வியாழன், ஆகஸ்ட் 15, 2013

39 வது சென்னை கம்பன் விழா !

வில்லவன் கோதை

எப்போதோ ஒரு மாலைப்பொழுதில் நெடுநாட்களாக நீரின்றி வரண்டு கிடந்த நிலமொன்றில் ( நாகப்பட்டினம் ) சற்றும் எதிர்பாராமல்  திடீரென்று கரியமேகங்கள் சூழ்ந்து சடசடவென கொட்டத்துவங்கிய பெருமழை தொடர்ந்து ஓய்வின்றி இரண்டு நாட்கள் நீடித்த நிகழ்வொன்றை எண்ணிப்பாற்கிறேன். அந்த பெருமழைக்கு கட்டுப்பட்டு அந்த மண்டபத்தின் மையப்பகுதியில் அடைந்திருந்த  மக்கள் திரள் இப்போதும் என் நினைவில் நிர்க்கிறது.
கடந்த ஒன்பது பத்து பதினொன்று தேதிகளில் சென்னை மயிலாப்பூர் ஏவியெம் இராஜேஸ்வரி திருமணஅரங்கில் சென்னை வாசிகள் அப்படியொரு நிகழ்வை பார்த்திருக்கக்கூடும். அன்றுதான் சென்னை கம்பன்கழகம் தனது  முப்பத்தொன்பதாவது ஆண்டு கம்பன்விழாவினை வண்ணமயமாக  கொண்டாடிற்று..  
இங்கே மக்கள்திரள் கட்டுண்டிருந்தது தொடர்ந்து பொழிந்த பெருமழையால் அல்ல. தொடர்ந்து பொழியப்பட்ட கம்பன்காதையின் கவிமழையால் என்பதுதான்.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்த திருமண அரங்கில்  ஒவ்வொரு நிகழ்வுகளிலும் குழுமியிருந்த மக்கள் கூட்டம் இருக்கைகளை நிறைத்து  இதிகாசத்திலும் இலக்கியத்திலும் நம்மிடையே ஈடுபாடு இன்னும்  வற்றிப்போய்விடவில்லை என்பதை உணர்த்தினார்கள். மூன்று நாட்களும் ஐம்பதுக்குமேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள்  பல்வேறு அரங்குகளில் கலந்துகொண்டு கம்பனின் காவியத்தை சாராக  பிழிந்த காட்சி  தமிழ் அன்பர்களை திணறச்செய்தது..  சொற்பொழிவுகள் , வழக்காடு மன்றங்கள் விவாத மேடைகள் என்று பல்வேறு இலக்கிய தாக்குதல்களை தமிழ் அன்பர்கள் இந்த மூன்று நாட்களில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது  . அரங்கில் உரை நிகழ்த்திய பெரும்பாலோர்  தங்கள் உரைகளில் நகைச்சுவையை நயமாக கலந்து விழா தொய்வின்றி நகர துணை நின்றார்கள்.

திருமண மண்டபத்தின்  நுழைவாயிலில் இருபுறமும் பல்வேறு அறிமுமான பதிப்பகங்கள் இலக்கியத்திலும் இதிகாசத்திலும் தங்களுக்கிருந்த ஈடுபாட்டை விற்பனைக்கு வைத்திருந்தனர்..

2013 ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை  கம்பன் கழக தலைவர் இரம வீரப்பன் வரவேற்புரை வாசிக்க தமிழறிஞர் அவ்வை நடராசன் தலைமையேற்றார். நேர்த்தியாக அமைக்கப்பெற்ற மாட்சிமை அரங்கில்  தமிழறிஞர் அவ்வை சண்முகம் விழாவைத்துவக்கியபோது சமயச்சொற்பொழிவாளர்  இளம்பிறை மணிமாறன் எழுதிய  புதிய சொற்பொழிவு நூலொன்றும்  புதியசொற்பொழிவு ஒலித்தகடுகள் இரண்டும்  அரங்கில் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு அறக்கட்டளைகள் வழங்கியிருந்த விருதுகளும் பரிசுகளும் , பதிநான்ங்குக்கு மேற்பட்ட சமயச்சொற்பொழிவாளர்கட்கும் சாதனை நிகழ்த்திய மொழிப் பேராசிரியர்கட்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டது. இறுதியில் இலங்கை ஜயராஜின் சிறப்புரையுடன் முதன்நாள் நிகழ்வுகள் முடிவுற்றது.

 இரண்டாம் நாள் சனிக்கிழமை ஆய்வரங்கில்  தனியுரை  , தகவுரை  என்ற வடிவில் சிறப்புரைகள்  பேசப்பட்டன. அதைத்தொடர்ந்து தெளிவுறு அரங்கில்  கம்பனை வினவும் காப்பியமாந்தர்  என்ற பொருளில்    அறிவொளி   தலைமையில் நான்குபேர் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து  மாணவர்அரங்கில்
பட்டிமண்டபம் ஒன்றுடன் காலை நிகழ்வுகள் முடிவுற்றது.
டி கே எஸ் கலைவாணன் இறைவணக்கம் பாட  மாலை நிகழ்வுகள் தொடங்கின. எல்லை ஒன்றின்மை .. என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் இன்னுரை வழங்க கம்ப நாடகத்தில் எவர் வாதம் பெரிதும் நம்மை ஈர்க்கிறது என்ற சு.ழலும் சொல்லரங்குடன்  நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை  பாங்கறி அரங்கில் ( பாங்கு அறிதல் என்று நினைக்கிறேன் ) கவிஞர் அப்துல் காதர்  தலைமையில் அரியணை அரசியல் என்ற பொருளில் கவியரங்கமும்  அடுத்து நிழ்ந்த தமிழ்ச்சோலையில் மு இராமச்சந்திரன் தலைமையில் சொல்லில் ஒளிரும் சுடர்  என்ற பொருளில்  நால்வர்

தேனாய் இனிப்பன                   திருமதி உலகநாயகி பழனி

தீயாய்ச்சுடுவன                           திருமதி பிரேமா குமார்

பழிகொண்டு சேர்ப்பன            திருமதி சுமதி

உறுநோய் தீர்ப்பன                    திரு கி சிவக்குமார்

ஆற்றிய உரைகளும் தலைவரின் நகைச்சுவை கலந்த பதில்களும் ஈர்த்தன.அடுத்து நிகழ்ந்த  அறிஞர் கண சிற்பேசனின்  கம்பனைப் போல்...என்ற எழிலுரை  அவையோரை நகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியது.     
அதனைத்தொடர்ந்து  உலகெலாம்.....என்ற சீர்காழி மைந்தனின் வெண்கலக்குரல் ஒலிக்க  கம்பன் வாழ்வியல் நெறிகளை பெரிதும் உணர்த்துவது... என்ற பொருளில் நாமறிந்த பட்டிமண்டப பேச்சாளர்கள்

நாட்டில் நிகழ்ந்தவையே ,

காட்டில் நிகழ்ந்தவையே ,

களத்தில் நிகழ்ந்தவையே ,

என்ற தலைப்புகளில் வாதிட்டனர்.

கம்பன் கழக செயலர் இலக்கியவீதி இனியவன் நன்றி நவில விழா முடிவுற்றது.

இந்த விழாவில் நான் நேசிக்கின்ற  மொழிஆற்றல் மிக்க பலரை கண்டேன்

.இந்த மூன்றுநாள் நிகழ்ச்சிகளை வடிவமைத்திருந்த சென்னை கம்பன் கழகத்தின்  செயல்திறன்  மெச்சத்தகுந்தது. இந்தமுறை கம்பன் விழா கம்பனில் வாழ்வியல் என்ற கருத்தினை மையமாகவைத்து மூன்று நாட்களுக்கான நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன  ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தேன் தமிழில் பெயரிட்டு தனித்தனியாக பிரித்த  பாங்கு பாராட்டுக்குறியது. ஒவ்வொரு அரங்கிற்கும் பொருத்தமான சித்திரங்களை பின்புலமாக அமைத்து ஆன்றோர்களுக்கு இருக்கைகள் தந்த காட்சி நேர்த்தியானது.

காலை நிகழ்வுகள் மதியம் முடிவுக்கு வந்தபோது செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்கு சிறிதல்ல ஒரு கல்யாண விருந்தையே படைத்துக்காட்டியது  சென்னை கம்பன் கழகம்
 இந்த விழாவினை திறன்பட வடிவமைத்து செயல்படுத்திய கம்பன் கழகத்தினர் மிகவும் பாராட்டுக்குறியவர். இந்த முப்பத்தொன்பதாவது கம்பன் விழாவை திட்டமிட்டபடி நடத்திட ஒரு குழு இருந்திருக்க வேண்டும் அந்த குழுவினரை அரங்கில் அறிமுகப்படுத்தியபோதும் நான் அறியமுடியாமற் போயிற்று. இருந்த போதும் இந்த விழா இனிது நிகழ பின்புலமாகத்திகழ்ந்த ஏவியெம் நிறுவனம் என் கண்களுக்கு புலப்பட்டது.
__________________________________________


வால்மீகியின் இராமகாவியமும் வியாசர் பெருமானின் மகாபாரதமும் இந்த நாட்டின் இருபெரும் இதிகாசங்களென போற்றப்படுபவை. தலைமுறை தலைமுறையாக செவிவழியாக சொல்லப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்ட கதை.  இந்த கதைகளை  எத்தனை முறை பேசப்பட்டாலும்   இந்த தேசத்து மக்களுக்கு சலிப்புறாத கதைகள். ஆழ்ந்து படிப்பவர்க்கு ஒவ்வொன்றும் ஒவ்வொருமுறையும் புதுப்புதுபொருள் தரும்  காவியம்.

நாடு விடுதலைக்குப்பிறகு இந்தியநாடு மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு மொழியும் தனித்தன்மையோடு சிறப்புடன் வளர்வதற்கு வழியேற்பட்டது. காலப்போக்கில் இராமகாதையையும் மகாபாரதத்தையும் தங்கள் தங்கள் மொழிகளோடு ஒவ்வொரு மாநிலங்களும் சேர்த்துக்கொண்டன. .
அச்சு ஊடகங்கள் வளர்ச்சியுற்றபோது  இராமயணத்துக்கும்  மகாபாரத்ததுக்கும் ஒவ்வொரு மொழியிலும் முதலிடங்கள் கிடைத்தன.

அதைப்போலவே சோழநாட்டில் பிறந்த கம்பர்பெருமான் வால்மீகியின் இராமகாதையை கதைநாயகன் இராமனை இறைவனின் அவதாரமாக மையப்படுத்தி இந்தமண்ணையும்   கலாச்சாரத்தையும்  கலந்து கம்பரமாயணத்தை படைத்தார்.


வெள்ளையர் காலத்தில் பொருளாதார ஏற்றதாழ்வுகளை  சீர்படுத்த தோன்றிய நீதிக்கட்சி  சில ஆண்டுகளிலேயே சாதிபேதமற்ற சமதர்ம சமுதாயம் படைப்போமென்று குரல் கொடுத்த திராவிடர் கழகத்தில் கரைந்தது.

ஜாதி , மதம் , கடவுள்   - இவை ஒவ்வொன்றும்    மற்றவையோடு பின்னிக்கிடக்கிறது. இதில் அடிப்படையான கடவுளை மறக்காமல் ஜாதியை ஒழிக்கமுடியாது என்று கருதிய பெரியார்   பிள்ளையாருக் கெதிராகவும் இராமனுக்கெதிராகவும் குரல் கொடுத்தார். கம்ப ராமாயணத்தில் இராமனை கடவுளாக படைத்ததால் காவியத்தில் ஏற்பட்ட நெருடல்களை திராவிட கழகத்தினர் விமர்சித்தனர்.

கம்பர்பாலும் அவர் படைத்த ராமகாதை மேலும் தீராத பற்று கொண்ட காரைக்குடியைச் சார்ந்த சா கணேசன்  கம்பரையும் இராமாயணத்தையும் மக்கள் நினைவில் நிறுத்த நினைத்தார். சா கணேசன் சுதந்திர வேள்வியில் தேசபிதாவின் அடிச்சுவடுகளில் நடந்து அலிகார் சிறையில் அடைக்கப்பட்டவர். அண்ணலைப் போலவே வாழ்நாளில் வேட்டியும் துண்டையும் மட்டுமே அணிந்தவர். பிதாவின் மறைவுக்குப்பிறகு மூதறிஞர் இராஜாஜியைப்பின் தொடர்ந்து அவரது சுதந்திரா கட்சியின் மாநிலங்கள் அவை உருப்பினரானவர்.

1939  ஏப்ரல் இரண்டு மூன்று தேதிகளில் ராஜாஜியின் முன்னிலையில்  ரசிகமணி டி கே சி யோடு இணைந்து கம்பர்பெருமான் மறைந்ததாக சொல்லப்படும் பாண்டிநாட்டு நாட்டரசன்கோட்டையில் அவர் நினைவிடத்தில் கம்பர் வழிபாட்டை முதன்முதலாகத்தொடங்கினார்   சா கணேசன்.
அடுத்த சில ஆண்டுகளில் தன் மணிவிழாவுக்கென வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயில் காரைக்குடியிலேயே மணிமண்டபம் ஏற்படுத்தி கம்பர் விழாவை தொடர்ந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மதுரை ,  திருநெல்வேலி ,  கோவை ,  சென்னை என்று பெருநகரங்களிலும் வேறுபல சிறுநகரங்களிலும் கம்பன் கழகம் தொடங்கப்பட்டது.  அன்று அவர் ஏற்றிய சுடர் கடந்த 72 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடியிலும்   முப்பத்தியொன்பதாவது ஆண்டாக சென்னையிலும்  ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

மொழியையும் இனத்தையும் மையப்படுத்தி திராவிடர் கழகத்திலிருந்து நகர்ந்த திமுக கம்பரின் நயத்தையும் பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழை தூக்கிப்பிடித்த சைவசமய புலவர்களின் திறனையும் என்றும் போற்றத்தவறியதில்லை சென்னையில் நிகழ்ந்த உலகத்தமிழ் மாநாட்டில் கம்பரசம் எழுதிய பேறறிஞர் அண்ணா  கம்பருக்கும் ஒரு சிலை அமைக்க  துணைநின்றார்  
இராமகாதையில் கம்பன் இராமனை ஒர் அவாதார புருஷனாக மையப்படுத்தியிருந்தாலும் கம்பனுக்காக எடுக்கப்பெறும் இவ்விழாக்கள் பெரும்பாலும் இராமாயணத்தின் கட்டமைப்பையும்  கம்பனின் கவித்திறனையும்  மெச்சுவதாகவே நடத்தப்படுகின்றன. கம்பன் சிருஷ்டித்த பாத்திரங்களின் பண்புகளையும் மொழியை வரிக்குவரி கையாண்ட நேர்த்தியையுமே  வியக்கத்தக்க அளவில் பேசுவதை கேட்டிருக்கிறேன். கம்பராமாயணத்தில் நகைச்சுவை மிகுந்த காட்சிகளை நான் படிக்க நேர்ந்ததில்லை. ஆனால் கம்பனுக்காக எடுக்கப்பெறும்  விழாக்களில் மற்ற சுவைகளைக்காட்டிலும் நகைச்சுவையே முன்னிலை வகிப்பதை உணர்கிறேன். இந்த பல்சுவைகள்  எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இராமகாதையில் வற்றாதவை.
__________________________________________________________


வில்லவன் கோதை
எனது பத்து சிறு கதைகளைக்கொண்ட  உயிர்வதை
என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் 13 05 2013 வெளிவந்திருக்கிறது. கீழ்கண்ட அமேசான் ( usa  , uk  ) ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது. படிக்க நேர்ந்தவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் மகிழ்வேன். நேர்த்தியாக அச்சிடப்பட்ட உயிர்வதை இந்திய ரூபாய் மதிப்பில்  விலை சற்று கூடுதலாக இருக்ககூடும். கூடுதல் தகவல் பெற கீழே உள்ள ஒன்று ,இரண்டு வரிகளை க்ளிக் செய்யவும்.

இனிய...
பாண்டியன்ஜி     pandiangee@gmail.com