செவ்வாய், மார்ச் 07, 2017

கொஞ்சம் தேனீர் !


                              வில்லவன்கோதை

தேனீர் தயாரிக்கும்போது தேயிலையை குறித்த நேரத்துக்கு மேல் கொதிநிலைக்கு தள்ளக்கூடாதென்பதை காலம் காலமாக நம்பிக்கொண்டிருப்பவன் நான்..தூளின் நிறம் இறங்கிய பின்னும் கலவையை கொதிக்கவைப்பது நிக்கோட்டின் என்ற ஒவ்வாமைக்கு வழிவகுப்பதாகும். இன்று பெரும்பாலான தேனீர்கடைகளில் தேயிலையையும் பாலும் ஒன்றாக கொதித்துக்கொண்டேதான் இருக்கிறது. வீடுகளில்கூட இப்போதெல்லாம் இந்த முறையையே கையாளுகிறார்கள்.தயாரிப்பதர்க்கு எளிதாகவும் தேனீரின் தன்மை கனமானதாகவும் இருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும் .
தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டில் முதன்முதலாக சென்னைக்கு வந்தபோதுதான் இந்த தேனீரின் ருசி எனக்கு கிட்டிற்று. இதற்கு முன் நான் பிறந்து வளர்ந்த தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்த  ஆலத்தம்பாடியிலும் திருத்துப்பூண்டியிலும் கூட தேனீர்கடைகள் இருந்தன.அப்போதெல்லாம் இந்த ருசியை அறிவதற்கான வாய்ப்பே எனக்கு ஏற்பட்டதில்லை .தேனீர்குடிப்பவர்கள் காலிகள் என்றும் கயவாளிகள் என்றும்  எனக்கு போதித்திருந்தார்கள்.கிராமங்களில் இரட்டை குவளை முறை இருந்தாலும் தேனீர்கடைகள்  கள்ளுகடைகளைப்போல ஊருக்கு வெளியேதான் இருந்தது அங்கே தேனீர் குடிப்பவர்கள் அனைவருமே தலித் இனத்தைச் சார்ந்தவர்களாகவும் தாழ்தப்பட்ட வகுப்புக்குரியவர்களாகவுமே இருந்தார்கள்.
பெரும்பாலும் தேனீர் குடிப்பவர்கள் உழைப்பாளிகளாக இருந்தார்கள் என்பதை சென்னைக்கு வந்த பிறகே உணர்ந்தேன்
சென்னையில் ஆங்காங்கே விதம்விதமான தேனீர்கடைகள். தேனாம்பேட்டை எல்டாமஸ் – அண்ணா சாலை முனையிலிருந்த அன்னாளைய ஹோட்டல் ஏஷியாவில் கிடைத்த தேனீர் இன்றும் நினைவில் நிற்கிறது. சென்னை நகரில் இரானி என்ற பெயரில் இயங்கிய சின்னசின்ன வட இந்திய கடைகளில் கிடைக்கும் தேனீரும் குட்டி சமோசாவும் மறக்க முடியாதவை.சாலையோரக்கடைகளில் காச்சிய வெறும் பாலில் துளி நிறம் கலந்து கொடுக்கப்பட்ட தேனீருக்கு சைனா டீ என்று சொன்னார்கள்.
   அந்த இரண்டு வருடங்களில்
தேனீரின் சுவை முழுமையாக அறியப்பட்டுவிட்டாலும்  மீண்டும் திருத்தருப்பூண்டிக்கே திரும்பிபோது  தேனீர் குடித்ததாக நினைவில்லை.
பின்நாளில் மின்வாரியப் பணியிலிருந்த போது  ஒருநாளைக்கு ஆறு ஏழுமுறைகள் எனக்கு தேனீர் தேவைப்பட்டது .எளிதாக கிடைக்காத இடங்களில் தேனீரை தவிர்த்ததும் உண்டு. இந்த எண்ணிக்கை ஓய்வுக்குப்பிறகு மூன்றாக குறைந்ததென்னவோ உண்மை. உடல் ரீதியாகவும் உள ரிதியாகவும் ஏற்படுகிற சிந்தனைகள் குறைந்து போனதே இதர்க்கான காரணமாக இருக்கக்கூடும்.
இப்போது நான் வசிக்கும் இந்த சென்னை புறநகரில் இரண்டரொரு கடைகளில் மட்டுமே நான் விரும்பியபடி தேனீர் கிடைக்கிறது. மற்ற கடைகளில் எல்லாம் ஒரே கலவைதான்.

மறைமலைநகர் பேரூந்து நிறுத்தத்துக்கு இணையான சர்வீஸ சாலையில் இயங்கிவரும் அய்யன் தேனீர்கடை என்னுடைய இப்போதைய தேர்வு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !