நடக்கட்டும் நாக்கு வியாபாரம்! - ஆனந்த விகடன் - 2013-11-13
ப திருமாவேலன்
ப திருமாவேலன்
அமைச்சர்கள் அனைவரும் கரூர் செந்தில் பாலாஜியையும், எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் புதுக்கோட்டை விஜயபாஸ்கரையும் பின்பற்ற ஆரம்பித்தால்... தமிழ்நாடு என்னாகும்?
'அம்மா’ என்பது ஒரு பொதுச் சொல். ஆனால், பொதுவான சொல்லாகவா அது பயன்படுத்தப்படுகிறது? 'அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டினார்கள். அம்மா படத்தோடு, அந்தத் தண்ணீரில் இரட்டை இலை மலர்ந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சிறிய பேருந்துகளிலும் இரட்டை இலைகள் பூத்துக் குலுங்குகின்றன. 'அரசுப் பணத்தில் கட்சி சின்னமா?’ என்றால், கறிவேப்பிலை, துளசி இலை, வாழை இலை... என்று தோட்டத்தில் பாத்தி கட்டுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்படி ஒரு பசுமைப் புரட்சியை இந்த அரை நூற்றாண்டு காலத்தில் எவரும் நடத்தியது இல்லை என்பதை உணர்ந்த ஜெயலலிதா, முகம் சிவக்க பெருமைப்பட்டுக் கொள்கிறார். செந்தில் பாலாஜி வாங்கிய நற்பெயரை நாம் எப்படி அடைவது என்று ஒவ்வோர் அமைச்சரும் அப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்!
சிலிர்த்துக் கிளம்பினார் புதுக்கோட்டை விஜயபாஸ்கர். தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஒலிக்கும் ஆபாசமான, அசிங்கமான, அருவருப்பான பேச்சுக்களை சட்டசபைக்குள் கொண்டுவந்தார். மயிலை மாங்கொல்லையில் என்ன பேச வேண்டும் என்பதற்கான வரையறையை கபாலீஸ்வரர் போடவில்லை. ஆனால், சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெற்கெல்லாம் ஏராளமான வரையறைகள் உள்ளன. 'அமைச்சர் சொல்வது பொய்யான தகவல்’ என்றுகூடச் சொல்லக் கூடாது. 'அமைச்சர், பேரவைக்குத் தவறான தகவலைத் தருகிறார். இது உண்மைக்கு மாறானது’ என்றுதான் சொல்ல வேண்டும். அவையில் இல்லாதவர்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியும் பேச வேண்டியது வந்தால், அது விமர்சனமாக இருக்கலாமே தவிர, அவதூறாக, குற்றச்சாட்டாக இருக்கக் கூடாது. இப்படி ஏராளமான மாண்புகள் உள்ளன. எல்லா மாண்புகளையும் வரைமுறைகளையும் வரிசையாக மீறுவதுதான் அமைச்சர் பதவியை அடைவதற்கான வழி என்று தீர்மானித்துவிட்டால் என்ன ஆவது?
எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என்று வரையறுத்தவர்கள்... எப்படிப்பட்டவர்கள் சபைக்குள் வரவேண்டும், எப்படிப்பட்டவர்கள் சபைக்குள் வரக் கூடாது என்று சொல்லாததன் விளைவு இது!
கருணாநிதியைத் 'தள்ளு வண்டி’ என்றும், விஜயகாந்தை 'தண்ணியிலேயே இருப்பவர்’ என்றும் வளர்மதியோ, செல்லூர் ராஜுவோ சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு ஆச்சர்யம் உண்டாகி இருக்காது. ஆனால், விஜயபாஸ்கர், மருத்துவம் படித்தவர். முதுமையின் இயலாமையை கருணையோடு கவனிக்கச் சொல்கிறது மருத்துவம். ஆனால், இந்தப் பாழாய்ப்போன அரசியலும் பதவியும் அதனை சட்டசபையில் வைத்து அறுவைசிகிச்சை செய்யச் சொல்கிறது.
'நீ முகத்தைக் காட்டு தம்பி... அது போதும்’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து பேரறிஞர் அண்ணா சொன்னார். அந்த எம்.ஜி.ஆரின் லட்சக் கணக்கான ரசிகர்களை, மெள்ள அரசியல் மயப் படுத்தி, இரட்டை இலை மயக்கத்தை ஏற்படுத்திய முசிறிப்புத்தனின் வாழ்க்கை, தள்ளுவண்டியில்தான் கழிந்தது. நடக்க முடியாத முசிறிப்புத்தன்தான் பல்லாயிரக் கணக்கான எம்.ஜி.ஆர். மன்றங்களை உயிரோட்டம் குறையாமல் வைத்திருந்தார் என்பது விஜயபாஸ்கர்களுக்குத் தெரியாது. நல்லவேளை, தெரிந்தவர்கள் யாரும் சபைக்குள்ளும் இல்லை; அ.தி.மு.க-விலும் இல்லை.
கருணாநிதி, திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று பதிவுசெய்தவர் வளர்மதி. விஜயபாஸ்கர், 'தள்ளுவண்டி’ என்று கிண்டல் செய்கிறார். கருணாநிதி, இப்போதும் இந்த அவையின் உறுப்பினர். இன்று மட்டுமா... 1957-ல் இருந்து உறுப்பினர். கருணாநிதி, ஆயிரம் விமர்சனங்களுக்கு உரியவரே தவிர, அவரைக் கொச்சைப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. 'கருணாநிதி, கருணாநிதி’ என்று இதே சபையில் முன்பு ஒருமுறை அ.தி.மு.க. உறுப்பினர் பேசியபோது, 'கலைஞர் என்று சொல்லுங்கள். அவர் எனக்குத் தலைவராக இருந்தவர்’ என்று தடுத்தவர் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தப் பொன்மனத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. புண்படுத்தாத மனம் வேண்டாமா? அதுவும் சட்டசபையில்? விஜயகாந்த், 'தண்ணியிலேயே இருப்பவர்’ என்றால், அமைச்சர்கள் அனைவருமே ஆல்கஹால் பார்க்காத உடலும் குடலும் கொண்டவர்களா? பள்ளி, கல்லூரிகளை தனியார் நடத்தட்டும், டாஸ்மாக்கை அரசாங்கம் நடத்தும் என்று சொல்லும் மாநிலத்தில் - டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகிவிட்டதை அரசாங்கச் சாதனையாகச் சொல்லும் மாநிலத்தில் - கடந்த ஆண்டு தீபாவளியைவிட இந்த ஆண்டு தீபாவளிக்குக் கூடுதல் விற்பனை இலக்கு அடைந்ததைப் பூரிக்கும் மாநிலத்தில் - வாழ்வதால் உண்டாகும் அவமானத்தைவிட, விஜயகாந்தின் தனிப்பட்ட பழக்கம் எதுவும் தமிழர்களைப் பாதிக்காது. சுகாதாரத் துறைக்கு அமைச்சராக வந்திருக்கும் விஜயபாஸ்கர், இனிமேலேனும் நம் தமிழகத்தில் பெருகியிருக்கும் குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த காரியம் ஆற்றட்டும்.
விஜயகாந்த் எழுந்ததும் கிண்டல் செய்து சிரிப்பது, அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் அவரைக் கொச்சைப்படுத்துவது, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது என்பதையே பழக்கமாக வைத்திருப்பதால்தான், அவர் பேரவைக்கு வருவதே இல்லை. சாதாரண ஓர் உறுப்பினர் என்றால் பரவாயில்லை. எதிர்க் கட்சித் தலைவர். அது கட்சிப் பதவி அல்ல. அரசுப் பதவி. அந்தப் பதவிக்கான முக்கியத்துவம்கூட தரப்படாதது தவறு. அவருக்கு அந்தத் தகுதி இல்லை என்று நினைத்தால், 40 தொகுதிகளைத் தூக்கிக் கொடுக்கும்போது, அந்தத் தகுதி இருந்ததாக நினைத்தார்களா? விஜயகாந்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அத்தனை பேர் வெற்றியிலும் தே.மு.தி.க-வின் வாக்குகளும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே! முரசுக்காரர்களின் ஓட்டில் மட்டும் எம்.எல்.ஏ-க்களாக அமைச்சர்களாக வலம் வரலாமா? கூட்டணி வைத்துப் போட்டியிடும்போது இப்படி கணக்குப் பார்ப்பது அபத்தம். ஆனால், திட்டமிட்டு அவமானப்படுத்தும்போது இந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
எ.வ.வேலு, கண்டக்டராக இருந்தாரா கார்பென்டராக இருந்தாரா என்பதா விவகாரம்? 'இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற எ.வ.வேலு, இப்போது அதைப் பற்றி பேச அருகதை இல்லை’ என்கிறார் அமைச்சர் கே.பி.முனுசாமி. இந்த முனுசாமி மட்டும் சுயம்புவா? தி.மு.க. மாணவர் அணியில் இருந்தவர்தானே கே.பி. முனுசாமி. அவருக்கு மட்டும் தி.மு.க-வைக் குற்றம் சொல்லிப் பேச அருகதை வந்துவிடுமா? தற்போதைய தமிழக அரசியல் சூழலில் எவருக்குத்தான் அந்த அருகதைகள் உள்ளன?
ஜெயலலிதா சேவலாகவும், வி.என்.ஜானகி புறாவாகவும் 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பறந்து வந்தபோது புறாவுக்கு தேனியில் நெல் போட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்றைய முதல் விசுவாசியாக உட்கார்ந்திருக்க முடியுமா? பி.எச்.பாண்டியன் அப்போது பேசிய பேச்சு என்ன... இப்போது செய்யும் செயல் என்ன? ஒரு பெண் என்பதற்காகவே, ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி, தமிழக மேடைகளில் ஆபாசக் குப்பைகளை அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே ஒரு கூட்டம் அரங்கேற்றியபோது, அவருக்கு ஆதரவாக நின்றதாலேயே, 'சேலை துவைக்கிற பசங்க’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட எஸ்.திருநாவுக்கரசும், கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனும், கருப்பசாமிப் பாண்டியனும்... இன்று ஜெயலலிதாவின் எதிரிகள். அன்று அவரைக் கொச்சைப்படுத்தியவர்கள் இன்று தாசானுதாசர்கள். இவர்கள் பேசுவதை ஜெயலலிதா விரும்பலாம். அதற்கு இந்தச் சட்டசபைதானா கிடைத்தது?
இந்தச் சட்டசபைக்குள் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார் என்பது உண்மைதான். இதை வைத்து 'அவர்கள் மட்டும் யோக்கியமா?’ என்று கேட்கலாம். நாய் கடித்தால், எந்த மனிதனும் திருப்பிக் கடிக்க மாட்டான் என்பதே பதில். கருணாநிதியையும் விஜயகாந்தையும் சபைக்குள் அனுமதித்து, அவர்களது குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வது மட்டுமே ஜெயலலிதா விட்டுச் செல்லும் வழித்தடமாக அமையும். கூஜா தூக்கிகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள். சேடப்பட்டி முத்தையாவைவிட வேறு ஓர் உதாரணம் தேவை இல்லை. ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாகக் காட்டிக்கொள்வதன் மூலமாக தங்களை வளப்படுத்திக்கொண்டு ராஜாங்கத்தை திவால் ஆக்கும் இவர்கள், ராஜா தோல்வியைத் தழுவும்போது, 'எனக்கு அப்பவே தெரியும்’ என்று கிளை தாவிப் போய்விடும், நாக்கு வியாபாரிகள்.
இவர்கள் அ.தி.மு.க. மேடைகளில் பேசுவதைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை. ஆனால், சட்டமன்றத்துக்கு அதுவும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு என்று மலையளவு மாண்பு இருக்கிறது. சட்டமன்ற நடைமுறைப் பேரேடுகளைப் புரட்டிப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு ஆலோசனை சொல்லி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசியதுதான் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் இருக்கும். 'எதிர்க்க எவரும் இல்லை, எதுவும் பேசலாம்’ என யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதால்தான், கண்ணுக்குத் தெரியாத பத்து பார்வையாளர்கள், படங்களாக உள்ளே உட்கார வைக்கப்பட்டுள்ளார்கள்.
திருவள்ளுவரை மதிக்க வேண்டாம். எம்.ஜி.ஆருக்காவது மரியாதை கொடுங்கள்!
நன்றி ஆனந்த விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !