தாறுபேர் அவசரம் அவசரமாக ஓடி வந்தனர். ஒருவர் கையிலும் கரடுமுரடான ஆயுதங்கள் எதுவுமில்லை. அந்தவகையில் ஓரளவு நிம்மதி.  இருந்தாலும் என் வால்வோ பயணம்....
‘’ ட்ரைவர் சார் ..கொஞ்சம்  ஹெல்ப் பண்ணுங்க. கலவரத்ரல காலிப்பசங்க பஸ்ச கொளுத்திட்டாங்க. சின்னகொழந்த உசுருக்கு போராடுது. திருச்சில கொண்ட சேக்கணும். ‘’
ஓடிவந்தவர்களில் ஒரு முதியவர் கணேசனிடம் பேசினார்.
‘’ னைட் பஸ்ச புடிச்சி ஏஇ மெட்ராஸ் போயி ஆகணும் . இதல்லாம் போலீஸ் கேசு.. அதுவுமில்லாம கவர்மண்ட் வண்டில இந்த மாதிரில்லாம் ஏத்தறத்துக்கு பவர் கெடையாது. ‘’
கணேசன் அத்தனை மென்மையற்றவன் இல்லையென்றாலும்  நிர்வாகத்தின்  பின் விளைவுகளை அறிந்திருந்தான்
‘’ யோசிக்காதீங்க...சார் !.. ஒடம்பு பூரா வெந்துபோச்சு.  கொழந்த உசிர் ஊசலாடுது ! ‘’
ஐந்துவயதே நிரம்பிய அந்த பெண்குழந்தையை தோளில் சுமந்து வந்த நடுத்தரவயது பெண்மணி வண்டிக்கருகில் வந்தாள். அந்த குழந்தை முகத்தைத் தவிற உடல்முழுதும் துணியால் மூடப்பட்டிருந்தது.
பக்கவாட்டில் பார்த்தபோது அந்த பிஞ்சு முகம் உணர்வின்றி காணப்பட்டது. வலி பொறுக்கமுடியாமல் அடிக்கடி முகத்தை சுளித்து கொள்வதையும் பார்த்தேன். ஏறத்தாழ மஞ்சு உயரமே இருக்கக்கூடும்.
அடுத்த நொடி ஒரு முடிவுக்கு வந்தேன்.
‘’ கணேசா ! வண்டில ஏறச்சொல்லு.!  இஈ க்கிட்ட நான் பேசிகிறேன். ‘’
‘’ சரி சார் !  ‘’
‘’ யாராவது ரெண்டு பேர் கொழந்தையோட வாங்க. கும்பலா ஏறிடாதீங்க.! ’’
கதவைத்திறந்தான் கணேசன்.
‘’ அது போதும் தம்பி ! செத்த வேகமா போ ! ‘’
புலம்பிக்கொண்டே குழந்தையை சுமந்த பெண்மணி வண்டியில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து இரண்டு நடுத்தரவயது ஆண்களும் ஏறினர்.
வேறுவழியின்றி கதவை இழுத்து சாத்திய கணேசன் வண்டியை விருட்டென்று எடுத்தான்.
‘’ த்தோ நிக்குது பார்... அந்த பஸ்தான்  ! ‘’
பின்னால் இருந்த மெலிந்த  மனிதர் கை நீட்டினார்  . கணேசனின் வேகத்தில் சாலையோரத்தில் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாய் நின்றிருந்த அந்த அரசுப்பேரூந்து அவசரமாக பின்னோக்கி மறைந்தது.
‘’ வேற ஏதாவது சேதம்... ‘’
வண்டியை லாவகமாக திருப்பியவாறே பேசினான் கணேசன்.
‘’ ஒண்ணும் இல்ல. அல்லாரும் தபதபண்ணு எறங்கிட்டாங்க .இந்தகுட்டிதான் மாட்டிகிட்டா ! ‘’
அரசுப்பணியின் முக்கிய நோக்கமே மக்களுடைய ஞாயமான உரிமைகளை காப்பதும் தேவையான வசதிகளை தகுந்த தருணங்களில் ஏற்படுத்தி தருவதுமேதான். இருந்தபோதிலும் தவறேதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதைக் கருதியே விதிகளும் சட்டங்களும் அடிக்கடி  குறுக்கே நிற்கின்றன.
என்னைப் பொருத்தமட்டில் அவசியமும் அவசரமும் ஆன காலங்களில் சுயலாபம் எதுவுமின்றி மக்கள் நலனையே முன்னிறுத்தி மனிதநேயத்துக்கு முன்னுரிமை தரவேண்டுமென நினைப்பவன். அவசர காலங்களில் ஒரு அரசு ஊழியனுக்கு இதுவும் ஒரு கடமை என்றே  தோன்றுகிறது.. விதிகள் ஒத்துழக்காதபோது அதற்கான செலவினங்களையும் ஏற்க தயங்காதவன்..
தீயில் சிக்கிய பெண்குழந்தை எரிச்சல் தாங்காமல் முனகிக்கொண்டே வந்தாள். வண்டியின் வேகத்தில் உடலில் உரசிய அனல்காற்று அவள் வேதனையை உயர்த்தியிருக்கும்..
‘’ செத்த பொறுத்துகம்மா. த்தோ வந்துட்டு ஆஸ்பத்ரி..’’
மென்மையாக சமாதானம் சொன்னபடியே வந்தாள் அந்த பெண்மணி. அவளுக்கு அவள் தாயாக இருக்கக்கூடும்.
‘’ தில்ல நகர்  சௌந்ரபாண்டியன் டாக்டர் கிட்ட உட்டுடு தம்பி ! ‘’
பின்னால் இருந்த  துண்டு போட்ட மெலிந்தவர் கணேசனைப்பார்த்து சொன்னார்.
 ‘’ ம் !  ‘’ என்ற கணேசன்
‘’ இன்னிக்கு எதனாச்சும் னைட் ஷோ பாத்துட்டு விடிஞ்சி போ சார் ! ‘’
வண்டியை திருப்பத்தில் லாவகமாக ஓட்டியவாறே யோசனை சொன்னான் கணேசன்.
‘’ இல்ல கணேசா.. நாளைக்கு காலேல நான் சென்னையில் அவசியம் இருந்தாகணும்.  அதல்லாம் திருச்சி போயி பாத்துகலாம். வண்டிய வெரட்டு. ‘’
இப்போது என்னுடைய நினைவெல்லாம் இந்த குழந்தையை தக்க தருணத்தில் கொண்டு சேர்ப்பதாயிருந்தது. வண்டி பத்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும்.
வண்டிப்பேட்டையை வண்டி தாண்டியபோது  வெரிச்சோடிக்கிடந்த அந்த சாலையின் இருபுரங்களிலும் நின்றிருந்த பத்து பதினைந்துபேர் சாலையின் குறுக்கே ஓடி வந்தனர். அவர்கள் கைகளில் கட்டைகளும் கற்களும் காணப்பட்டது.
 ‘’ ம் ! அவ்ளவுதான். ‘’
சலித்துக்கொண்ட கணேசன் வண்டியின் வேகத்தை குறைத்து  நிறுத்தினான்
ஓடிவந்த பெரும்பாலரில்  ஒன்றிரண்டு பேரைத்தவிற அத்தனைபேரும் சிறார்கள். இருந்தபோதும் சூரியாவின் சிங்கம் மீசையை வைத்து வளர்த்து வந்த கணேசன் அந்த கூட்டத்துக்கு கட்டுப்பட்டான்.
‘’ கண்ணாடி கிண்ணாடிய ஒடச்சிபுடாதீங்க.  உசிருக்கு போராடுற ஒரு புள்ளய   ஆஸ்பத்ரிக்கு கொண்டு போறம். தடுத்து பாவத்துக்கு ஆளாகாதிங்க..’’
பொறுமையாக பேசினான் கணேசன். கனத்த முதியவரும் அந்த  பெண்மணியும் நிலவரத்தை விளக்க கூட்டம் கட்டுக்குள் வந்தது.
‘’ யே ! வண்டிய வுடுங்கடா.  நீங்க போங்க சார் !  ‘’
ஒரு தல கட்டளை பிறப்பிக்க  மானங்கெட்ட மத்திய ...என்று துவங்கிய அச்சுத்தாளை வண்டியின் முகப்புக்கண்ணாடியில் ஒட்டிய சிறுவன் கீழே குதித்தான். அந்த கும்பல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருபுரமும் விலக வண்டி விருட்டென்று கிளம்பியது.
`         ‘’ தருதலங்க !  என்னா ஏதுண்ணு ஒரு வெவரமும் தெரியாது ஸ்ட்ரைக் பண்ண வந்துட்டானுவ,! ‘’
ஒரு புளியமரத்தடியில் வண்டியை அவசரமாக நிறுத்திய கணேசன் கண்ணாடியில் ஒட்டியிருந்த போஸ்டரை  கிழித்து கண்ணாடியை துடைத்தான்.
‘’ கணேசா  ! லேட் பண்ணாத...’’
‘’ காஞ்சிபோச்சுண்ணா ரொம்ப கஷ்டம் சார்  !’’
ஒருவழியாக வண்டி தஞ்சை எல்லையத்தாண்டிற்று.
தன்னால் முடிந்த அளவுக்கு வண்டியை விரட்டிய கணேசன் தில்லைநகர் சௌந்ரபாண்டியன்  க்ளிக்கில் நுழைந்தபோது மணி ஆறைத்தொட்டிருந்தது .
நான் பயணிக்க வேண்டிய வால்வோ .இன்னேரம் சமயபுரம் மேம்பாலத்தை தாண்டியிருக்கும்.
வண்டி அவசரசிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தபோது  பணியிலிருந்த நர்ஸ்கள் பரபரப்பாயினர். பல்வேறு கேள்விகளுக்குப்பிறகு பல இடங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு  அவசரசிகிச்சை ஆரம்பமாயிற்று.
‘’ ஒதவிண்ணு எறங்னா  இப்டிதான் ! ‘’
அலுத்துக்கொண்டான் கணேசன்.
‘’ இல்ல கணேசா. இதெல்லாம் தேவையானதுதான். நம்ம டிபார்ட்மெண்ட்லயும்  இதுமாறி பார்மாலிட்டீஸ் உண்டே !’’
அடுத்த அரைமணியில்
” மேற்கொண்டு எந்தபிரச்சனையும் இல்லை. ஷார்ப்பா கொண்டாந்துட்டீங்க. கொழந்த பொளச்சுகுவா. தேவைப்பட்டால் நீங்கள் வரவேண்டியிருக்கும் ”
என்று கூறிவிட்டு உள்ளேபோனார் பணியிலிருந்த அந்த மருத்துவர்.
‘’ நீங்க கொளந்த குட்டிகளோட நல்லாருப்பீங்க தம்பி. எம்மவள சரியான நேரத்ல கொண்டாந்து சேத்தீங்க.!’’
 அந்த பெண்மணியும் முதியவரும் கண்களில் நீர்கலங்க பேசினர்.
கணேசன்   வண்டியை எடுத்தான்.
          
‘’ என்ன சார் இப்டி பண்ணிட்டே !  அந்த ட்ரைவர் கன்னாபின்னாண்ணு கத்றான். ஒனக்காக முக்காமணி நேரம்  காத்திருந்து ப்பதான் போவுது புத்தம்புது வால்வோ. ஒனக்கு கொடுத்து வைக்கல .’’
 நானும் கணேசனும் அந்த தங்கும் விடுதிக்குள்  நுழைந்ததுமே பயணத்துக்கு முன்பதிவு செய்யும் முகவர் மூச்சு விடாமல் பொரிந்து தள்ளினான்.
           ‘’ எல்லாம் விதி ! அடுத்த பஸ்ல ஏத்திவுட பார்டா..’’
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த கணேசன் பதிலளித்தான்.
           ‘’ கொஞ்சம் சுமாரான பஸ்சா இருந்தாலும் பரவால்ல. நான் எப்படியாவது னைட் போய் ஆகணும்.! ‘’
                     ‘’  ஸ்டாண்ல போயி பாரு. மெட்ராசுக்கு நிக்ற கும்பல.  சாப்புட்டு வா. எட்டு மணிக்கு கேயார் வருவான் ஏத்தி உட்டுறன். தேட்றது மாறி வச்சுகாதே. ஏழேமுக்காலுக்கெல்லாம் இங்க இருக்கணும். அது சரி ஒன் போன் என்னாச்சு ! ரிங் அடிச்சுகிட்டேகெடக்கு ‘’
           ‘’  அதான் ரூம்ல கெடக்கே.’’
 என்ற கணேசன் என்னைப்பார்த்து பேசினான்.
’ பத்ரமா போய் சேரு.. மறக்காம ஈஇ சார்கிட்ட விஷயத்த சொல்லிடு. அப்றம் நான் ஊரைசுத்திட்டு  வர்றேண்ணு  கத்துவாறு. ‘’
மறக்காமல்  பயணப் பதிவேட்டில் பயண விவரத்தை  எழுதி கையெழுத்தும் பெற்றுக்கொண்ட கணேசன் விடைபெற்றுக்கொண்டான்..

திருச்சி  நகரில் கடை கடையாய் அலைந்து மஞ்சுவுக்கு பிடித்தமான பாட்டிசைக்கும் பொம்மையொன்றை வாங்கினேன். அப்படியே இரவுக்கான சிற்றுண்டியையும் முடித்துக்கொண்டு விடுதிக்குத்திரும்பியபோது பயணமுகவர் சொன்ன   கேயார்  விடுதியின் வாயிலில் நின்றிருந்தது.. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் அந்த வண்டியை  பரபரப்புடன் சூழ்ந்துகொண்டிருந்தனர்.
‘’ வா சார் !   வா.   மறுபடியும் எங்கடா தேட்றதுண்ணு இருந்தேன். இருபத்ஞ்ல போய் ஒக்கார். ‘’
‘’ இந்த வண்டிலயா  ‘’
பத்துப்பதினைந்து வருஷம் ஓடி களைத்துப்போயிருந்த ஒரு அரசுப் பேரூந்தைப் போலிருந்தது  அந்த கேயார்.
‘’ இண்ணைக்கு ஒனக்கு  சீட் கெடச்சதே பெருசு !  ஸ்டாண்ல போய் பாரு  கூட்டம் அலைமோதுறத..’’
பதிலுக்குக்காத்திராமல் அடுத்தபயணித்தேடிப்போனான் அந்த பயணமுகவர்.
மறுவார்த்தையின்றி விடுதிக்குப்போய் உடமைகளை எடுத்துக்கொண்டு அறையை ஒப்படைத்துவிட்டு வந்தேன். வெளிப்பார்வைக்குத்தான்  அந்த வண்டி ஒரு மாதிரியான தோற்றத்தை தந்ததே தவிற உள்ளே இருக்கைகள் அத்தனை மோசமில்லை. சின்ன சூட்கேசையும் கைப்பையையும் தலைக்குமேலே ஒதுக்கப்பட்டிருந்த தட்டுகளில் வைத்துவிட்டு இருக்கையை சாய்த்துக்கொண்டு சாய்ந்தேன்.
அத்தனை பரபரப்பாக பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அந்த பேரூந்து காவிரி பாலத்தை கடந்தபோது மணி ஒன்பதை கடந்திருந்தது.  பல்வேறு தடுப்புச்சுவர்களைத் தாண்டி இப்போது சமநிலைக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன். என்னையறியாமல்  ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்டது. இனி பிரச்சனைகள் எதுவும் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்தபோது  என் நினவுகள் எங்கெங்கோ பயணிக்கத்துவங்கின.
இரண்டு மணிநேரம் கடந்திருக்கும். நெடுநேர சிந்தனைகளில் லயித்திருந்த நான் எப்போது உறங்கிப்போனேன் என்று தெரியவில்லை.
சீராக பயணித்துக்கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று பின் ஊர்ந்து போனபோது  கண்விழித்தேன்.
வண்டிக்குள் ஒரு பரபரப்பு. எல்இடி விளக்குகள் கண்விழித்தன. ஆங்காங்கே சிலர் எழுந்திரிப்பதும் கண்ணாடி சன்னலை விலக்கி வெளியில் எட்டிப்பார்பதும் புரிந்தது. .நடத்துனரும் ஒரு சில அதிஆர்வலர்களும் வண்டியிலிருந்து இறங்கி வெளியே போனதை காணமுடிந்தது..
கண்களை கசக்கிகொண்டு சன்னலை விலக்கியபோது  அந்த இருள் சூழ்ந்த பிரதேசத்தில் சின்னதும் பெரிதுமாக பல்வேறு வாகனங்கள் ஒளியை உமிழ்ந்துகொண்டு தாறுமாறாக முன்னேறுவதை காணமுடிந்தது.. எதிர் சாரியிலிருந்து எந்தவண்டியும் வந்ததாக தெரியவில்லை.
வழக்கம்போல் ஏதாவது விபத்து நிகழ்ந்திருக்கக்கூடுமென்று தோன்றியது.
சாலையின் மேற்குபுரத்தில்   குறைந்தபட்சவிளக்குகளுடன்  நீண்டுகிடந்த அந்த பொறிஇயல்கல்லூரி வண்டி விழுப்புரம்  அருகில்  இருக்கக்கூடும் என்பதை  உணர்த்தியது.
நான் எண்ணியபடியே ஒரு சாலைவிபத்துதான் நிகழ்ந்திருக்கிறது.
ஏறக்குறைய   அரைமணி நேரம் நகர்ந்திருக்கும்.
வண்டி அந்த கோர விபத்து நிகழ்ந்த இடத்தை  நெருங்கியது . இடிபாடுகளை அகற்ற தற்காலிக விளக்குகளை ஏற்படுத்தி அந்த பிரதேசத்தையே பகலாக்கியிருந்தார்கள்.
அந்த கோரக்காட்ச்சி இப்போது என் கண்களுக்கு முழுமையாக தெரிகிறது..
புத்தம் புதிய  வால்வோ பேரூந்துகள் இரண்டு எதிர் எதிரே மோதி உருத்தெரியாமல்   சிதறிக்கிடந்தன. அவற்றில் ஒன்று நான்  பயணித்திருக்க வேண்டியவண்டி.
நினைத்துமே உடலெங்கும் நடுங்கிற்று.
பெரும்பாலான பயணிகள் சம்பவ இடத்திலேயே மரணமுற்றிருக்கின்றனர். உயிர் பிழைத்த சில பேர்கள் அவசரம் அவசமாக விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அனைத்து சடலங்களும் அப்புரப்படுத்தப்பட்டிருந்தன. பேரூந்துகளின் பல்வேறு பாகங்கள் நெடுந்தூரம் வரை இறைந்து கிடந்தன.
வண்டி மெல்ல மெல்ல  சம்பவ இடத்தை சுற்றி நகர்ந்த போது நடத்துனரும் கீழே இறங்கிய ஒருசில பயணிகளும் ஏறிக்கொண்டனர். பயணிகளின் பல்வேறு உரையாடல்கள் விழுப்புரம்வரை தொடர்ந்தது.  நிகழ்ந்தவை நிகழ்ந்திருக்க வேண்டியவை அத்தனையும்  அலசப்பட்டன..
‘’ புத்தம் புது கோச்சுப்பா.. டிரைவருங்க சிடி மாத்திக ஒரே ட்ராக்ல வந்திருக்காங்க. ரெண்டுபேரும் ஸ்பாட்லேயே அவுட்.  இன்ணிக்குதான் பர்ஸ்ட் ட்ரிப் வந்ருக்கான் !’’
“அவனுக்கென்ன ! இன்சூரன்ஸ்காரன் குடுத்ட போறான். “
சர்வசாதாரணமாக பதிலளித்தார் ஒரு கண்ணாடிக்காரர்..
அவர் சொன்னதுபோல் காப்பீட்டுத்தொகை அவர்களுக்கு கிடைக்கக்கூடும். பேருதவியாகவும் இருக்கக்கூடும். ஆனால்  எஞ்சிய  வாழ்வை சுவைக்க காத்திருந்தவர்களுக்கு   ஏற்பட்டுவிட்ட முற்றுப் புள்ளிக்கு  என்ன சொல்லமுடியும்.
வண்டி இப்போது விழுப்புரத்தைக்கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அந்த கோரக்காட்சி இன்னும் என் நினைவுகளில் நீங்கத்தயாராயில்லை..
‘’ நீங்க புள்ள குட்டிகளோட நல்லாருப்பீங்க தம்பி ! ‘’
அந்த பெண்மணி கூறிய வார்த்தைகள்தாம் மீண்டும் மீண்டும் என்  செவிகளில் ஒலிக்கிறது. 
ஒருவேளை அதுதான்   பிற்பகல் விளைந்திருக்கக்கூடும்.

___நன்றி - காற்று வெளி  ( கார்த்திகை மாத இதழ் }



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !